தோற்றுவாய்: ஆய்வு நலம்
ஆராதித்தல் எனபது பூசை செய்தல் என்று பொருள்படுகிறது. உபசரித்தல் என்றும் இன்னொரு பொருள் உள்ளது. ஆயினும் இதன் சொல்லமைபுப் பொருள் சற்று வேறுபட்டது. மணம் என்ற சொல் வாசனை என்றுகூடப் பொருள்கொள்ளத் தக்கதாய் இருந்தாலும், அது மண்ணுதல் ( நீரால் தூய்மைசெய்துகொள்ளுதல் ) என்ற வினையினின்று புறப்பட்ட சொல்லே. வானவூர்தி ஓரிடத்தில் வானிலேறி இன்னொரு நாட்டில் போய் இறங்கிவிடுவதுபோல, சொற்களும் சில புறப்பட்ட இடம் வேறாகவும் இறுதி அடைவு வேறாகவும் இருத்தல் தெளிவு. சில சொற்களுக்கு இருபதுக்கு மேற்பட்ட பொருள்கள்கூட இருக்கின்றன. நீங்கள் ஓய்வாக இருக்கையில் அவை எவ்வாறு இத்தனை பொருள்வேறுபாடுகளை அடைந்தன என்ற ஆய்வைச் செய்யலாம். இதனைச் செய்தால், தமிழுலகு உங்கட்குக் கடப்பாடு உடைத்தாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வினைச்சொற்கள்
ஆராதித்தல் என்பதில் உள்ள வினைச்சொற்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.
ஆர்தல் - நிறைதல். ஆர என்ற எச்சவினை.
ஆதல் - ஆகுதல் என்ற வினை.
தி என்னும் இடைநிலை. அல்லது வினையாக்க விகுதி எனினுமாம்.
~ தல் என்பது தொழிற்பெயர் விகுதி.
எனவே, ஆர + ஆதி = ஆராதி ஆகின்றது. "நிறைவாகு" என்ற பொருள்.
இது இரு வினைச்சொற்களை இணைத்து ஆக்கப்பட்ட கூட்டுவினை ஆகும். ஒரே சொல்லிலிருந்து இன்னொரு புதுவினை ஏற்பட்டதுமுண்டு.
அதனை இன்னோர் இடுகையில் சொல்வோம்.
நிறைவாக்கும் ஒரு பூசையைத் தொடங்கி அதைத் தெய்வத்துக்குச் சாத்துதல் என்பதே இதன் பொருள் ஆகும்.
ஆமோதித்தல் என்பதில் ஆம் + ஓது + இ என, இறுதி இகரம் மட்டுமே வினையாக்க விகுதி ஆயிற்று. மூழ்கு, பழகு என்பவற்றில் கு வினையாக்க விகுதி.
நிறைவுக்கருத்து உள்ளபடியால் உபசரித்தல் அல்லது ஓம்புதல் என்பதும் மற்றொரு பொருளாயிற்று.
ஆர்தல் என்பது கலந்த மற்ற வினைகளும் உள்ளன. அவற்றைப் பின்பு காண்போம். பணிவும் கவனிப்பும் அலங்காரங்களும் நிகழ்வுடன் ஒன்றித்திருத்தலும் எனப் பலசாயல்கள் இவ்வினையில் உள்ளன.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக