வெள்ளி, 25 மார்ச், 2022

இணையம் செம்மொழி வாழ்க.

கலிவெண்பா. 


இரவில் இரண்டுமணி  கண்விழிக்க,  யார்க்கும்

அரவம் இலாத   அமைதி -சரமாய்

எதிருள்ள விற்பனைஇல்  லங்கள் மறவர்

மதிற்கோட்டை   நீங்கிய மையிருள்போல் கவ்வக்

கணினியும்  கற்றல்  இணையமுமே கையில்

தனிமையாய் யாமில்லை செம்மைத் தமிழிலே 

இனிமை  இனிமை! இவணுள சாளரத்தில்\

தோன்றும் இருளை மறந்தேம் ஒளியிலே

ஊன்றிக் களித்திட  ஓர்தடை இங்கில்லை,

எம்மெதிர் பல்கடைகள் இல்லா விடினென்ன

செம்மொழி ஞாலமோ டிங்கிணைந்து நிற்பேம்!

இணையம் இனிதுவாழ்க இவ்வுலகு வாழ்க!

அணையில் உறங்குவேன் பின்.


அரவம் -  ஒலி.  சரம் - வரிசை.

கற்றல் இணையம் - கல்வி விளங்கும் இணையம்.

சாளரம் - சன்னல்.  மறந்தேம் - மறந்தேன் என்பதன் தன்மைப் பன்மை

ஒளி -  கணினித் திரையின் ஓளி.

ஓர்தடை = ஒருதடை.  கவிதையில் ஒரு என்பது ஓர் என்று வரலாம்.

ஞாலம் - உலகம்

அணை -  பஞ்சணை. ( முதற்குறை).


கவிதை மகிழ்க.

மெய்ப்பு பின்.

பிழைகள் காணின் பின்னூட்டம் செய்க.


கருத்துகள் இல்லை: