செவ்வாய், 8 மார்ச், 2022

பிறர் என்ன நினைப்பர் என்ற கவலை

 எனைப்பிறர் நினைப்ப தென்ன

என்பதே நினைத்தி  ருந்தால்

முனைப்பொடு செயல்கள் ஆற்றும்

எழுச்சியும் தோன்றல்  ஏது?

மனைப்படு ஞமலி  தானும்

தனக்குறு எண்ணம் ஏற்று,

வினைகடன் ஆற்றும் காணீர்

வீட்டினர் மகிழ்ந்து போற்ற.


தன்கடன் ஆற்றும் நாளில்

பின்னுள மக்கள் கூட்டம்

என்சொலும் என்று எண்ணி

எழுசெயல் தயங்க லாகா

பொன்வழி என்றும் செல்க

பூவென மலரும் ஆற்றல்

பின்முனும் பார்த்து நீங்கள்

பேதலித் திருத்தல் வேண்டா.


ஒரு நாட்டின் தலைவரை எழுத்தாளர்கள் கேட்டஞான்று

அவர் பிறர் என்ன கூறுவர் என்ற எண்ணம் தமக்கில்லை 

என்று கூறியது சரியான பதிலானது கண்டு இக்கவி எழுந்தது.

நாய் என்றும் நன்றியுடனே செயலாற்றிக்கொண்டிருக்கும்.


அருஞ்சொற்பொருள்

எனை - என்னை,

முனைப்பொடு - முன்சென்று எதையும் செய்யும் ஆற்றலோடு

எழுச்சி -  தோன்றும் காரியங்களின் மேல் உண்டாகும் ஆர்வம்

மனைப்படு ஞமலி - வீட்டின் நாய்

தனக்குறு எண்ணம் -  தனக்குத் தோன்றியவாறு

வினைக்கடன் -  செய்யும் கடமை

என் சொலும் - என்ன சொல்வார்கள்

எழு செயல் - செய்ய வேண்டிய காரியங்கள்

தயங்கலாகா -   தயங்கலாகாது

பொன்வழி -  போற்றத்தக்க வழி

பூவென - நன்றாக

பின் முனும் - முன்னும் பின்னும்


இங்குள்ள செய்தியையும் சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள். இங்கும் ஒரு கருத்து உள்ளது:-

https://youtu.be/FSkdeXupjVc


பாடி மகிழ்க

மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை: