ஞாயிறு, 31 அக்டோபர், 2021

அபிப்பிராயம் - பிற்கருத்து.

 கடின ஒலிகளை விலக்கி,  மெல்லோசை தழுவச் சொல்லை அமைத்தலை இடைக்காலத்தில் கடைப்பிடித்தனர்.  மனிதன் போகப்போகத்தான் பல தந்திரங்களை அறிந்து  அவற்றைத் பயன்படுத்திக்  கொள்கிறான். இதை ஒரு முன்னேற்றம் என்றாலும்,  பிற்போக்கு என்றாலும் ஒன்றையடுத்து  ஒரு முத்திரையிடுதலானது ஒரு பிற்கருத்தே ஆகும்.  அதாவது அபிப்பிராயம்.  அபி என்பதில் அ-  அடுத்து,  பி -பின்னர் அல்லது பின்னால்,  பிராயம்:  பிர - பிறப்பிக்கப்பட்டு,  ஆயம்  -  ஆயதாக  மேற்கொள்ளப்பட்டது.  பிறக்க ஆயது - "பிராயம்" ஆனது. அபிப்பிராயம் - அதன்பின் கருத்து என்பதன்றி வேறில்லை பிராயம் - வயது என்பது வேறு. homonym.  ஒத்தொலிச் சொல் அல்லது ஒத்தொலிக் கிளவி. இப்படிப் புனைந்து ஆக்கம் செய்கையில் பல மனிதர்கள் அதை எட்ட இயலாமல் சிந்தனைச் சுழலில் சூழிருளில் வீழ்தலுறுவர்.  இங்குக் கண்டு தெளிக.

பல கடின ஒலிச்சொற்கள் மெலிப்பொலி மேற்கொண்டன:  எ-டு:  பீடுமன் > பீமன்.  கடின ஒலியான டு விலக்குண்டது. இதுபோல்வன தந்திரச்சொற்புனைவு.  இலக்கணம் "கிலக்கிணங்களில்" இல்லை.  இவற்றுள் பலவற்றை எடுத்துக்காட்டியுள்ளோம்.  இன்னொன்று கடலைக் கடக்க உதவும் கப்பல்:  இது உண்மையில் கடப்பல் ஆகும்.   டகரம் விலக்குண்டது.  கட - பகுதி. பு இடைநிலை.  அல் - விகுதி.  இலக்கணத்தில் இதை அறிந்திருந்தனர்.  ட - இடைக்குறை.  

வரு என்பது வினைப்பகுதி.  வந்தான் என்ற வினைமுற்றை எடுத்துக்கொள்க. இந்த ரு என்னும் எழுத்தை விலக்காவிட்டால்,  வருந்தான் என்று உருக்கொண்டு, வருந்த மாட்டான் என்று பொருள்பட்டு,  பொருள்மயக்கம் உண்டாகும்.  ஆதலால், ரு என்ற சொல்லின் ஈற்றை  வீசி எறிந்தனர்.  பின்பு  வந்தான் என்று அமைந்தது.   வந்தான் என்பதே இறந்தகால வினைமுற்று என்று இயலில் பதிந்துவைத்து,  எறிந்ததைச் சொல்லாதுவிட, உமக்கும்  மூளைக் குழப்பம் ஏற்படாதொழிந்தது.  கடின ஒலிகளை விலக்கியது மொழி இயலின் ஒரு தந்திரம்.  பொருள் மயக்கு உண்டான போது விலக்கியது இன்னொரு தந்திரம்.  என் வாத்தி எமக்கு எப்போதோ சொல்லிவிட்டார்.  உங்கள் வாத்தி உங்களுக்குச் சொல்லாமலா இருப்பார்?  தமிழாசிரியர் தம்ழுணர்வு மிக்கோர்.  எனினும் என்னவுள்ளது என்று  இங்கு அறிந்து மகிழ்க.

இதனை ஒன்றுக்கு மேற்பட்ட நெறிகளில் தமிழாவது காண்புறுத்தல் இயலும். இன்னொரு வகை இங்குள்ளது.  அதனையும் வாயித்து  ( வாசித்து,  யி>சி)   மகிழுறுக:   https://sivamaalaa.blogspot.com/2020/07/blog-post_6.html.   சொல்லியலின் பட்டியலில் இன்ன பிற  உள்ளன. நேரம் கிட்டினால் படித்துச் சிந்தனை விரிக்க.

பயில்தொறும் நூல்நயம் என்றார்  தெய்வப் புலமை நாயனார்.  சிந்திக்கும் தொறும் சொல்நயம் விரிப்பீராக..

மெய்ப்பு பின். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


கருத்துகள் இல்லை: