ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கோலாகலம் - பதம்பிரித்தல் எவ்வாறு.

 கோலாகலம் என்ற சொல்லைப்  பார்த்தமட்டில்,  அது இருசொற்களாய் இருந்து இணைக்கப்பட்டு ஒருசொல்லானது என்பது புரியும்.  இத்தகைய சொற்களைக் கூட்டுச்சொல் என்பர்.   அதாவது இரு சொற்களின் இணைப்பு.

இதைப் பிரித்து அந்த இருசொற்களையும் காண்போர்,  கோலம் + கலம் என்று பிரிப்பதே பெரும்பான்மை.

கலம் என்பதன் பொருள் வருமாறு:-  1. பாத்திரம் , ஏனம்.   2.  புட்டி.  3.  குப்பி.   4. தேறல்.   5. கப்பல்  6. மரக்கலம்   7.நட்சத்திரம்,  பூரம், பரணி, இரேவதி.  8. ஆபரணம்.  9.யாழ்   10.  உழுபடை  11. ஆயுதம்  12.  பனையோலையில் எழுத்து.  13.  ஓர் முகத்தலளவு. 14 காகிதம்.

கோலம் எனில் அழகு.   கோலாகலம் என்பது அழகிய மேற்கண்ட  14  பொருள்களில் ஏதேனும் ஒன்று.  எனவே  இப்பொருள் கூறல் மனநிறைவை அளிக்கவில்லை!

விழா கோலாகலமாக நடைபெற்றது என்னுங்கால்,  மேற்கண்ட எதுவும் அத்துணைப் பொருந்துவதாகத் தெரியவில்லை. கலம் - கல+ அம் , கலவை என மேற்கொண்டு,  " அழகுகளின் கலவை " ( கலம்பம் > கதம்பம்) என ஏன் பொருள் விரித்தல் ஆகாது ? -  என்னும் கேள்வி உங்கள் மனத்துள் எழவும் கூடும். இங்கு அதனுட் செல்லவில்லை.

கோலாகலம் என்பதற்குத் தனிப்பொருள் உள்ளது.  அது  ஒழுங்குமுறையற்ற கண்டபடியான ஆனால் பெரும்பாலும் மகிழ்சியான கூக்குரல் என்பதாம்.

கோலம் எனின் அழகு,  உருவம்,  ஊர்கோலம்,   நிறம்,  வெளித்தோற்றம்,  பிறவி (...என்றும் வருமிடம் " மானிடக் கோலம்"),   முயற்சி  ( கோலுதல் வினை: கோலு+ அம்)  ,  நீரோட்டம். இன்ன பிற.

இங்குக் கலம் என்பதைக் கூட்டினால்,  செயற்கிளர்ச்சி அடக்கத்தில் நின்றுபோனது போலும் ஓர் உணர்வைத் தரக்கூடும். 

இவ்வாறின்றி அலம்புதல் என்ற சொல்லின்  அலம் என்ற அடிச்சொல்லைக் கொண்டு இணைப்பதனால் இன்னும் சிறந்த பொருளைப் பெறலாம்.  அலம்புதல் என்பதற்கு,  அலட்டுதல்,  ஆரவாரித்தல்,  குழப்படி, வீணானவை செய்தல், பிதற்றுதல் என்று சற்றும் அடங்கிப்போகாத செயல்களைக் காட்டும் பொருள் உள்ளது.  இன்றைப் பேச்சு வழக்கில் இப்பொருளெல்லாம் இல்லாவிட்டாலும் நிகண்டுகளில் உள்ளன.  ஆகவே:

கோலம் + ஆகு + அலம் >   கோல + ஆகு+ அலம் >  கோலாகலம் என்று சரியாக அமைகின்றது.

எனவே இதனைக் கவனித்துப் பதம் பிரித்தல் மேலானது என்பதை முன்வைக்கின்றோம்.

கலம் என்பதற்கு மேற்கண்ட பொருள்களைக் கொள்ளாமல்,  கலத்தல்  (  கல+ அம் > கலம்,  கலாட்டா போல  : கல+ ஆட்டு+ ஆ)  எனின் ஒருவகையில் பழைய பதப்பிரிப்பைத் தக்க வைத்துக்கொள்ளலாம்.  இஃது ஒர் இருபிறப்பி  என்பது இதன் மூலம் தெளிவாகலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.

குறிப்புகள்:



K. kala, M. kalam, Tu. kara.

தெலுங்கு: கலமு.

கருத்துகள் இல்லை: