வியாழன், 30 மே, 2019

பாரியை : சொல்லின் திறப்பொருள்.

பாரியை எனற்பால சொல்லை ஈண்டு கண்டு மகிழ்வோம்.

பெரும்பாலும் இல்லத்தில் தங்கி வீட்டுக் காரியங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்பவள் இல்லாள். அவள் தங்கி இருப்பது பெரிதும் அவள்தன் மனையில். அங்கு செய்தற்குரிய அனைத்தும் அவள் செய்கிறாள். ஆகவே
அவள் " மனைவி". கணவனின் இவ்வுலகச் செலவுக்கு ( பயணத்திற்கு) அவளே துணை ஆவாள். ஆதலின் அவள் "வாழ்க்கைத்துணை". இதைச் சுருக்கித் "துணைவி" என்றும் சொல்வர். இவ்வுலகத்தில் கணவனுக்கு வேண்டிய துணைமை அனைத்தும் தருபவள் ஆதலின் அவள் தாரம் ஆகிறாள். தரு+ அம் = தாரம். வாழை தரும் பழக்குலை "தார்". பிள்ளைப்பேறு தருபவள் ஆதலின் "தாரம்" எனப் பட்டாள் என்றும் கூறுவதுண்டு.

இவற்றுள் பலவும் வீடு என்னும் வட்டத்தின் குறுக்கத்தில் எழுந்த சொல்லமைப்புகளே. ஆனால் உலகில் அனைத்திலும் கணவனுடன் அவள் இணைந்தே பயணிக்கிறாள். பாரில் இயைந்திருப்பவள் ஆதலின் அவள் "பாரியை" ஆகிறாள். இது பாரியா, பாரியாள் என்றெல்லாம் ஆனமை உலகவழக்குத் திரிபுகள். இவற்றுள் பொருளொன்றும் சிறப்பு எய்திற்றிலது.

கருத்துகள் இல்லை: