புதன், 27 அக்டோபர், 2021

சத்துரு.

 இன்று தமிழன்று என்று கருதப்பட்ட சத்துரு என்ற சொல்லினை முன்வைத்து அதனைப் பிழிந்தாய்வு  மேற்கொள்ளுவோம்.  சொல்லை ஆய்வு செய்வதென்பது ஒருவகையில் பழத்தைப் பிழிந்து சாறு சக்கை விதைகள் என்று பிரிப்பது  போன்றதுதான்.  உரையாசிரியர் கலையில், பொழிப்புரை என்று உண்டன்றோ, அது போல்வதே பிழிந்தாய்வு என்பதும்.  இது நிற்க.

சாத்துவதென்பது, அணிவித்தலென்றும் பொருள்தரும்.  அம்மனுக்குச் சந்தனம் சாத்துதல் என்று சொல்வர்.  இது மேனியெங்கும் தெளித்து அப்புதல் செய்து முழுக்காட்டுவது போன்றதே.

பிடிபட்ட திருடனைச் சார்த்து சார்த்து ( அல்லது சாத்து சாத்து ) என்று சரியாகச் சாத்திவிட்டார்கள் என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம்.  இதற்குப் பொருள் அடி உதையெல்லாம் கொடுக்கப்பட்டன என்பதே.

ஓர் உருவிற்கு அல்லது படிமைக்கு இவ்வாறு சாத்துவது அறிந்து தெளிவாகும் வழக்கே ஆகும்.  இதை " உருவிற்குச் சாத்துதல்" என்றும் சொல்லலாம்.

ஒருவனுடன் பகைமை ஏற்பட்டுவிட்டால் இவ்வாறு ஓர் உருவிற்குச் சாத்துவது போல அவன் பல தொல்லைகளையும் தந்துகொண்டிருப்பான்.  இவ்வாறு அடிக்கடி நடப்பதைப் பேச்சுவழக்கில் இரு கூட்டத்தாருக்கு மிடையில் "பூசல்"கள் இருந்தன என்பர்.  இவ்வாறு பூசுதல், சார்த்துதல், சாத்துதல் என்பனவெல்லாம், அணியியல் வழக்காக,  எதிரியின் நீங்காத தொல்லைத்தரவுகளை விளக்கவல்ல வழக்கின என்பது தெளிவாகும்.

உருவின்மேல் சாத்துதல் என்ற சாத்துரு ( சாத்து + உரு)  என்பதே,  முதனிலை குறுகி, சத்துரு என்று வந்து எதிரி என்று பொருள்படுகிறது.  இது முறைமாற்றுச் சொல்லமைப்பு.  Reverse formation.

சொற்கள் முதனிலை திரிதலென்பதும் குறுகுதலென்பதும் பெருவரவிற்றான சொல்லாக்க நிகழ்வே ஆகும்.  இனி,  சில சொற்களைக் காண்போம்.

காண் >  கண்  ( இங்கு வினை குறுகி விழிக்குப் பெயர் அமைந்தது).

தோண்டு >  தொண்டை ( இங்கு தோண்டுதல் என்ற வினை, தொண்டு என்று குறுகி ஐவிகுதி பெற்று ஒரு சினைப்பெயராகியது.

பாடு >  படனம் > பஜன்.

இன்னும் பல உள்ளன. இதுபோன்ற நீட்சிக்குறுக்கத்தை ஒரு வரைவேட்டில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள்.  நிபுணர்  ( நிற்பு உணர்)  ஆகிவிடுவீர்கள்.  அப்புறம் நீங்களும் சொல்லாயுநர் ஆவீர்கள்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.



கருத்துகள் இல்லை: