செவ்வாய், 9 நவம்பர், 2021

ஸ்தம்பித்தல் சொல்லமைப்பு ( மாற்றுமுடிபு)

"தம்பித்து உயர் திசையானைகள் தளர" என்றான் கம்பநாடன், இராமாயணத்தில்.

ஒரு பொருள் அதன் பிறபாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பாடாமல்,  தொடர்பறுந்த நிலையில் நின்றுவிட்டால் அது தம்பித்துவிட்டது என்று சொல்லவேண்டும்.   ஒரு மனிதனின் இருதயம் 1  நின்று போனால் அது தம்பித்துவிட்டது என்று சொல்வது சரியான உரையாகிறது.  அதாவது பிற இணைப்புகளுடன் இயங்காமல் தாம் அல்லது தானாகிவிட்டது.  இதன் சொற்பகுதி தன் என்றாலும் தம் என்றாலும் முடிபில் வேறுபாடு தோன்றாது.

பிற பான்மைகள் பற்றிச் செல்லாது தானாக அல்லது தாமாகச் சுருங்குதல் அல்லது செயலிழத்தல்.

பிற்காலத்தில் தம், தன் என்ற பகுதியுடன் விகுதி பெற்று அமைந்த சொற்கள் ஒரு ஸகர மெய் எழுத்தை முதலாகக் கொண்டிருக்குமாறு உருக்கொண்டன.  இங்குக் கூறியது,  தான்,  தாம் என்ற வடிவங்கட்கும் பொருந்துவது.  ஒரு சொல் மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்குதலைத் தமிழ் ஏற்கவில்லை. ஆனால் சில மொழிகள் அதனை ஏற்றன. இது மொழிமரபுகளில் வேறுபாடு ஆகும்.

எ-டு:  தான் >  ஸ்தான்~~ 

 இவை பின் ஒரு விகுதியும் பெறும்.

இதனை இன்னொரு வகையிலும்  விளக்கலாம்.  

தம்பித்தல் என்பது தடைப்படுதல் என்ற பொருளும் உடையதாதலின்  தடு என்பதை பகுதியாகக் கொண்டு:-

தடு >  தடும்பி  >  தம்பித்தல்>  ஸ்தம்பித்தல்.

தடுப்பித்தல்  -  இதில் வல்லெழுத்து வந்தது  (டு).   ~பித்தல் என்ற பிறவினையிலும் வல்லெழுத்தே  மிக்கு வந்தது.  இதனை மென்மை செய்ய. "தடும்பித்தல் >  தம்பித்தல் என்று அமைக்கலாம்.  டு இடைக்குறைந்து சொல் மெலிந்தது.  செய்யுளில் இவ்வாறு மெலித்தல் செய்யத் தொல்காப்பியம் வசதி செய்கிறது.  கவிஞர் இதை எதுகை மோனை நோக்கிச் செய்வர்.  சொல்லமைப்பில் இதுவும் கைக்கொள்ளப்படும் உத்தியாகிறது.

இவ்வாறு சொல்லுக்கு இன்னொரு வகையில் அமைபுரைக்க முடிவதால், இச்சொல் இருபிறப்பி என்று உணர்க. முன் இடுகையில் இதைச் சொல்லாமல் தவிர்த்துவிட்டோம். எல்லா வடிவங்களையும் நாம் சொல்வதில்லை.  நேயர்கள் ஆய்வுசெய்து சொல்ல வாய்ப்பும் அளிக்கவேண்டுமன்றோ?

குறிப்பு:

1.ஈர்(த்தல்) - வினைச்சொல்.

ஈர்+து + அ + அம்   >  ஈர்தயம் >  இருதயம் 

து. அ என்பன இடைநிலைகள்.  அம் என்பது விகுதி.

ஈரல் என்பதும் ஈர் என்ற அடிப்பிறந்த சொல்லே.

இருதயம்  இடைக்குறைந்தால்  இதயம்.

இரத்தத்தை ஈர்த்துக் குழாய்களில் வெளியி லிடும் உறுப்பு.

இரு என்ற எண்ணுப்பெயரும் ஈர் என்றே திரியும்.  எ-டு:  ஈராறு கரங்கள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: