திங்கள், 11 அக்டோபர், 2021

அட்சதை , அடுதல் வினை.

 தொடக்கத்தில் மந்திரங்கள்  தன்னிகரற்ற கடவுளை  ( The One without a Second ) வணங்கப் பயன்படுத்தப்படவில்லை.  பேய்கள் விரட்டவும் மற்ற வியப்புக்குரிய செயல்களைச் செய்யவுமே பயன்பட்டன.  அட்சதை என்பது பெரும்பாலும் மந்திரித்த அரிசி ஆகும்.

மனித வளர்ச்சி நூலின்படி ( anthropology  ) மனிதன் வேளாண்மை விளைச்சல் செய்யும் திறன்பெற்ற பின்னர்தான் அரிசியின் பயன்பாடு பேரளவில் வந்து மந்திரம்  செய்வதற்கும் அது பயன்பட்டிருக்கமுடியும்.  ஆகவே மந்திரம் செய்யும் திறனை மனிதன் பெற்றது உழவுதொழில் முன்னேறி வளர்ச்சி அடைந்த பின்புதான்.

ஓடும் உடும்பை நிறுத்தும் திறன்பெற்ற  இந்தோனேசிய வழியினரான ஒரு மந்திரம் செய்யும் பெரியவரை,  பெக்கோக் என்னும் மலேசிய ஊரின் காட்டுப்பகுதியில் நம் திரு மா மணி அவர்கள் கண்டு அளவளாவியிருக்கிறார்.

இன்னும் சில மந்திரங்கள் பற்றிய அறிதல்கள் உள. எனினும்  இது சொல்லாய்வு ஆதலின் அதனுட் செல்லவில்லை. 

ஒரு பேராத்மா பற்றி மனிதன் அறிய சற்றுக் காலம் சென்றிருக்கவேண்டும்.

பேயை அல்லது பிற  ஆவிகள், மற்றும்  விலங்குகளை அடக்க மந்திரித்த அரிசி பயன்பட்டது.

அடுதல் என்பது எதிரியை அடக்குதல் என்றும் பொருள்படும்.  அடு, அடக்கு என்பன ஒரு மூலத்தவை.

அடு  +  அ + தை  >  அட்டதை >  அட்சதை எனச் சொல் அமைந்தது.

அட்டதை > அச்சதை.   இங்கு  தை விகுதி.  ( து + ஐ)

அட்ட, அட்டு என்பன வினை எச்சங்களாகவும் வரும்.

அடு அ  மற்றும் அடு உ  என்பன டகரம் இரட்டித்து அமையும்.   சுட்ட என்பது போலவே.

சமஸ்கிருதம் பாலி முதலிய மொழிகளில் எச்சங்களிலிருந்தும் சொல் அமையும். 

படு + ஆ + சு >  பட்டாசு.  ( பட்டு, அதாவது தீபட்டு,  செயல்படுவது.)  சு என்பது பரிசு என்பதில்போல விகுதி ஆகும்.

அடலேறு என்பதில் அடுதல் உள்ளது தெரிகின்றதன்றோ?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: