திங்கள், 26 அக்டோபர், 2020

பார்வதி

 

 [அப்போதுதான் சிறுசிறு சொற்களையும் குறுகிற வாக்கியங்களையும் ஒலித்துத் தன் எண்ணங்களையும் அடுத்து நின்றவனிடம் அறிவிக்கக் கற்றுக்கொண்டிருந்த தொல்பழங்காலம் அது.  " அந்தப் பொருள் எங்கே" என்று கேட்ட அடுத்தவனுக்கு அவன் "தோ" என்று கூவி அறிவித்தான். நீ தேடிக்கொண்டிருப்பது இங்கேதான் இருக்கிறது பார் --  என்ற விடையும் அந்தத் தோவிலேயே அடங்கியிருந்தது. த், ( இது ) , துதூ, தே என்றெல்லாம் ஒலித்து அவன் தன் கருத்தை அறிவித்தான். மொழி என்பதே ஒரு கருத்தறிவிப்புக் கலைதான். அது ஒரு கால் சீய்ப்பிலிருந்து ஒரு பெரிய எழுத்துக்கலையே தோன்றி வளர்ந்துள்ளது போன்றதே.]


ஒலிகள் போலுமே எழுத்துக்களும் வளர்ந்தன .காலை ஓரிடத்து அதன் பெருவிரல் பட நாட்டி, பின்னோக்கிக் மணலில் இழுத்தால் ஒரு கோடு உண்டாகிவிடுகிறது. இது இழுத்து உண்டானது. இதிலிருந்துதான் எழுத்து என்ற சொல் உண்டானதென்று கூறுவர். இதை நல்லபடி பலுக்க அறியாதவர் இழு என்பதற்குப் பதிலாக இலு என்றனர். இலு பின் இலக்கு என்று வளர்ந்தது. இலு + கு = இலுக்கு.> இலக்கு. பின்னர் இலக்கு > இலக்கித்தல். இதன் பொருளும் எழுதுதல் என்பதே. எழுது > எழுத்து ; இழு> இலு > இலக்கு என்பவெல்லாம் தமிழில் உருவான சொற்களே. அவற்றின் தொடர்பு இவ்விளக்கத்தில் தெளிவாகிறது.


தொல்பழங்காலத்து மனிதன், த் என்ற மெய்யொலிப்பினால் இது பொருள் என்பதை அறிவித்தனன், இப்பொருள் என்முன் உள்ளது எனல் அறிவிக்க விழைந்து து+ = து என்றான். இங்கு உ என்பது என்முன் உள்ளது என்ற கருத்தே ஆகும். உ என்பது சீனமொழியில்கூட முன் உள்ளது என்றே பொருள்தருகிறது. இங்குதான் உள்ளது என்பதைக் குறிக்க, + து = இது என்றான். இதுவென்பது இ, உ என்ற இரண்டு சுட்டு எழுத்துக்களும் உருவிலான பொருள்குறித்த த் என்ற மெய்யும் ஒலியும் கலந்த ஒரு சொல்லே ஆகும்.. அப்பொருள் அங்கிருக்கிறது என்பதை அறிவிக்க, + து = அது என்றான். இந்தச் சொல்லில் அ ( அங்கு), ( இங்கு), த் ( பொருள்) என்ற மூன்று கருத்துக்கள் அடங்கி உள்ளன. த் என்பது உருவுடைப் பொருள் குறித்தது என்பது முன் விளக்கப்பட்டது . எழுத்துக்கலை வளர்ந்தது போலவே ஒலிக்கலையும் படிப்படியாக வளர்ந்த பரிமாணம் கண்டது. பரிந்து மாணுதல் என்பதுதான் பரிமாணம். பரிதலாவது வெளிப்படுதல். மாணுதல் என்பது அது பொருளால் உருவால் சிறத்தலாம். காற்றுப் பரிகிறது என்றால் காற்று வெளிப்படுகிறது என்பதே. மாண்> மாணுதல், மாண் > மாண்பு என்ற வழக்குகள் அறிக.

அது, இது உது என்பனவும் த் து முதலியவும் சொல்லமைப்பின் மிகப்பெரிய உயரிய தாக்கத்தை விளைத்துள்ளன. இவை அடிப்படைச் சொற்களாகும் என்பதறிக.


பர் என்பது ஓர் அடிச்சொல். பருத்தல் என்பது முன்னுள்ள இடம்வரை சென்று நிற்பதைக் குறித்தல், இதன் காரணம் பர் + உ என்ற இரு கருத்துக்கள் அச்சொல்லில் அடங்கி இருப்பதே. பர (பரத்தல் ) என்ற சொல்லில் இங்கிருந்து அங்குவரை சென்று நீளல் என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. பர் என்ற அடிச்சொல்லும் அ ( அங்கு) என்ற செல்லுதல்- சேர்தல் குறிக்கும் சொல்லும் கலந்துள்ளன. பர்+ = பரி (பரிதல் ) என்பதில் வெளிப்பட்டு இங்கு அல்லது இவ்வெல்லையுடன் நின்றுவிடுதல் என்பது குறிக்கப்படுகிறது. பர் என்பது வேறன்று,  ப, பல், பர் என்பன தொடர்புடைய கருத்தினடிகள். பலகை என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் பல், , கை என்ற சொல்-இயை கருத்துகள் உள்ளன. பல் என்பது பொருளின் நீட்சிக் கருத்து. அங்குவரை என்பதைச் சொல்ல அ வந்தது. கை என்பது கு+. கு என்பது சேர்விட எல்லையையும் ஐ என்பது அவ்விடத்து முற்றுப்பெறுதலையும் குறிக்கிறது. ஐ என்பது முடிபு காட்டுதலின் விகுதியுமாகும். Something flat and extending and ending there என்ற பொருள் தெளிவாய் உள்ளது. இது ஒரு கோட்டியல் விரிவு என்பது தெளிவு. (linear extension). , பல், பர் என்ற அடிச்சொற்களை மீண்டும் கவனித்து இக்கருத்துக்களை நன்கு உணர்ந்துகொள்ளலாம். லகரம் ரகரமாய்த் திரியும். ஆகவே பர் -பல் தொடர்பு காண்க. ப என்பது பல் அல்லது பர் அல்லது இரண்டன் கடைக்குறை ஆகும். பை என்ற சொல்லிலும் இவ்வாறு உறைபொருள் காணலாம். - பட்டைவடிவிலானது; ஐ அல்லது அய்: அங்கு சென்று அல்லது நீண்டுசெல்லாமல் முற்றுறுதல். வேறுபொருள் புகுத்தினாலன்றி பட்டைவடிவில் மிக நீண்டு  செல்லுதல் இல்லாத ஒரு பொருள்.


பரு என்ற அடிச்சொல் அது என்னும் இடைநிலை பெற்று அம் என்று விகுதியும் பெற்று முடியும், அதுவே பரு+அது+ அம் = பருவதம் என்னும் சொல். இது மலையைக் குறிக்கும். சொல்லமைப்புப் பொருள், பருத்ததென்பதே மலையென்னும் சொல்லுக்கும் பார்ப்பதற்கு மலைக்க வைப்பது, ஆகவே பரியது என்பதே பொருளாகும். இவ்வடிச்சொல் ( பரு ) பார் என்றும் திரியும். இவ்வாறு: பருவதம் > (பருவதி ) > பார்வதி என்று. வ்+ அது என்பன வதி என்று திரிதல் காண்க. பர என்ற சொல்லும் பார் என்றே திரியும். இது பரத்தற் கருத்துடைய சொல் இவ்வாறு இரண்டும் பார் என்ற வடிவினையே தம் திரிபில் கொள்ளினும், இம்மயக்கினால் தெளிவு தொலைந்துவிடாத தன்மையைத் தமிழ்மொழி பெற்றுள்ளது.


பரு> பார் > பார்வதி,

பர > பார் > பாரி ( வள்ளல் பாரி, உலகிதன்பால் பரந்த அன்பும் அருளும் உடையோன் என்பது பொருள்)


என்றவாறு அறிக.


, , உ என்னும் சுட்டுகள் சொல்லின் தொடக்கத்தில் வந்து சொல்லமையும். சொல்லின் இறுதியில் நின்றும் சொல்லமையும்.


பர > பரத்தல். பர என்ற அடியில் அகரம் இறுதியில் நின்று சொல்லமைந்தது காண்க.

ஆழி : இச்சொல்லின் இறுதியில் இகரம் ( சுட்டு) நின்று சொல் அமைந்ததும் காண்க.


இனி இது என்பது இடைநிலையாய் நின்று அமைந்த சொல்:


கணித்தல் - வினைச்சொல்;

கணி + இது + அம் = கணிதம். இங்கு ஓர் இகரமும் ஓர் உகரமும் கெட்டு ( மறைந்து) சொல்லமைந்தவாறு கண்டுகொள்க.

கணி + + கு = கணக்கு. அங்கு இங்கு என்பதில் வந்த அதே குகரம், உருபாகவும் வருவதுடைய அதே குகரம் இங்கு விகுதியாய் வந்தது. அகரச் சுட்டு இங்கு இடைநிலையாய் வந்தது

கணக்கு என்ற சொல்லில் இடைநிலை, கணிதம் எனற்பாலது நோக்க வேறு ஆயிற்று..


அறியவே, தொல்பழங்காலத்துச் சொற்களின் இயைவுகளை அறிந்து விளக்கம் கொள்க.


மெய்ப்பு: பின்,

மெய்ப்புக்கு முன் வாசிப்போர் தட்டச்சுப் பிறழ்வுகளைத்

திருத்தி வாசித்துக்கொள்க. பின்னூட்டமும் இடலாம். நன்றி.

அழிந்துவிட்ட இடுகையின் மீட்டுருவாக்கம் இது.




கருத்துகள் இல்லை: