செவ்வாய், 12 அக்டோபர், 2021

அடுதல் -ஆடு, அட்டி, அட்டை, ஆடை பிறவும்

 அடுதல் என்ற வினைச்சொல் இவ்வலைப்பூவில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.  இவற்றை நீங்கள் படித்தறிந்திருந்தாலும் அல்லது படித்துமறந்திருந்தாலும், அல்லது பிறநூல்களில் வாயிலாக முன்னரே அறிந்திருதாலும்   அது இப்போது பெரிதும் பேச்சுவழக்கிலும் இயல்பான எழுத்து வெளியீடுகளிலும் அருகிக் காணப்படுவது என்பதை மறுப்பதற்கில்லை. அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது  என்பதைச் சொல்லும்போது இவ்வினை சிலருக்கு நினைவுக்கு வரும். அடுப்பு  அடுக்களை  அடிசில் முதலியவற்றைச் சந்திக்கும்போது,  அடுதல் வினை மறக்கப்பட்டுவிடும்.  ஒன்றை மறந்துவிட்டீர் என்கையில் எல்லோரும் அதை நினைத்துக்கொள்வார்கள். இதை எழுதுவதன் பயன் அதுதான். நினைவு வட்டத்துக்குள் அச்சொல்லைக் கொணர்தல்.

ஆடுறு தேறல் என்றால்  ஆட்டுக்குட்டியின் பானமன்று:  சுடவைத்த தேறல்.   அடுதல் என்ற வினையே முதல் எழுத்து நீட்சித் திரிபு எய்தி,   ஆடு என்று ஆகிச் சுடுதலைக் குறித்துள்ளது.  ஆடுகள் என்ற விலங்குவகை,  எல்லாம் கூட்டமாக இருந்து வாழ்பவை.  அடுத்தடுத்து நின்று ஒன்றையொன்று உராய்ந்துகொண்டு பே என்று கத்திக்கொண்டு நிற்பதால்,   அடுத்தல் முதன்மைக் காரணமாக,  அடு> ஆடு என்ற பெயர் பெற்றன.  ஆண்டுபல கழிந்துவிடினும் சொற்களிலிருந்து அடிப்படைப் பொருள் நன்கு வெளிப்படுகின்றது,காணலாம். 

"டிலே" என்ற ஆங்கிலச்சொல்லுக்குத் தாமதம் என்ற சொல் வழங்கிவருகிறது.  இது தாழ் +  மதி + அம்  = தாமதம் என்றான சொல்.  ழகர ஒற்று இடைக்குறைந்து, மதி என்பதன் இறுதி இகரம் கெட்டு அமைந்த சொல். ( வாழ்த்து + இயம் = வாத்தியம் என்பது இவ்வாறு ழகர ஒற்று இடைக்குறைந்த சொல் என்பதைத் தமிழாசிரியர் கூறியுள்ளனர்.)  மாதம் என்ற சொல்லும் இறுதி இகரம்  கெட்ட சொல்லே. ( மதி + அம் ).  மதி என்பது இங்கு காலமதிப்பைக் குறித்தது.  இதே காரணத்தால் நிலவுக்கும் மதி என்ற பெயர் ஏற்பட்டது.    மதி + அம் = மாதம், இது படி + அம் = பாடம் போன்று முதனிலை நீண்டு,  முதற்பகுதியின் ஈற்று இகரம் கெட்ட சொல்.  முதனிலை என்பது சொல்லின் முதலெழுத்து என்பது.

அட்டி என்ற சொல்லும் தாமதப் பொருளில் வரும்.  அடு + இ=  அட்டி.  அடு என்பது ஒன்றை அடுத்த வாய்ப்புக்கு அல்லது காலத்துக்குத் தள்ளிவைப்பது என்பதனால் அமைந்த சொல்,  இதுவாகும்.  அடுத்துச் செய்வோம் அடுத்துச் செய்வோம் என்று சொல்வதாலும்  செய்தக்க இன்று செய்யாமல் நாளை என்பதாலும் ,  அடு என்ற சொல்லில் தாமதப் பொருள் கிளைத்தெழுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும்.

அட்டியல் என்ற நகைவகையும் சிறுசிறு நெடுங்குழைகள் அடுத்தடுத்து வருமாறு அமைப்புறுவதால்  அடு + இயல் >  அட்டியல் ஆயிற்று.  இது அட்டிகை எனவும் குறிக்கப்படும்.

அட்சரம்  இங்குக் காண்க https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_4.html

எரியும் நெருப்பின் மேல் ( அடுத்து ) வைக்கப்படுவதால், அதனால் ஏனம் சூடேறிச் சமையல் நடைபெறுவதால்,  அடு என்ற கருத்தில் சுடுதல் கருத்து தோன்றியது.  அடுத்து வைத்தாலன்றிச் சூடேறாது. இங்கு அடுதல் என்பது நெருப்பைத் தொடுமாறு வைத்தல்.

அட்டை என்பதும் காகித அட்டையைக் குறிக்கையில்,  அடுத்தடுத்து ஒட்டாக வைத்துச் செய்யப்படுவதனால் வந்த பெயர்.   அட்டை என்ற பூச்சியும் அடுத்து வந்து ஒட்டிக்கொள்வதால் வந்த பெயர்.

ஆடை என்பதும் உடம்பை அடுத்து ஒட்டி அணியப்படுவதால்  அடு + ஐ > ஆடை என்று முதனிலை நீட்சியை உட்படுத்தி ஐ விகுதி பெற்று அமைந்தது.  ஆடுதலால் என்பர் சிலர்.

இவ்வாறு பல. இவை கொண்டு பிறவும் நீங்கள் தாமே அறிந்துகொள்ளலாம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



கருத்துகள் இல்லை: