பஞ்சமி என்ற சொல்லை இன்று தெரிந்துகொள்வோம்.
பஞ்சம் என்பது சங்கதத்தில் ஐந்து என்று பொருள்படும். ஐந்து என்ற தமிழ்ச்சொல், அஞ்சு என்று "ஊரிய" வழக்கில் திரியும். இது பின் ஒரு பகர ஒற்று முன்வந்து நிற்க, அஞ்சு > பஞ்சு > பஞ்சம் என்று ஆனது. பகர ஒற்று முன் நிற்பதாவது: ப் + அ > ப; ஆகவே [ப்]+ [அ]ஞ்சு - பஞ்சு ஆகும்.
பகர ஒற்று ஏன் முன்வந்து நிற்கவேண்டும்?
"நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"
என்று தொல்காப்பியனார் விளக்குகிறார். தமிழரிடமிருந்து கிரேக்கரும் உரோமானியரும் இதைத் தெரிந்துகொண்டு, அவ்வாறே ஐம்பூதங்களைக் கொண்டனர்.
ஆதியில் இறைவன் மட்டுமே இருந்தான். அவன் உலகைத் தோற்றுவிக்கப் புதியனவாக ஐந்து படைத்தான். அந்த ஐந்தும் மேலே கூறப்பட்டன. அவன்றன் ஆணைப்படி தோன்றிய புதுமை ஐந்து. புதியன பிறந்தனவாதலினாலும் முன்னில்லாதவை ஆதலினாலும், பிறப்பஞ்சு என்றும், புது + அம் = பூதம் என்றும் அவை பெயர்பெற்றன. பூதம் என்பதில் பு என்ற எழுத்து நீண்டு சொல் அமைந்தது. இஃது முதனிலை ( முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்று அமைந்த சொல்.
பிறப்பு அஞ்சும் கலந்ததே உலகம் ஆதலின் பிறப்பஞ்சம் > பிரபஞ்சம் ஆயிற்று. எல்லா மொழிகட்கும் வேண்டியாங்குச் சொற்களைத் தமிழ் வழங்கியுள்ளது. அதிலும் பிரபஞ்சம் என்பது எளிதில் அறியக்கூடியதே. பிறப்பஞ்சம் என்பதில் ஒரு பகர ஒற்றுக் குன்றி இடைக்குறையானது. பின்பு, அறிந்தோ, அறியாமலோ, றகரம் ரகரமாகத் திரிபு அடைந்தது. சொல்வரலாறு அறியாமல் திருத்துகிறவர்களும் உலகில் பலர். எழுத்தாணிக்கு, ரகரம் எளிது; றகரம் சற்று கடினம் எனலாம். கல்லில் செதுக்குவதற்கும் ரகரம் நன்று. ஆகவே யாரையும் குறை சொல்வதற்கில்லை.
நாளடைவில் பிறப்பஞ்சம் என்பது முதற்குறைந்து, ( இங்கு முதல் என்றது முதலசையை) பஞ்சம் ஆயிற்று. பஞ்சம் என்பதும் ஐந்து என்ற பொருளில் வழங்கியது.
செல்வச் சுருக்கத்தையும் செழிப்பின் தளர்வையும் குறிக்கும் பஞ்சம் ( பணமின்மை, உணவின்மை முதலியவை ) வேறு ).
இறைவன் அரு. உருவில்லாத செம்மையை உடையவன். அவனுக்குப் "பான்மை" ( ஆண்பால் பெண்பால் ) என்பதும் இல்லை. படைக்கப்பட்ட ஐந்தையும் கண்டுதான் அவ் அருவாகிய இறை உள்ளதை நாம் உணர்ந்துகொள்கிறோம். அது ஆதிப்பர சக்தி ஆகும். இவ்வுணர்வுத் தொடரே திரிந்து "ஆதிபராசக்தி" என்றும் உணரப்பட்டது. உடல் ஏதும் இல்லாதது ஆதிபராசக்தி யானாலும், ஐந்தினாலும் நாம் உணர்ந்ததனால், அது "பஞ்சமி" என்று உணரப்பட்டது.
ஜகத் ஜனனி, பஞ்சமி, பரமேஸ்வரி.
பரம அஞ்சு அம் இ. > பரஞ்சமி > பஞ்சமி என்றுமாகும். சம் என்பது ஒன்றாதலும் குறிக்கும். தம்> சம். தம்மில் தம் வெளிப்பாடு. இவ்வாறும் மீட்டுருவாக்கம் செய்தல் தகும்.
பரம் - கடவுள். தெய்வம்.
சம் - இணைதல். இது தம் என்பதன் திரிபு.
இ - இயற்றுதல் குறிக்கும் விகுதி அல்லது பெண்பால் விகுதி.
இன்னோர் எ-டு: இலக்குமி. பத்தினி : பத்தி + இன் + இ. (பற்று> பத்து).
பஞ்சமி என்பது தெய்வப் பெயராய் இயங்குகையில் ஐந்தாம் சாதி அன்று. மனிதன் தான் தொழில் செய்து அதனால் சாதிக்குள் இருப்பவன். கடவுளுக்கும் ஐந்தொழில் உண்டென்று கூறப்படினும் இந்தத் தொழிலென்ற சொல்லுக்குத் சாப்பாட்டுக்கு வேலை செய்வதாகிய தொழில் என்ற பொருள் இல்லை. "தன்மை" அல்லது இயங்குநலம் என்பதே பொருள். அறிக. சாப்பாடு சம்பளம் எல்லாம் கடவுளுக்கு இல்லை. வைரஸ் என்னும் நோய்நுண்மி இப்போது அதை மெய்ப்பித்துவருகிறது. எப்படி என்பதை இங்குக் கூறவில்லை.
பிறப்பஞ்சமி >பஞ்சமி. ஐந்து பூதங்களும் அவளுக்குள் அடக்கம் என்று உணர்ந்து நாம் அடங்கவேண்டும். முதற்குறை அதாவது முதலசைக் குறை என்று விரித்துரைக்கலாம்.
தெய்வத்துக்கு உணவு வைப்பதென்பது, நம் தற்குறித் தன்மையைத் தணித்துக்கொள்ளும் ஒரு பக்தியோகம் ஆகும்.
கவனமாய்ப் இடுகைகளைப் படித்து வந்தால் சொல்லாய்வுத் திறன் உங்களிடம் குடிகொண்டுவிடும்.
பஞ்சமி என்ற சொற்குப் பிற பொருளும் உள. எதுபோல என்றால், மாரி என்பதற்கு மழை என்ற பொருளும் இருப்பது போல.
பிறருக்கும் விளக்குக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக