செவ்வாய், 16 நவம்பர், 2021

சிங்கப்பூர்க் குடியுரிமை மெலிவுறும் அறிகுறியா?

 குடியுரிமை சிங்கையிலே பெறுவதற்கே

கூடிடுவர் அண்டையினர்   என்பதெலாம்

நெடிகுறைந்த காயமுறை  கலயமென்றால்

நீள்வருநாட் பின்புலத்தின் காட்சியென்றே

படியறையும் தாளிகைகள் கூறுவதாய்ப்

பாரிலினி நடைபெறுமோ பகர்ந்திடுவீர்

நொடியினிலும் நீங்கிவிடாக் குடிமையொளி

நொங்கிவிடும் என்னுமொரு தெரிதிறமோ?


செல்வ முடையோரும் சேரோம் எனநீங்கின்

சொல்வதற் கன்னதும் சோர்வுதரும் --- நெல்லதிலே

நீங்கின் உமிநன்று; நேர்நீங்கும் தீயோரே;

யாங்கும் விழைவோம் நலம்


குடியுரிமை -  சிங்கப்பூர்க் குடியுரிமை

அண்டையினர் -  அருகிலுள்ள நாட்டினர்

நெடிகுறைந்த -  வாசம் நீங்கிக்கொண்டிருப்பதான

காயம் -  பெருங்காயம்

உறை -  உள்ளிருக்கும்

கலயம் -  சிறுபாத்திரம்

நீள்வருநாள் -  நீண்ட பிற்காலம் இனிவருவது

பின்புலத்தின் காட்சி - பின் திரையில் தெரியும் உண்மை

படியறையும் -  செய்தியைக் கேட்டறிந்தவாறே சொல்லும்

தாளிகைகள் - பத்திரிகைகள்

பகர்ந்திடுவீர் -  சொல்லிடுவீர்

நொடி -  செழிப்பும் வருமானமும் இல்லாத காலம்

குடிமையொளி - குடிகளுக்கு உள்ள பீடும் புகழும்

நொங்கிவிடும்  -   ஊட்டம் குறைந்துவிடும், மெலிந்துவிடும்

தெரிதிறமோ -  அறிகுறியோ


சேரோம் -  " நாங்கள் குடிகளாகச் சேரமாட்டோம் ( என்று)"

அன்னதும் - அத்தகையதும்

நெல்லின் உமி நீங்கினால் அது நல்லது; அதுபோல் தீயோர்

நீங்கினாலும் நல்லதே என்பது இப்பாடல்.


இது ஒரு செய்தியின் அடிபடையிலெழுந்த கவிதை.

அறுசீர் விருத்தம்.  இதற்கான இதழ்ச் செய்தியை

இங்கு சொடுக்கி வாசிக்கவும்:

https://theindependent.sg/gong-li-to-renounce-singapore-citizenship/


கருத்துகள் இல்லை: