வெள்ளி, 29 அக்டோபர், 2021

பைரவர் வைரவர்

 காலபைரவருக்குரிய தேய்பிறை அட்டமியும் முற்றவே, இன்று இன்னொரு தினம் ஆயிற்று.  காலபைரவரைப் போற்றினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம் நம்பிக்கை.  "எதையும் நம்புவதென்பதைவிட அதைத் தேடிச்செல்வதுதான் நம் மதம்" என்று வேறுபாடாகச் சிலவேளைகளிற்  குறிக்கப்படும் ஒரு வாழ்வியல் முறையின் இலக்கணம்  தான் -   நமது,   என்றும் சொல்வர்.   எனினும் எதையும் நம்பாமல் வாழ்வதென்பது இயலாத வேலை.  இல்லை என்பவன் இல்லை என்பதை நம்புவது போலவே உள்ள தென்பவன் உள்ள தென்பதை நம்புகின்ற படியால் நம்பிக்கை இல்லாத வாழ்வே உலகில் இல்லை என்ற முடிவுக்கு வந்தாலும் அது சரியாகவே இருக்கும் என்று தோன்றுகின்றது.

பைரவர் என்பது துர்க்கையம்மனின் ஒரு போராளி அல்லது படைஞன் என்று சொல்லப்படுகிறது.  பைரவத் தெய்வம் என்பது  அம்மனின் கணம்.  பைரவர் சேத்திரபாலன் எனவும் குறிக்கப்படுவார். பைரவர் என்பதும் அவரின் பெயரே.  துர்க்கை யம்மன் காடுகிழாள் எனவும் குறிக்கப்பட்டு,  பைரவரின் தாயாய்  "காரிதாய்" எனப்படுதலும் உளது. 

இவைதவிர,  சிவபெருமானின் 64 திருமேனிகளில் பைரவரும் ஒன்றாகிறார். மேலும் அறுபத்து நான்கு பணிகளைச் செய்யுங்கால் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வோர் அடைமொழியில் பெயர் இணைக்கப்பட்டும் அறியப்படுகிறார்.  

பைரவ வழிபாடு பற்றி இத்துணை விரிவாகப் பல்வேறு கருத்தீடுகள் கிட்டுதல் கொண்டு, இவை அமைந்து உலவுதற்குக் கழிபல யாண்டுகள் சென்றிருத்தல் வேண்டுமென்பதை நீங்களே சிந்தித்து அறிந்துகொள்ளலாம்.  Rome was not built in a day என்பதை உன்னுக.

இவை புராணங்களிலிருந்து பெறப்பட்டனவாக உச்சம் பெற்று ஒரு புறம் நிற்க, நாட்டு வழக்கில் வைரவர் என்றால் நாய் என்று அறியப்படுகிறது.  மேலும் தொன்மங்களும் வைரவரைச் சிவபெருமானின் வாகனம் என்று சொல்கின்றன.  இவை அனைத்தையும் இங்கு விரித்துரைத்தல் இயலாதது.

இவ்விடுகையில் வைரவர் - நாய் என்ற பொருளுக்குரிய சொல்லமைப்பை மட்டும் அறிவோம். இதிலும்கூட, இச்சொல் ஒரு பல்பிறப்பி  ( பல்வேறு உள்ளுறைவுகளால் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஒரு முடிபு கொள்ளும் சொல் ) . இவை எல்லாவற்றையும் இங்குச் சொல்லாமல் ஒன்றை மட்டும் சொல்லி மற்றவற்றை அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளின்போது எடுத்துக்கூறுவோம். ஓரே இடுகையில் இதைச் செய்து முடித்தல் இயலாது.

இனி அமைப்பு விளக்கம்:

வை + இரவு + அர் ( அல்லது அன் ) >   வயிரவர்   (  இது ஐகாரக் குறுக்கம்  வை - வ) > வைரவர்.

வை =  வய்.

வயி என்பதில் இகரம் கெட்டது.  ஆக வய் > வை ஆனது.

இதனைப் பொருண்மையில் வரையறவு செய்ய:-

இரவில்  ( வாசலின்முன் காவலுக்கு ) வைக்கப்படுபவர் என்றாகிறது.

இரவில் வைரவர் - பைரவர் என்ற தேவரை அல்லது கடவுளை வீட்டு வாசலில் நிறுத்தும் வழக்கம் எங்கும் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ( இருந்திருந்தால் பின்னூட்டம் செய்தல் வேண்டுகிறோம்).  நாயை இரவில வாசலில் ( கட்டியோ கட்டாமலோ) வைக்கும் வழக்கம் இருந்தது. கட்டாமல் விட்ட வீடுகளிலும் அது வாசற்பக்கம் படுத்துக் கவனமாகக் காக்கும் தன்மையது. ஆனால் வீட்டின் பின் பக்கத்திலும் சுற்றுவட்டத்திலும் அங்கிருந்துகொண்டே அது கவனம் கொள்ளும் திறனுடையது.  ஆதலின் இச்சொல் நாயைக் குறித்ததற்கு இது ஒரு காரணமாகிறது.  வைரவர் - பைரவர் என்பது வ-ப மாற்றீடு.

பிற, வாய்ப்புக் கிட்டுங்கால் பின்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

மேலும் வாசிக்க:-

இங்குப் பயன்படுத்திய சொல்: வாகனம்.  முன்னேற்றப் படிகள்

https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_28.html

வாகனம்:  https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_26.html

கருத்துகள் இல்லை: