இப்போதெல்லாம் அவர் இவருக்கு ஆப்பு வைத்தார், இவர் அவருக்கு ஆப்பு வைத்தார் என்று எழுதியும் பேசியும் மக்களில் ஒருசாரார் ஆனந்தம் அடைகின்றனர். கொஞ்ச காலத்துக்கு முன்னே சரியான தாக்கீது செய்துவிட்டார் என்று சொல்வார்களாம். இப்போது தாக்கீது என்பதைக் கேட்டு இன்புற முடியவில்லை. சொர்களை ஆய்வதென்றால் எழுத்துமொழி மட்டுமன்று, இயல்பான பேச்சுமொழியையும் நல்லபடியாகக் கவனித்து வேண்டியாங்கு குறிப்புகளும் எடுத்துக்கொள்ளக் கடவது.
ஆப்பு என்பது மரத்தில் ஏற்படும் பிளவுகள் ஒன்று சேர்ந்திடாதபடி இடையில் அடித்து உள்ளிறக்கப்படும் மரத்துண்டு ஆகும். இந்த ஆப்பு இல்லாவிட்டாலோ, மரத்து இடைவெளி மூடிக்கொள்ள நேரிடும். மரத்து வெட்டு இடைவெளி உள்ள இடத்தில் நாம் உட்காருதல் கூடாது. நம் எடை மரத்தில் ஏறியவுடன் ஆப்பு மூடிக்கொண்டு நமக்கு புண்ணை ஏற்படுத்திவிடுமென்பதுடன், ஆபத்தாகவும் முடியக் கூடும். நகரவாழ்நர் இதுபோலும் மரங்களையும் அவற்றில் இடைவெளிகளையும் காண்பதரிதே.
மரங்களை அறுப்பவர், ஆப்புவைத்துக்கொண்டு அறுப்பதுண்டு. இது அறம்பத்துக்கு ( அறு + அம் + பு + அம் , இது ரம்பம் என்று திரிந்துவிட்டது , அறுக்கும் அமைபுடைய வாள் ) அறுக்கும்போது இடைஞ்சல் ஏற்படாமல் எளிதாய் அறுப்பதற்காகும். ஆப்பசைத்த குரங்கின் கதை நீங்கள் அறிந்திருக்கலாம். பாவம் அந்தக் குரங்கு. அறியாமல் ஒருவர் செய்த பிழைக்கும் அடைந்த விளைதுயருக்கும் நாம் ஏன் ஆனந்தமடையவேண்டும்?
ஓரு மரத்துண்டை அகப்படுத்தும் மரத்து வெடுப்பு, வைக்கும் பொருளை அகப்படுத்திக்கொள்ளும். அகப்படுத்துதல் கருத்திலிருந்துதான் ஆப்பு என்ற சொல் உண்டானது.
அகம் > அகம் + பு > அக + பு > அகப்பு > ஆப்பு ஆகும்.
அகத்து > ஆத்து (ஆத்துக்காரி ) என்பது போலும் திரிபே இதுவாகும்.
அகப்படுத்தும் இடைவெளி என்று இதை வரையறவு செய்யலாம்.
ஆப்பு என்பது அணியியல் வழக்காக ( figurative or with secondary meaning ) ஒன்றைச் செய்த மனிதருக்கு ஒரு துயர்வினையை விளைப்பதைக் குறிக்க வழங்குவர். " தட்டிக்கேட்டவர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டான்" என்ற வாக்கியத்தில், தட்டிக்கேட்டல், ஆப்பு வைத்தல் என்பன அணியியல் வழக்கு. ஏனென்றால் எதையும் தட்டவும் இல்லை; மரத்துண்டுச் செருகலும் எதுவுமில்லை என்பன அறிவீர். Putting two and two together, he came to that conclusion என்ற ஆங்கில வாக்கியத்திலும் அணியியல் வழக்கு உள்ளது. An inference is drawn , A certain meaning is hinted, Insinuation என்பனவும் அறிந்துகொள்வீர். இத்தகைய பயன்பாடுகள் இலவாயின் மொழிகளும் முழுமை பெறமாட்டா.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக