[செடி, இலை, வேலி இவைகளும் ஆடும் இந்த புதுக்கவிதை நாடகத்தில்
நடிக்கின்றன. இலை - உக்கிரேன்; அது முளைத்த இடத்தைச் செடி என்றேன்,
ஆடு- இரசியா? இந்த வருணனை சரியா? எனக்குத் தெரியவில்லை. வேலி -
உலகின் பாதுகாப்புத் தரும் நாடுகள். புதுக்கவிதை ஆதலால், எதுகை
மோனைகள் குறைந்தன. நான் புதுக்கவிதை எழுதியது குறைவுதான்.
நன்றாய் இருந்தால் நுகர்ந்து மகிழ்க. சரியில்லை என்றால் பின்னூட்டம்
செய்க. முளைத்த இடம் ருசியாவின் பக்கம். ஆதலால் ருசியாதான் செடி
என்கிறீர்களா. அப்படியானால் ஆடு - நேட்டோ நாடுகளா? எது சரி?]
மோனைகள் கொஞ்சமே.
அந்தச் செடியில் முளைத்துள்ளேன்,
அதிலுள்ள இலை நான்.
என்றன் இடம்நோக்கி வருகிறதே,
அறிந்தேன் அது ஓர் ஆடு.
என்னை மென்று விழுங்கிவிடும்,
பின்னே நான் இங்கில்லை.
தனியாய் இயங்கும் எனது சுதந்திரம்
பறிபோகுமே, பறிபோகுமே!
நடந்து போகையில் உங்கள் கண்முன்
கிடந்து ஆடும் இலைநான்
என்னை நீங்கள் காப்பாற்றுங்கள்! என்னை
நீங்கள் காப்பாற்றுங்கள்.
இன்னொரு பிற அணி வயிற்றினில் கரைந்து
காணாமல் போகும் நாள் வந்ததோ.
தனிமை வாழ்வு, இனிமை வாழ்வு,
எனதின்ப வாழ்வு நிலையாததோ?
தனியாக இலையாய் யார்க்கும் நிகராய்
மணிபோல் சொலிப்பது நானே
இனிமேலும் அதுவே வாழும் கனா
பாரதி பாடிய சுதந்திரக் கனா.
உக்கிரேன் என்ற நிலையும் கவிழ்ந்தது
இலைநான் என்ற வாழ்வும் கரைந்தது.
என் குற்றம்தான் என்ன?
ஒரு வேலியைத் தேடி விரைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக