வியாழன், 18 நவம்பர், 2021

பாதிரி என்னும் தமிழ்ச் சொல்

 கிறித்துவ மதப் பூசாரிகட்குப் பெரும்பாலும் "பாதிரியார் " என்று சொல்வதுண்டு.  இது கிறித்துவ மதம் பின்பற்றப்படும் நாடுகளில் பூசாரிகட்கு வழங்கும் பெயர். கத்தோலிக்கர் வாழும் இத்தாலி, ஃச்பெய்ன் முதலியன எடுத்துக்காடுகள்.  இந்நாடுகளில் பூசாரியைப் "பாட்ரி" என்பதால், தமிழரும் அதைப் பின்பற்றி  "பாதிரி" என்றனர். இந்த அயற்சொல் தமிழில் சற்று மென்மையாக ஒலிக்கப்பட்டு வழங்கிவருகின்றது. இது எழுத்துப்பெயர்ப்புச் சொல் ஆகும்.

பாதிரி என்று ஒரு தமிழ்ச்சொல்லும் உள்ளது. இது ஒரு பொன்னிறமான மலரையும்  செந்நீலமான இன்னொரு மலரையும் குறிக்கும்.  நம் ஒளவை மூதாட்டி,  இப்பாதிரி மரம் பூக்கும் ஆனால் காய்க்காது என்பதை ஒரு வெண்பாவில் பாடியுள்ளார். சொல்லியும்  அல்லது ஏவினாலும் செய்யாதவனுக்கு இது உதாரணமாகும்.  பூக்காமல் காய்ப்பது பலாமரம்.  பூத்துக் காய்ப்பது மாமரம்.  பூத்தாலும் காய்க்காது பாதிரி என்பது.

பாதிரி ஒரு பூவைக் குறிக்குமானால் அது தமிழ்ச்சொல்.  பாதிரி என்பது கிறித்துவ ஐயரைக் குறிக்குமானால் அது அயற்சொல்லின் எழுத்து அல்லது ஒலிபெயர்ப்பு.  (Padri).  கிறித்துவக் குருக்கள் என்று சொல்வதுண்டா  என்பதை நேயர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வரும் இடுகைகளில் ஒன்றில், மேற்றிராணி, அதிமேற்றிராணி என்று வரும் சொற்களின் அமைப்பை ஆராய்வோம்.  இதை நீங்கள் அறிந்திருந்தாலும் பின்னூட்டம் இட்டுத் தெரிவிக்கவும்.

ஆனால் "பா" என்ற ஐரோப்பியச் சொல்,  அப்பா என்பதன் தலையிழப்புச் சொல் ஆகும். [ (அப்)பா.]

எங்கள் நன்றி.

மெய்ப்பு பின்.



கருத்துகள் இல்லை: