கோவிலில் உள்ள தெய்வச்சிலைக்குக் கால் கை தலை எல்லாம் இருக்கின்றனவே, சிலவற்றுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் இருக்கின்றனவே இது எவ்வாறு என்று கேட்போருண்டு. கோவிலென்பதே ஒரு மனிதனுக்குத் தலை, உடம்பு, என்றெல்லாம் இருப்பதுபோலவே வடிவமைக்கப்பட்டதே ஆகும். அங்கிருக்கும் தெய்வச் சிலையும் மனிதனைப் பின்பற்றியே அமைக்கப்பட்டதே ஆகும். கைகள் இரண்டுக்கு மேல் இருத்தலானது சில கருத்துகளை எடுத்துச்சொல்ல அமைக்கப்பட்டனவே ஆமென்க. நான்கு திசைகள் உள்ளன. இதைச் சித்திரத்தாலோ சிற்பத்தினாலோ எடுத்துச் சொல்வதென்றால் கைகளையோ தலைகளையோ அமைத்துச் சொல்லலாம். இவ்வாறு சிந்தித்துத்தான் சிலைகளை அமைத்தனர்.சிலைகள் மனிதனால் அமைக்கப்பட்டவை; அவை கருத்துகளை வெளிக்கொணர்கின்றன.
இவற்றைத் திருமூல நாயனாரின் பாடல்கள் (திருமந்திரம் ) வாயிலாக அறிந்துகொள்ளலாம். இங்கு சன்னிதானம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.
கோவிலும் மனிதன் உடலமைப்பைப் போன்றது. கோவிலுள் புகுதல் மேற்கொள்கின்றபோது தன்னில் தான் புகுதல் செய்கின்றோம். கோவிற் சிலையும் தான் போலவே அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே தன்னில் தான் புகுதல் செய்கின்றோம். இவ்வாறு புகவே தன்னைத் தானறிந்து இறைவனைக் கண்டுபிடிக்கலாம்.
தன்னில் என்பது கடைக்குறைந்து ( அல்லது தொகுந்து ) சன்னி என்று வரும். தகரத்துக்குச் சகரம் போலி. அதாவது த என்பது ச ஆக மாறும். ல் என்ற இறுதிமெய் கெடும் அல்லது ஒழியும். ஆகவே தன்னில் > சன்னி.
அடுத்த சொல் தான் என்பது. இது திரியவில்லை. அமைதல் என்ற பொருள் உடைய அம் விகுதி பெறும். அப்போது தானம் என்று வரும். இரண்டையும் கூட்ட.
தன்னில் தான் அமைதல் > தன்னி + தான் + அம் > சன்னிதானம் ஆயிற்று.
இது வெறும் எழுத்துப்போலிகளாலும் எழுத்துக் குறைவுகளாலும் ஆன பதமே.
பொருள் பதிந்தது பதம். பதி (தல்) > ( இகரம் கெட்டு) பத்+ அம் = பதம். த் + அ = த.
தன்னில் திரு > சன்னி(ல்) + தி (ரு) > சன்னிதி என்றுமாகும். பொருள் அதுவே
இங்கு தி என்பது விகுதி. அது விகுதியாகவும் வந்து திரு என்பதையும் குறிப்பால் உணர்த்தியது,
இந்தத் திரிபுகட்கு இதை நினைவில் கொள்ளுங்கள்: அப்பன் > அத்தன் > அச்சன். எழுத்துகள் மாறினும் பொருள் அதுவே/
கோவிலில் தன்னைப் போல அமைந்த சிலையின்முன் தான் அமையும் இடமே சன்னிதானம், இறைவன் திருமுன்.
தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் கவனம்பெறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக