இன்று பராமரிப்பு என்ற சொல்லைப் பார்ப்போம். தமிழுலகப் பயன்பாட்டில் உள்ள இச்சொல்லின் பொருள் "௷ய்ன்டெனன்ஸ்" (maintenance) என்பதற்கு ஒப்பாகும்.
கெடுதலுற்ற ஒரு பொருளை ஒரு தரம் மட்டுமோ அல்லது ஒரு குறுகிய கால அளவிலோ பழுதுபார்த்தல் அல்லது சரிசெய்தல் என்பதை "ர்ப்பேர்" என்பர் ஆங்கிலத்தில். நீடித்த போக்கில் ஒன்றன் பயன்பாடு தேய்ந்து கெட்டுவிடாமல் போற்றிக்கொள்வது பராமரிப்பு ஆகும். அதாவது பரவலான முறையில் அதனைக் கவனித்துப் பயன்படுமாறு வைத்துக்கொள்வது.
பராமரிப்பு என்பதில் பர என்ற அடிச்சொல் வருகிறது. இது பரவலாக - அதாவது நீடித்த நிலையில் செய்யப்படுவதைக் குறிக்கிறது.
ஆம் என்பது ஆகும் என்பது செயலாக்கத்தைக் குறிக்கவருகிறது. ஆகும் என்பது ஆம் எனல் கு தொகுந்தது.
இதுபோலும் காரியத்தை அருகில் சென்றுதான் நடாத்த முடியுமாதலால் அருகில் என்பதைக் குறிக்கும் "அரு" என்பதும் அங்கு உள்ளது.
இக்காலத்தில் தொலைவிலிருந்துகூட ஒன்றைச் சிறப்புறுத்துகிறார்கள். ( updates, remote configurations etc). இந்தச்சொல் உண்டான காலத்தில் இவைபோலும் வசதிகள் இருந்ததில்லை. இச்சொல்லை உணர்ந்துகொள்ள நீங்கள் பண்டை மன்பதைக்குள் நுழைதல் வேண்டும். மன்பதை - குமுகாயம் - சமுதாயம்.
இ என்பது வெகுகாலமாகவே இயற்றுதற் குறிப்பாகவும் வினையாக்க விகுதியாகவும் வந்துள்ளது.
அசைஇ, நிலைஇ , தழீஇ என்று பண்டை வழங்கிய வினையாக்க விகுதி இது..
செய்வித்தல் என்ற பிறவினையிலும் வி என்பது பிறவினையாக்க விகுதியாகக் கூறப்படினும், உண்மையில் வ் என்பது வகர உடம்படுமெய். இ என்பதே வினையாக்கம் செய்கின்றது. இலக்கணநூல்கள் இவ்வாறு பிரித்து உணர்த்துவதில்லை. இலக்கணமென்பது மொழிநூலன்று, சொல்நூலுமன்று என்பதறிக.. நீங்கள் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்பிக்கும் நூலே இலக்கணம்.
இ எனபது ஒரு சுட்டுக் குறுஞ்சொல். இயற்றுதல் என்ற சொல்லும் இதிலிருந்து தோன்றியதே ஆகும்.
ஆகவே அரு+ இ என்று இணைந்து அருகில் நிகழ்த்து என்று பொருள்தரும் சொல்நெசவு இதுவாகும், அருஇ > அரி > அரித்தல். அருகில் போய்ப் பிடித்து இழுத்துச் சேர்த்தல் " அரித்தல்" என்பதும் காண்க. " மிதக்கும் விதைகளை அரித்து எடு" என்ற வாக்கியம் உணர்க.
எல்லாம் இணைக்க,
பர + ஆம் + அரு + இ = பராமரி ஆகின்றது.
மேலனவாய விளக்கங்களை மற்றுமொரு முறை வாசித்துக்கொள்ளலாம்.
இவ்வாறே பராமரிப்பு, பராமரித்தல் என்பவை உண்டாயின.
பர + ஆம் > பராம், பர என்பதில் ஈற்று அகரம் கெட்டது. பர்+ஆம் என்று இணைந்து பராம் என்று பொலிந்தது.
அரு + இ எனபதில் அரு என்ற முதலின் உகரம் கெட்டது. அர் இ > அரி என்று விளைந்தது.
பராம் அரி > பராமரி இயல்புச் சேர்க்கை. ம் அ > ம.
பரா மரிப்பு என்று பிரித்தால் பரவலாகச் செத்துப்போவது என்று பிசகான பொருள் கிட்டும். அது தவறு.
இது அயற்சொல் அன்று. மூலச்சொற்களை அல்லது அடிச்சொற்களை மட்டும் கொண்டு உருவாக்கிய வினைச்சொல் இது. பரவலான காலவட்டத்தில் அருகில் இருந்து இயற்றுவது என்று அழகாக இதன் பொருள் போதருதல் காணலாம்.
பர ஆ மரு(வு) இ என்று காண்டலும் பொருந்துவதால் இது இருபிறப்பி ஆகும். பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக