சனி, 20 நவம்பர், 2021

நவநீதம் - புதுமை, வெண்ணெய்.

 நீதி பிழைத்தான் என்றெண்ணிய பாண்டியன் கோவலனைக் கொன்றான்.  இந்த வாக்கியத்தில் "பிழைத்தான்"  என்பதற்குப் பிசகினான், தவறினான் என்று பொருள். "மிஸ்டேக்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, தெளிவான பொருளை "டோர்ட்" என்னும் சட்டத்தொகுதி சொல்கிறது.  "Genuine Mistake" ---  உடலின் தேய்க்கும் மருந்தைக் குடிக்கும் மருந்தென்று எண்ணிக் குடித்துவிட்டீர் என்பதை உதாரணமாக முன்வைக்கலாம். உதாரணம்:[ உது-  முன்னால்; ஆர் - நிறைவாக; அணம் -  விகுதி, (நிற்பது எனல்பொருட்டு).]

நீதி என்ற சொல், நீதம் என்ற வடிவும் கொள்ளும். இரண்டும் நில் என்ற அடிச்சொல்லிலிருந்து வருவன:

நில் >  நி > நீ.  (  சொல் - கடைக்குறை - முதனிலை நீளுதல் ).

நில் > நீதி  ( தி தொழிற்பெயர் விகுதி).

நீதி + அம் >  நீதம்.  (  து என்பதில் உகரம் கெட்டது).

இது என்ற சொல் இடைநிலையாக வரும். இஃது,  " இது" என்றும்,  து என்று தலையிழந்தும், த் என்று மெய்யாகக் குறுகியும் வரும்,  சொல்லாக்கத்தில் ).

நி + த் + அம் > நீ + த் + அம் > நீதம்,   ( நி நீண்டது;  த் இடைநிலை).

நீதிக்கு நில் பகுதியானது,  ஏறக்குறைய நீதி ஒருவனுக்கும் இன்னொருவனுக்கும் ஒன்றாக நிற்பதாலும் காலம் முதலிய காரணிகளால் கோடாமையும் ஆகும் ).  அதாவது:  நிற்பது நீதி. 

நவநீதம் என்ற கூட்டுச்சொல்லில் இரண்டு பாகங்கள் உள.  நவம் என்பது ஒன்று; நீதம் என்பது இன்னொன்று.  நவநீதம் - புதுமை எனின்,  நவம் - புதுமை; நீதம் - நிற்பது, புதுமையாய் முன்னிற்பது.

நவம் - புதுமை,  நீதம் - நெய்,  புதியது நெய்க்கு முந்திய வெண்ணெய்.  ஆகவே வெண்ணெய் என்பதும்  பொருள். திவாகர நிகண்டு இப்பொருளைத் தருவது காணலாம்.

நெய் என்ற சொல், நெய்+ து + அம் > நெய்தம்> நீதம் என்று திரிந்து இங்கு நெய்யைக் குறித்தது. நவ எனவே, வெண்ணெயைக் குறித்தது.  நீதம் என்ற இவ்வாறு திரியாத சொல், நெய்யைக் குறிக்காது.

இங்கு திரிபாக வந்து நெய்யைக் குறித்தது  " நீதம்" ஆகும். இது கூட்டுச் சொல்லிலன்றி இப்பொருள் தாராது உணர்க. முதற்குறையாய்க் கையாளப் பெற்றிருந்து நெய்யென்ற பொருள் போந்தவிடத்து அவ்வாறு கொள்க. வந்துழிக் காண்க.

"நவநீத சோரனும் என்று --  வருவான் என்று,

இராதாவும் ஏங்குகிறாள் நின்று  !  

கண்கள் காணாமலே -- சுகுமாரன்

கனிவாகப் பேசாமலே   (நவநீத )   "

மருதகாசியின் பாடல். 

இப்பாட்டில் நவநீதம் என்பது வெணணெயைக் குறித்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: