என்னிடம் வந்து இனிதாய் விளையாடச்
சின்னஞ் சிறுகுட்டி இங்குவந்து ---- முன்பாயும்,
யான்காத் திருக்கின்றேன் என்மேல் அதுதாவி
தான்மகிழ் வைரவன் காண்.
வாஞ்சையுடன் வாசற்குக் குக்கலிது வந்ததும்
ஊஞ்சலில் ஆடலை மிஞ்சிவிடும் ---- காஞ்சுகி
வெண்மை உடுத்து விளைக்குமே காவலுக்கு
வண்மையாய் என்செய்வேன் யான்.
இது சற்றுநேரத்தில் இங்கு வரவிருக்கும் நாய்க்குட்டிக்காக காத்திருக்கையில்காத்திருக்கும் பெரியவருக்காக யான் பாடிய இருவெண்பாக்கள். இவற்றைப் படித்து நோட்டம் செய்து பின்னூட்டம் செய்யுங்கள். செப்பலோசை மற்றும் சொற்பயன்பாடு இன்னும் உங்கள் கற்பனையில் ஊறும் எதையும் தொட்டு எழுதுங்கள். காத்திருக்கும் முதியவர் படம் கீழே.இச்செய்யுள்கள் காண் என்றும் யான் என்றும் நாள் என்ற வாய்பாட்டில் முடிந்தன. வாஞ்சையுடன் - இங்கு ஐகாரக் குறுக்கம். வாஞ்-சயு-டன் என்பதுபோல் சை என்பது ச என்று குறுகிற்று. இதனால் கூவிளங்காய்ச் சீரானது.
வாரம் ஒருமுறை இந்த நாய்க்குட்டி வந்துவிடும். இல்லாவிட்டால் உறங்காமல்கத்திக்கொண்டிருக்கும். தொலைவிலிருக்கும் முதியவருடன் நேசம். இந்த நாயின் எசமானியும் பையனும் கொண்டுவந்துவிடுவார்கள்.
காஞ்சுகி வெண்மை - வெண்மயிர் போர்த்த உடலுடைய ( நாய்க்குட்டி )
காஞ்சுகி - மேற்சட்டை.
விளைக்கும் காவல் - காவல் காக்கும் செயல்.
வண்மையாய் - கொடையாய் அளித்தலைக் குறிக்கிறது.
அது தரும் காவலுக்கு என்ன கைம்மாறு என்றவாறு.
குக்கல் - ( சிறு ) நாய்க்குட்டி.
வைரவன் - நாய்க் குட்டிக்கு உயர்வான பெயர்.
குறுக்கல் என்ற சொல் குக்கல் என்று குறுகிற்று. சின்ன நாய் என்பது பொருள்.
நாளடைவில் இக் குறுமைப் பொருள் மறைந்தது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக