சனி, 18 மே, 2019

ஆம்பலரி - சூரியனுக்கு இன்னொரு பெயர்.

சூரியனைக் கண்ட தாமரை மலர்கிறது. இதை நேரடியாகப் பார்த்திராவிட்டாலும் நூல்கள் வாயிலாக அறிந்திருக்கலாம்.   நகர வாழ்நர் பெரும்பாலும் தாமரைக் குளங்களை  ஆங்காங்கு கண்டிருந்தாலும் மலர்கின்ற காட்சியினைச் சென்று காண முனைவதில்லை.

சூடு தருவோன் சூரியன்.

சூடு > சூடியன் > சூரியன்  (  ட - ர திரிபு வகை).  இப்படித் திரிந்த இன்னொரு சொல் வேண்டுமானால்:

மடி >  மரி.

இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்.  மடிதல் என்பது சாதல் என்ற பொருளில் தன்வினை வடிவம் கொள்கிறது.  மடித்தல் என்ற பிறவினை வடிவோ  இப்பொருளுடன் எந்தத் தொடர்பும் இலாது நிற்கிறது.  சாகடித்தல் என்ற பொருள் இல்லை.  எனவே மடிதல் என்ற சொல்லுக்குச் சாதல் என்பது பிற்காலத்து எழுந்த பொருளாகும்.   புழு பூச்சி முதலியவை சாகும்போது இரண்டாக மடிந்து சாவதால் மடிதல் என்பதற்குச் சாதல் என்ற பொருள் ஏற்பட்டது. இதனைத் தமிழ் ஆசிரியர் கண்டு விளக்கியுள்ளனர். இதுவே உண்மையுமாகும். 

டகர ரகரத் திரிபு:

இதுபோன்ற திரிபினை நுணுக்கமாக நாடினால் பல வழிகளில் அறியலாம்.
" அடுத்தல் " என்பதும்   " அருகுதல் "   என்பதும் பொருள் தொடர்பு உடைய சொற்கள்.

அடு  :  அரு    ( ட - ர திரிபு காண்க ).

பல பேச்சுவழக்குச் சொற்கள் அயலில் புகுந்து உயர்வு பெற்றுள்ளமையால்
சூடியன் > சூரியன் என்பதும் அங்கனம் உயர்வுபெற்றதறிக. சூடு > சூடு இ அன் > சூட்டியன் என்று இரட்டிக்காமல் சூடியன் என்றே நின்று சூரியன் என்றானது. இரட்டிப்பது சொல்லாக்கத்தில் கட்டாயமில்லை:  எ-டு:  அறு+ அம் =  அறம்,  இரட்டிக்காமல் தருமம் முதலியன குறித்தது.  இரட்டித்துப் பொருள் வேறுபடும்.  அறு + அம் = அற்றம்,  தருணம்.

சூடு என்பது விகுதிகள் ஏற்குமுன் சூர் என்று திரிந்துவிட்டாலும் சூட்டியன்  என்ற வடிவத்துக்குக் காரணம் கூறல் தேவையில்லை.  சூடி >  சூரி எனினும் ஆம். அன் வந்தது பின்னரே.

சூரி =  பகலவன்.

 சூரியனை அவ்வாறு ஆண்பாலில் கூறுவது தமிழர் வழக்கு.  அதற்குப்  பால் ஒன்றும் இல்லை. சூடம் சூடன் என்பன வேறு பொருளுக்குப் பெயராய் இருப்பதால் அதற்கு நீங்கள் வேண்டுமானல் சூட்டன் என்ற இன்னொரு பெயரைக் கொடுத்து மகிழ்ந்துகொள்ளுங்கள். உண்மையில் உலகில் வெம்மைக்கு அதுவே காரணம்:  அது வெய்யோன்.  வெய்> வெயில்.  இதிலும் யகர் ஒற்று வரவில்லை.  ( இரட்டிக்கவில்லை).

இனி ஆம்பலரி.

தாமரை சூரியனால் மலர்கிறது.  ஆம்பலோ குவிகிறது.   அருகுதல் என்பது குவிதல் குறிக்கும்.  அரு > அருகு.  அரு + இ =  அரி  ( சுருக்கம் ).  இப்பொருள் அரு என்ற அடிச்சொல்லில் இருந்து கிடைக்கிறது.  இலைச் சோற்றுக்கும் வாய்க்கும் உள்ள இடைவெளி சுருங்கவே,   அரு > அருந்துதல் ஏற்படுகின்றதென்பதும் கவனிக்க.  வேறு வகையிலும் இதை விளக்கலாம் எனினும் தொடர்பு காண்க.

அரி என்பது சுருங்குதல் எனவே  இதைச் சுருக்குவது சூரியனே.  அவன் ஆம்பல் அரி ஆகிறான்.  இது சூரியற்கு இன்னொரு பெயர்.




கருத்துகள் இல்லை: