செவ்வாய், 22 மார்ச், 2022

அழகும் அழகின்மையும்


 

அழகற்ற பொருள்மேலோர் ஒளிசென்றி ணைந்தால்

அதுதானும் அழகொன்று பெறலாகும் மிளிரும்;

அழகுள்ள பொருளென்னில் அழகோடும் அழகே,

அதுமகுடம் மேலொன்று மகுடம்தான் ஐயம்

இழையாது மயக்கற்ற தலைதன்னில் கண்டாய்.

இதுவழகே இதுவன்றே எனச்சொல்வ தெல்லாம்

பிழையென்று சொல்வார்தம் கருத்தன்றிக்  காணும்

பின்னொன்றே இல்லென்றே கொள்வாரே தம்பீ


இது எண்சீர் விருத்தம். பொருள் வருமாறு:

அழகற்ற பொருள்மேலோர்  ஒளிசென்றி ணைந்தால்  --   ஆழகில்லாத பொருள் ஒன்றின் மேல், ஒளிசென்று விழும்போது,

அதுதானும் அழகொன்று பெறலாகும்  -  அவ்வழகு குன்றிய பொருள் அழகைப் பெற்றுவிடுகிறது;  மிளிரும்; --- அதுவும் ஒளிவீசத் தொடங்கிவிடுகிறது.

அழகுள்ள பொருளென்னில்  - அழகான பொருள்மேல் ஒளி சென்று படியுங்கால், அழகோடும் அழகே,  --  அங்கு அழகோடு அழகு சேர்ந்து மிகுந்த அழகு உண்டாகிறது;

அதுமகுடம் மேலொன்று மகுடம்தான் ---  இவ்வாறு அழகுடன் அழகு இணைவது ஒரு மகுடத்தின்மேல் இன்னொரு மகுடம் வைத்தது போன்றது;  ( இரண்டடுக்கு மகுடம்.)

ஐயம் இழையாது =  சந்தேகம் ஏற்படா நிலையில்; 

மயக்கற்ற தலைதன்னில்---  தலை மயக்கம் இல்லாமல்  

கண்டாய். -இதைக் கண்டுகொள்வாய்; (ஐயமும் அஃது இன்மையும் தலைக்குள் உள்ள மூளையில் உண்டாவதால். "தலை தன்னில்" எனப்பட்டது.)

இதுவழகே இதுவன்றே எனச்சொல்வ தெல்லாம்--  இதுதான் அழகு,  இது அழகல்ல (அழகன்று)  என்று சொல்வதெல்லாம்; 

பிழையென்று சொல்வார்---  ஒருவிதப் பிழை என்று கூறுவாரும் உளர்; தம் கருத்தன்றிக்  காணும்

பின்னொன்றே இல்லென்றே கொள்வாரே --  ஒருவரின் அபிப்பிராயம் என்ற முடிபும் உள்ளது, 

தம்பீ  - விளி.

படத்தில் அழகற்ற பொருள்கள் என்று கருதப்படுபவை விளக்கொளியில் மின்னுகின்றன,

அறிக மகிழ்க.

மெய்ப்பில் பிழை காணப்படவில்லை.  எனினும்
மீள்பார்வை செய்யப்படும்.



கருத்துகள் இல்லை: