வெள்ளி, 22 அக்டோபர், 2021

போஷாக்கு என்ற அயற்பதம்

ஓர் அயற் பயன்பாட்டுக்காக ஒரு சொல்லைப் படைத்தளிக்கும்படி ஒரு தமிழ்ப் புலவனைக் கேட்பதாக வைத்துக்கொள்வோம்.  இது ஒரு வகையில் தமிழ் இலக்கண விதிகளைக் கவனிக்கவேண்டாத ஒரு கட்டற்ற கடமை என்றே சொல்லவேண்டும். இதற்குக் காரணம், பயன்பாடு வேறு மொழியில் என்னும்போது குடாப்பிலிருந்து வெளிவந்த கோழிபோல எப்படி வேண்டுமானாலும் செயல்படும் வசதி ஏற்பட்டுவிடும்.  தமிழென்பதோ பல இலக்கண விதிகள் உள்ள மொழி.  இதில் பலவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டுப்பாடு உள்ளது.  மற்ற மொழிக்கு எனில், அம்மொழிக்கு இலக்கணங்கள் இருந்தால் அவற்றை ஒரு வேளை கவனத்தில் கொள்ளவேண்டி வரலாம்.

போஷாக்கு என்ற சொல்லின் வினை,  போஷித்தல் என்பதாகும்.  ஆகவே போஷி என்ற சொல் எவ்வாறு வந்ததென்பதை முதலில் அறியவேண்டும். போஷித்தல் என்பது ஊட்டமளித்தல் என்ற பொருளது ஆகும்.

ஊட்டச்சத்துக்கள் என்று கருதத்தக்கவை எல்லாம் உடலுக்கு வெளியில்தாம் உள்ளன.  மனிதன் உடலுக்கு ஊட்டமளிக்க,  இவ் வெளியில் கிட்டும் உணவுகளைத்தாம் உட்கொள்ள வேண்டும். அதாவது உடலுக்குள் போகும்படிச் செய்தல் வேண்டும்.

போ > போ இ  > போ இத்தல் .

இது புது > புதுப்பி > புதிப்பித்தல் என்பது போன்றது.  ~பி  என்ற பிறவினை ஆக்க விகுதியானது, உண்மையில்  புது +ப் + இ  என்பதே ஆகும்;  அணிவித்தல் என்பதில் வி என்பது உண்மையில் வ் + இ  என்பதே.  ப் வ் என்ற இடைநிலைகள் உடம்படுத்துவன.  வசதியின்பொருட்டு  ~வி என்றும் ~பி என்றும் விளக்கப்படும்.

அசைஇ ,  காணி(~த்தல்)    என்று வருவனவற்றில் இ என்பதும் வேறன்று. 

இது பின்பு  போயி > போஷி > போஷித்தல்  ஆனது.  ( உடலினுள் போமாறு செய்தல் ).   அதாவது உண்ணுதல் மூலம் ஊட்டச்சத்தை அளித்தல்.

போஷக்கு என்ற தொழிற்பெயரில்,  போஷி + கு >  போஷாக்கு என்று சொல் அமைந்தது.  கு என்பதும் ஒரு சொல்லாக்க விகுதியே. எ-டு:  குறு > குறுக்கு. இதற்கு ஆக்கு என்ற தமிழ்ச்சொல் பின்புல உதவியாயிருந்தது.

இவ்வாறு போஷாக்கு என்ற சொல் அமைந்தது காணலாம்.

இனி, புசித்தல் :  புசி > புசி ஆக்கு > பூசாக்கு > போசாக்கு என்று வந்தது எனினும் அவ்வாறும் அமைதல் கூடுமாதலால், இஃது ஓர் இருபிறப்பி என்று முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




கருத்துகள் இல்லை: