வியாழன், 31 மார்ச், 2022

சத் - - சத்குரு பெயரமைவு

 இன்று நாம்  " சத் குரு" என்ற கூட்டுச் சொல்லை அறிந்துகொள்வோம்.
இதை அறிந்துகொள்ளுமுன் வேறு இரண்டு சொற்களை அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழில் சுட்டுச் சொற்கள் என்பவை  அ, இ, உ என்பனவாகும்.  அங்கு என்பதற்குப் பண்டைத் தமிழன்  "அ"  என்று சொன்னான்.  பண்டை நாட்களில் ,  அதாவது மனித இனம்  நாகரிகம் அடையாமல் காட்டில் வசித்த காலத்தில்,  இது ஆ என்று இருந்தது. இவ்வாறு நெடிலில் அமைந்த சொற்கள் ஒன்றும் காணாமற் போய்விடவில்லை.  " (ஆ)ங்கு":  என்ற சொல் இன்னும் நம்மிடையே உள்ளது. [ கு : சென்றடைதல்] காட்டான் என்பவன் நாட்டானாய்  ஆகுமுன் அப்போதிலிருந்து  இதுநாள் வரை இச்சொல் தமிழில் உள்ளது என்றால்,  தமிழின் கழிநெடு  வரவாற்றை எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
அதனால்தான் தொல்காப்பியத்தில் அந்த அடிச்சுவடு இன்னும் காணப்படுகிறது. 
" வடவேங்கடம் தென் குமரி  ஆயிடை"  என்று வருவதில்,   ஆ + இடை என்ற பதப் பயன்பாட்டினை அறிந்துகொள்க.
ஆ >  அ என்ற\ ஆகாரம் அகரமாகக் குறுகியதனை விளக்கவேண்டும்.  எனினும் இத்துடன் நிறுத்திக்கொண்டு,  யாம் எடுத்துக்கொண்ட ஆ> அ> அது என்பதற்குப் போய்விடுகிறோம். ஏனென்றால்  சத் என்பதை விளக்குதற்கே இங்குப் புறப்பட்டுள்ளோம்.  மற்றவை இன்னோரிடுகையில் சொல்வோம்.
அது என்பது ஒன்றைச் சுட்டுவது.   இச்சொல்லில் அ என்பது சுட்டு என்றால், து என்பதே ஒற்றைப் பொருளைக் குறித்த சொல்லாகும்.  து என்பது கலந்து,  முச்சுட்டிலும் வருகிறது:  அது, இது, உது.  இனி எது என்ற வினாவும் கொள்க.  அ. இ. உ, எ என்பவை சுட்டுவன ஆயின், து என்பதே பொருளைக் குறிக்கும் சொல்.
கூத்தாட்டு அவைக்குழாத்து  அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்  தற்று
என்பது தேவர்சொல் திருக்குறள்.

குழாம் >  குழாத்து.   குழாம் என்னும் ஒரு கூட்டத்தினுடையது என்று பொருள்.
Pay attention to  ~து.  "குழாமின் ஒன்று"

து > த்  என்றால் ஒன்று. இது கழிபன்னெடுங்காலத்துத் தமிழ்.

இங்கிருந்து நாம் தாவுதல் வேண்டும்.   அது என்பது அகர முதலானதால்,  அது திரிபு விதிகளின்படி,  சது என்றும்,   அத்து என்று சாரியையாக வரும் சிலசொற்களிலும் தோன்றும் சொல்,  சத்து என்றும் வருகிறது, வரும், வரவேண்டும்.  அது என்பது அத் என்று இறுதி உகரம் குறைந்தும்,  அத்து என்பது உகரம் குன்றி  அத் என்றும் வரும்.  இதில் தகர இரட்டிப்பு  வருதற்குரியது.  அது என்பது அத்து என்று இரட்டித்தது;  அவ்வளவுதான்.
கலிங்கத்துப் பரணி என்ற தொடரில்,  அத்து வந்து,  உரிய ஒன்று என்று பொருள்பட்டது.  கலிங்கத்துக்கு உரிய பரணி என்று பொருள்.  உரிய - பற்றிய.
கலிங்கப்பரணி, 
கலிங்கமது ஓர் தேசம், நாடு.
கலிங்கத்துப் பாட்டு,
கலிங்கத்தின் மேன்மை.
இவற்றுள் அது,  அத்து என்ற சொல்லாட்சியின் இன்மை உண்மைகளை அறிந்துகொள்க.
இதன் பொருள்:  "அவ் வொன்று" என்பதுதான்.   ஆகவே து என்பதான பொருளைக் குறிக்கிறது.
நிலையத்து மேன்மை என்பதான தொடரில்,   நிலையத்துக்கு உரிய ஒன்றான மேன்மை என்பது.
அமண் என்பது சமண் என்று திரியும்.
அது என்பது அந்த ஒன்று ஆதலின்,   அத், என்பதும் அது என்பதன் இந்தக் குறுக்கமே  ஆகும்.
ஆகவே  அது > சது;   அத்> சத்.   அத்து > சத்து > சத்.
அது என்பது அங்குள்ள ஒன்று என்ற பொருளுடையதாதனினால்,  சத் என்பதற்கும் சுட்டு விலக்கி, ஒன்று என்பதே பொருள்.
குரு என்பார் ஆசிரியர் ஆதலின்,  சத் குரு என்றால் ஒருவரான ஆசிரியர்.
ஒருவர்பின் ஒருவராகப் பல தொடராசிரியர்கள் இருந்தால் அவருள் முதலாமவரே சத் குரு.  தனக்குமுன் தனக்கோர் ஆசிரியர் இல்லாதவர் சத்குரு.
எடுத்துக்காட்டு:  சத்குரு ஞானானந்தா.  
இதுவே இலக்கணம்  தொடர்புடையதாயின்,  முதல்நூலார்.   வழிநூல் சார்புநூல் என்பன பின்வருவன என்று அறிக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
சில திருத்தங்கள்: 02042020 1606

கருத்துகள் இல்லை: