ஆயிற்று போயிற்று என்ற இலக்கியத் தமிழ் வடிவங்களைச் சிற்றூர் மக்கள் ஆச்சு, போச்சு என்று பேசி வருகின்றனர். சிற்றூர்களில் நடைபெற்ற கூத்துகள் நாடகங்கள் முதலியவை, அவர்கள் போற்றும் மொழிவடிவத்திலே அவர்களைச் சென்றடைய வேண்டுமாதலின், ஆச்சு போச்சு என்ற முற்றுக்களைப் பயன்படுத்தி நாடக உரையாட்டுகளையும் கவிதைகளையும் புனைந்தனர்.
"திலகன் ஒருவனாலே இப்படி ஆயிற்று" என்று வாக்கியம் புனைந்தால், சிற்றுர் வாழ்நருக்கு எதோ இன்னொரு மொழியில் பேசுவது போல் தெரியும், ------ அதை அவர்கள் புரிந்துகொள்ள முடிந்தாலும் கூட. சிற்றூர்ப் பாட்டுகளுக்கு ஆச்சு என்பதுபோலும் வடிவங்கள், பாட்டு வரிகளுக்குள் புகுந்து நன்கு படிந்துகொள்ளும் வசதியுடையவை.
"இன்னும் ஐயுறுதலும் ஆமோ?" என்பது இலக்கிய நடை. " இன்னமும் சந்தேகப் படலாமோ? " என்பது சிற்றூரார்க்கு அவர்கள் வீட்டுமொழி யாகும். சந்தேகம் என்ற சொல் இங்கு விளக்கப்பட்டுள்ளது.
https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_9.html
இதற்கு முன்னும் அது இவ்வாறே விளக்கப்பட்டது. நம்முடன் இணையவழி உரையாடியோர் மறவார். " இன்னமும் பாரா முகம் ஏனம்மா" என்ற பற்றுப்பாடல் ஒரு திரையில் ஒலித்தது. " இன்னமும்" என்பது சிற்றூரார் வழங்குவது.
ஆச்சரியம் என்ற சொல்லுக்கு யாம் இலக்கணமுறையிலான சொல்லமைப்பைக் கூறியுள்ளோம். அது இரண்டு மூன்று இடுகைகளின் முன் பதிவு கண்டது. இனி இங்குச் சிற்றூர் வழக்குச் சொல்லைப் போட்டு அதன் சொற்புனைவை விளக்குவோம்.
எப்போதும் நடவாத ஒரு நிகழ்வு நடைபெறுமானால் அதைத் தான் ஆச்சரியம் என்று கூறுகிறோம்.
தலைகீழாக மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த ஒருவன், தன் கால் கட்டுக்களை அவிழ்த்துக்கொண்டு, மண்டை தரையில் இடிக்குமாறு விழுந்து, ஒரு வலியும் காயமும் இன்றித் தப்பி, நன்றாக இருக்கிறான் என்றால் இதைக் கேட்டவருக்கு இது "ஆச்சரிய"மாக இருக்கலாம். இஃது ஓர் அரிய நிகழ்ச்சி அன்றோ?
அது ஒரு நடைபெற்ற நிகழ்ச்சி. ஆகவே அது " ஆச்சு". அது அரியது. ஆகவே ஆச்சு + அரி. அப்படி அமைந்துவிட்டது. அதனால் அம் விகுதி. எல்லாம் சேர்த்தால்
ஆச்சு + அரி + அம்
=ஆச்சரியம் " ஆகிறது.
" ஆச்சரியம்! அப்படியா! ஒரு காயமும் இல்லையா!" என்று வியப்பர் மக்கள்.
ஆகவே, இச்சொல், ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் அமைந்திட இடந்தருவதாகும்.
பழங்காலத்தில் இத்தகைய சொற்களை வைத்துச் சிலேடைக் கவிகள் புனைந்து புகழ்ப்பெற்ற கவிகளும் இருந்தனர். ஒன்றுக்கு மேற்பட்டதைச் சில என்று குறிப்போம். ஒரே வழியிற் கொள்ளாமல், சில வழிகளில் புனைவு தெரிக்கும் சொற்கள் " இருபிறப்பி" என்று குறிக்கிறோம். ஆச்சரியம் என்பதும் அத்தகைத்தாகும்.
ஆச்சு போச்சு என்ற சொற்கள் இப்போது இலக்கிய வழக்கும் உடையன. ஆகவே அதைச் சிற்றூர் வழக்கு என்போர், " முன் சிற்றூர் வழக்கினதான, இன்று இலக்கிய வழக்குடையதாக வளர்ந்துவிட்ட " என்ற அடைமொழிகளுடனேதாம் சொல்லவேண்டும். இன்றேல், குறிப்புரை தவறாம் தன்மை உடையதாகிவிடும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக