சனி, 6 நவம்பர், 2021

சோதிட நம்பிக்கையில் சோர்வில்லை

 பேர்மாற்றம்  செய்தால் நாளும்

கோளுமே  பார்த்துச் செய்க,

நேர்மாற்ற  மாகத் துன்பம்

நேராமை போற்றிக் கொள்க; 

யார்கூற்றுக் கொண்டாய்   என்றே

என்னைநீர்  கேட்பீ ராயின்.

கூர்ஈற்றுக் கோளாய் வோனே

கூறினான்  ஈதென்  பேன்நான்.   


இலக்கத்தி னோடேழ் பத்தின்

ஆயிரம்  கொடுத்தான்  அந்தக்

கலக்கமில் கணியன் தானும்

கழறின யாவும் ஏற்றான்;

துலக்குறப்  பேரைப் பேர்த்தான்

இன்னொரு பேரை வைத்தான்! 

மயக்கறு நம்பிக் கையில்

மகிழ்தலம் ஆர்ந்த  தம்மா.


இதில் பெறப்படும் படிப்பினை யாதென்றால்,  சோதிடத்தை நம்பவில்லை என்றிருப்பவர், நம்பாமல் இருக்கலாம்.  அதில் நம்பிக்கை உள்ளவர்கள் பலர், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறார்கள்.  நம்பாதே என்று நீர் சொல்லி அதை நாலு பேர் கேட்டுவிட்டால், உலகம் உம் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது என்று இறுமாந்துவிடுதல் அறியாமை ஆகும்.

இந்தச் செய்தியைப் படித்து இதை உணர்ந்து கொள்ளலாமே. (கீழே, அரும்பொருள் யாப்பியல் குறிப்புகள் இவற்றுக்கு அப்பால்  தரப்பட்டுள்ளது.  சொடுக்கி வாசிக்கவும். )

அரும்பொருள்:

நாளும் கோளும் -   சோதிடம்.

இலக்கத்தி னோடேழ் பத்தின்ஆயிரம்  ---  170000

கணியன் -  சோதிடன்

கழறின - சொல்லியவை

யார் கூற்று -  யார் சொன்னதை

கொண்டாய்-  ஏற்றுக்கொண்டாய்

கூர் ஈறு -  கூரான கடைசி.  அதாவது கூர்மதியால் இயன்ற

இறுதிக் கொள்கை.

நேராமை -  நடவாமல்.

துலக்குற -  விளக்கமாக

மயக்கறு  -   குழப்பம் இல்லாத

ஆர்ந்தது  -  நிறைந்தது

மகிழ்தலம் -  பூமி. மண்ணுலகு


யாப்பியல் குறிப்புகள்:

இது அறுசீர் விருத்தம்.  இந்த அடியைப் பாருங்கள்:

"இலக்கத்தி னோடேழ் பத்தின்

ஆயிரம்  கொடுத்தான்  அந்த"

என்று வந்துள்ளது,  இங்கு முதலடியில் இரண்டாவது மடக்கில்  இகரத்தில் தொடங்கியிருந்தால், ஒரு மோனை வந்திருக்கும்.  நான் வைக்கவில்லை. இப்படி மாற்றினால் மோனை வந்துவிடும்:

இலக்கத்தி  னோடேழ் பத்தின்

ஈரைந்து நூற்றைத் தந்தான்

என்று எழுதினால் மோனை வந்துவிடும்.  வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அதிகம் கணக்குப் போட்டு அது என்ன தொகை என்று வாசிப்பவர் கண்டுபிடிக்க வேண்டும்.  கவிதையில் 170,000 என்பதை தெளிவாக வைப்பதே கடினம். அதை மேலும் கடினமாக்கிப் படிப்பவர் திணறக்கூடாது என்பதானால் வைக்கவில்லை.  கருத்தறிதல் மிகுமழுக்கம் அடைதல் ஆகாது என்பதிலும் சற்றுக் கவனமாய் இருக்கவேண்டியுள்ளது.

கவிதையின் முதற்பாடலில் தொடக்காத்தில்:

பேர்மாற்றம்  நாளும் கோளும்

பிழையாது பார்த்துச் செய்க

என்று பாடினால் மோனை வந்துவிடும்.

பார்த்துச் செய்க என்ற  1.பேச்சுவழக்குத் தொடரில்  ஒரு கவனம் வேண்டும், 2. வேறு ஈர்ப்புகளும் கவர்ச்சிகளும் கவிதைக்கு வேண்டும் என்பன " செய்" என்ற வினை இரண்டாம் முறை வருவதால்  உணர்த்தப்படுகிறது என்னும் காரணியால் மோனையின்பால் மோகம் விடுபடுகிறது.  அதனால் மோனையை விழைந்து மாற்றவில்லை.  

இந்தச் சிந்தனைகளை அறிந்தால் கவிதைபால் ஈர்ப்பு மிகும் என்பதால் இதைத் தெரிவிக்கிறேன். அறிவீராக. 


HK star Jordan Chan paid fortune-teller S$170,000 to change his name for good luck

https://theindependent.sg/hk-star-jordan-chan-paid-fortune-teller-s170000-to-change-his-name-for-good-luck/

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


கருத்துகள் இல்லை: