வெள்ளி, 23 அக்டோபர், 2020

விமல - சிறந்த மலர்.

 இப்போது தமிழ்மொழியானது பொருளுரை பகர்வதில் எவ்வாறு சிறப்புடைக் கருவியாகிறது என்பதைச் சிந்தித்து உணர்வோம். இதனைச் சில எடுத்துக்காட்டுகளின் மூலமே விளக்கமுடியும். 

மனிதன் இப்புவியில் வாழுங்காலம் வரை எதனாலும் மாசுபட்டுவிடாமல் எதுவந்து தன்னைப் புடைத்து இறுக்கியபோதும் அதிற்பட்டுத் திறமிழந்து மாய்ந்து விடாமல் தப்பிப் பிழைக்கும் தந்திரம் அறிந்து வாழவேண்டும். அவனை நோக்கி வருவன வெல்லாம் வெள்ளித் தட்டில் கவருமாறு வைக்கப்பட்டு வருவதில்லை. நடந்து போகும்போது வழியில் உள்ள மேடுபள்ளங்களுக்கு ஓர் அளவில்லை. தப்பவேண்டும் இடறாமல் தாண்டவேண்டும்.  எதிர்வரும் தடையானது தூண்போலும் இருக்கலாம். நெளிந்தோடும் நதிபோலும் இருக்கலாம். தப்புதல் தந்திரம் (தம்/தன்) திறம்).1  தப்புவதற்கு மனிதர் அறிந்த வழிகளிலொன்று தவம் மேற்கொள்வது.  அதாவது மனவலிமையால், உள்வலிமையையும் வெளிவலிமையையும் கொண்டு தப்புவதே தவம்.2  தப்பு> ( இதை இடைக்குறைத்து ) தபு >  ( இதை வினைச்சொல் ஆக்கினால்) > தபு(தல்) > ( இந்த தபு(வுடன் அம் என்ற தொழிற்பெயர் விகுதி இணைத்தால்)   தபு+ அம் > தபம்,  (பகரம் வகரமாகும் திரிபை அச்சொல்லினுள் உய்த்தால் அது ) > தவம் ஆகிறது.

இதற்கு அறிஞர் ஓர் எடுத்துக்காட்டு உரைப்பதுண்டு.  அவ்வுதாரணம்,  தாமரை மலர்.  தண்ணீருக்கு மேலிருந்துகொள்ளும்,  அதில் மூழ்குவதில்லை. தண்ணீர் அதன்மேல் துளிகளாய்க் குதித்தேறி விழுந்தாலும் தானே வழிந்தோடிவிடும். " தாமரை மேல்,  தண்ணீர்த்துளி போல், தாரணி வாழ்வினில் மேன்மை கொள்" என்று கூறுவர்.

தாமரை தண்ணீரில் அதன்  மட்டத்திற்குத் தாழ்ந்திருக்கிறது.    (தா).   

தண்ணீரை மருவிக்கொண்டும் நிற்கிறது.    ( மரு  ).

மருவுதல் என்றால் மிகுந்த நெருக்கமுடன் இருத்தல்.   (  மரு > மருவு > மருவுதல்).

இந்த இலக்கிலிருந்து தாமரை என்ற சொல் எழுந்தது.

தா+ மரு + ஐ.

அ என்பது அங்கு என்று பொருள்படும் சுட்டுச்சொல்.

அங்கு அதற்குமேல் செல்லாமையைக் குறிக்க ஏற்பட்ட நிறுத்தமே யகர ஒற்று.

அ + ய் = ஐ ஆனது.  இவ்வாறு ஒரு எழுத்துமுற்று வைக்கப்பட்டு, ஐ விகுதியாய் நின்றது.   மிகுந்து நிற்பதே விகுதி.  மிகுதி > விகுதி.  மி-வி திரிபு. இன்னோர் எடுத்துக்காட்டு:  மிஞ்சு > விஞ்சு.  ஐ விகுதியின் திறத்தை இவ்வாறு உணர்ந்துகொள்ளலாம்.

தாமரை என்ற சொல்லும் மேற்சொன்ன கருத்தையே உள்ளடக்கி அணிபெறுகிறது.

தாமரைக்கு இன்னொரு சொல் கண்டனர். அதன் கருத்தும் மேற்சொன்னவாறே சென்றது. அச்சொல்தான் கழுமலர் என்பது.  தண்ணீரால் அடிக்கடி கழுவப்படும் மலர்தான் கழுமலர்.  இதனை அழகுறுத்த, சில எழுத்துக்களைக் குறைத்தனர்.   கழுமலர் >  கமல ஆனது.   ழுகரமும் ரகர ஒற்றும் வெட்டுண்டு,  இடைக்குறையும் கடைக்குறையும் ஒருசேர நின்றமை காண்க.  இதை விகுதியேற்றி அழகுசெய்து  " கமல + அம்"  >  கமலம் என்றனர். இச்சொல்லைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு எழுத்துக்களைச் சிரைத்துத் தள்ளுவது சிலருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அவர்களை மனநிறைவுறுத்த வேறுவழிகளைக் கையாண்டனர்.

விழுமிய மலரே விழுமலர்.  விழுமிய என்றால் சிறந்த என்று பொருள்.  இது:

விழு+ மலர் >  வி + மல >  விமலம் ஆயிற்று. இச்சொல்லும் நன்கு உலாக்கொண்டது.  மலர்  அழகியது.  விமலம் என்பது  சிறந்த அழகு என்ற பொருட்பெறுமானம் உற்றது. இறைவன் விமலன் என்று சுட்டப்பெற்றான். 

தாமே புழக்கத்தால் திரிந்த சொற்களும் புலவர்களால் விரைவுறுத்தித் திரிக்கப்பட்ட சொற்களும் என இத்தகு சொற்கள் இருவகையான திரிசொற்களாயின. கழுமலர் என்பது இயற்சொல்.  கமலம் என்பது திரிசொல்.

இவ்வாறே அறிக மகிழ்க.


குறிப்புகள்

1 தன்+திறம் >  தந்திரம். சொல்லாக்கப் புணர்வில் தன்றிறம் என்னாமல் தந்திரம் என்றே வரும்.   எ-டு:  முன்+தி >  முந்தி.  தம் திறம் > தந்திரம் எனினும் ஆகும். இது அறிஞர் பிறர் சுட்டியதே.

2 மனவலிமை, உள்வலிமையை இயக்கவும் தேவைப்படுகிறது. வெளிவலிமையை இயக்கவும் தேவைப்படுகிறது.  உள்வலிமை என்பதில் உடல்வலிமை ஒரு பகுதி; மனவலிமையே  இன்னொரு பகுதியாகவும் உள்ளது. மற்றவெல்லாம் வெளிவலிமை. அதைத் துணைக்கழைக்கவும் தன் மனவலிமை தேவைப்படுகிறது.


மெய்ப்பு - பின்னர்




கருத்துகள் இல்லை: