வியாழன், 11 நவம்பர், 2021

தாம்பூலம்

 இன்று தாம்பூலம் என்ற சொல்லினைக் காண்போம்.

இச்சொல்லில்  பூலம் என்பது புல்லுதல், புல்குதல் என்ற வினைகளுடன் தொடர்புடைய சொல்.

புல்லுதல்  -  ஒன்றுபடுதல்.  

புல்குதல் என்பதும் இதற்கிணையான பொருள் உடையது.

அடிச்சொல் புல்  என்பது.

புல் + அம் =  பூலம்  என்பது ஆடவர் பெண்டிர் ஒன்றுபடுங்கால்,  அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தடுத்து வருங்கால் வாய் நாவு முதலியவை தூய்மையாக இருக்கும்படி வைத்துக்கொள்ளும் அடைகாய் முதலியவற்றைக் குறிக்கும் சொல்.  பூலமென்பது முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர்.  வினைச்சொல்லினின்று உருக்கொள்ளும் பெயர்ச்சொல் தொழிற்பெயர் என்பர். இலக்கணக் குறியீடு.  தொழில் என்றது வினைச்சொல் எனற்பொருட்டு.

இது பெரிதும் மங்கல விழாக்களில் பயன்பாடு கண்டது. பண்டையர் இயற்கையில் கிட்டும் வெற்றிலை முதலியவற்றைக் கையாண்டு தங்களை தூய்மைப் படுத்திக்கொண்டனர்.  இதுபோதுள்ள செயற்கை மருந்து வகைகள்  அக்காலத்தில் இல்லை.  Chlorhexdine, betadine  எனல் தொடக்கத்து இக்காலத்து மருந்துகள் முற்காலத்திலில்லை அல்லது பயன்பாடு காணவில்லை.

ஒரு வாய்ப்பு அந்நிலையைத் தருங்கால் இட்டுக்கொள்வது "தரித்தல்"  ஆகும்.  தரு> தரி > தரித்தல்.  தரி என்பதில் இகர ஈறு வினையிலிருந்து இன்னொரு வினையைப் பிறப்பித்தது.  ( தரு- இ- த்தல் ).  தருவித்தல் என்பது பிறவினை. இவ்வாறு ஒன்றிலிருந்து பலசொற்களை மொழிக்குப் படைத்துக்கொண்டது அறிவுடைமை.  முயற்சியின்றிக் "கடன்"கொள்வது சோம்பல் ஆகும். 

தாம் என்ற முன்னிணைப்பு, ஒருவருக்கொருவர்  அல்லது தம்மில் தாம் பதிந்து வாழத்தொடங்கும் இல்லற வாழ்வு நிலையைக் குறிக்கவரும் அழகிய சொல்லமைப்பு.

தம் + பதி > தம்பதி என்பதும் இத்தகைய நிலை உணர்த்தம் சொல்லாகும்.  தம் என்பதும் பதி(தல்) என்பதும் தமிழே.

பதிவுத் திருமணம் என்ற தொடரில் பதிவு வருகிறது.

எனவே  தாம் புல்லி மகிழத் தேவையான ஒன்று தாம்பூலம் என முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




கருத்துகள் இல்லை: