ஞாயிறு, 2 ஜூன், 2019

வயிறு என்னும் முதன்மைச் சொல்.

இன்று வயிறு என்ற தமிழ்ச் சொல் எவ்வாறு அமைந்தது என்ற கதையை அறிந்துகொள்வோம்.

நாம் பல சொல்லமைப்புகளையும் சில ஆண்டுகளாகவே ஒவ்வொன்றாக அறிந்துகொண்டுவருகிறோம். இவற்றையெல்லாம் ஒருசேர நோக்கி, இதிலிருந்து ஒரு தெரிவியலை ( தியரி - ஆங்கிலம் ) உருவாக்குவது எம் நோக்கமன்று. அத்தெரிவியல் அல்லது எத் தெரிவியலும் தானே முன்வந்துறுமாயின் சில வேளைகளில் யாம் அதனைக் குறிப்பிடுவதுண்டு. யாம் எழுதுவது சொல்லமைப்பை வெளிப்படுத்தவே ஆகும்.

வாயிலிருந்து தொடங்குகிற உணவு உட்கொள்ளும் வழியானது உடம்பின் உள்ளில் சென்று முடிகிறது அல்லது இறுகின்றது. இறு என்ற அடியினின்றே இறுதி என்ற சொல்லும் அமைகின்றது. ஆகவே இறுகின்றது என்ற வினைமுற்றை எளிதில் பொருளுணர்ந்து கொள்ளலாம்.

வாயிலிருந்து தொடங்கி உணவு செல்வழியானது குதத்தில் முடிவதாகச் சிலர் சொல்வதுண்டு எனினும் வயிறு என்ற சொல்லமைப்பில் இக்கருத்து கொள்ளப்படவில்லை. குதம் கழிவு வழியாதலின் போலும். குந்து > குது > குது + அம் = குதம். எனின் குந்தும் உடற்பகுதி.

வாய் தொடங்கி அது முடியும் இறுதியே வயிறு ஆகும். சொல் அமைந்தது இவ்வாறு:
வாய் + இறு = வாயிறு ( இங்கு முதல் குறுகி) > வயிறு ஆயிற்று. எனவே இது முதனிலை குறுகித் திரிந்த ஒரு சொல்லாக்க மாகும்.


இவ்வாறு திரிந்து அமைந்த சொற்கள் பல. உதாரணத்துக்கு:

சா + வு + அம் = சவம்
தோண்டு + = தொண்டை.

எனவே உணவு ஏற்கும் பகுதியின் இறுதியே வயிறு ஆகும்.

கருத்துகள் இல்லை: