செவ்வாய், 21 மே, 2019

மொழிச்சிக்கல் : உண்டு என்ற வடிவம்.


தமிழ்மொழிச் சிக்கல்கள்

ஈ என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு.

இந்த வாக்கியத்தைப் படித்தீர்களே. இதில் உண்டு என்பது ஒரு தவறான சொற்பயன்பாடு என்பதை அறிந்தீர்களோ?

உண்டு என்றால் இது ஒருமைச் சொல். து என்னும் அஃறிணை ஒருமை தெரிவிக்கின்றது. பல பொருள் என்று பன்மையில் சொன்னபடியால் உள அல்லது உள்ளன என்றே முடித்திருக்கவேண்டும்.

உள்+ து = உண்டு.

உண்டு என்ற சொல்லைக் கற்றோரும் மற்றோரும் ஒருமை பன்மை என்று பகுத்துப் பார்க்காமல் பயன்படுத்தி மகிழ்வதால், இப்போது இவ்விலக்கண விதி வீழ்ச்சி உற்றது.

இலக்கணம் எத்தனையோ கூறுகிறது. எல்லாமும் ஒட்டிச்செல்கை உடையவாய் இல்லை. பல பின்பற்றுகிறோம். நாமறியாமலே பல வீழ்ந்துவிடுகின்றன. வீழ்ந்த விதிகளில் இதுவும் ஒன்று. உண்டு என்பது திணை பால் எண் இடம் என்ற வேறுபாடு இன்றி வழங்குகிறது.

அவன் உண்டு : ஆண்பாலில் வந்தது.
அவள் உண்டு: பெண்பாலில் வந்தது.
அது உண்டு : அஃறிணை ஒருமையில் வந்தது.
அவை உண்டு: அஃறிணைப் பன்மையில் வந்தது.
நீ உண்டு : முன்னிலையில் வந்தது.
நான் உண்டு: தன்மையில் வந்தது.

இன்னும் பொருந்துமிடத்தெல்லாம் பொருத்தி உணர்க.

உண்டு என்பதை சொற்படியே பார்த்தால் ஒருமையில் அஃறிணையில் மட்டும் வழங்கியிருத்தல் வேண்டும். அவ்விதி தவிடுபொடியாகி வெகுகாலம் ஆகிவிட்டதைச் சொல்லாய்வு மூலம் அறிஞர் உணர்ந்து உண்டு என்பதை வழுவமைதி என்று கொள்வர். ஒழிந்துபோன இலக்கண விதிகளை மீள்நிலைப் படுத்துவதில் பயனொன்றும் இலது.


கருத்துகள் இல்லை: