வரலாற்றுக் காலத்துக்கு முந்தியிலிருந்து சிவப்பு என்பது ஓர் அடிப்படை
நிறமாகத் திகழ்ந்துவருகிறது. தமிழரிடை மட்டுமன்று
பிற இன்ங்களிடமும் ஒரு பண்பாட்டுக் கூறாக இது நிலவுதல் காணலாம். திருமணம் முன்மையான சடங்காகக் கருதப்பட்டமையால், சீனா முதலான தேயங்களில் மணப்பெண் முழுமையாகச் சிவப்பினால்
அலங்காரம் செய்யப்பட்டுக் கூடி யிருப்போர்முன்
கொண்டுவரப்படுகிறாள். அங்கு சிவப்பே மங்கல
நிறமாகும். இதேபோன்று ஏனைப் பண்பாட்டு நாடுகளிலும்
சிவப்பு கோலோச்சியுள்ளது.
நாம் சிவப்பு(குங்கும)ப்பொட்டு
இடுவதன் காரணமும் மங்கலம் எனற் பொருட்டே. கும் என்பது ஒரு தமிழ் அடிக்சொல். இதற்குச்
சேர்த்துவைத்தல் என்று பொருள். இதை அறிந்துகொள்ள
குமித்தல் என்ற சொல்லைப் பாருங்கள். கும்> குமி. நெல்லைக் குமித்து வைத்தார்கள்
என்பார். குமி பின் குவி என்று திரிந்தது, மகர வகரப் போலி.
மிஞ்சு > விஞ்சு, மகர வகரப் போலி. நாம் குங்குமம் இடுவது இந்தக் கூட்டுறவைக் குறிப்பதே. ஆண் பெண்
இணைந்த இல்லற வாழ்க்கை. கும் என்ற அடிச்சொல்
இரட்டி வந்து அம் விகுதி பெற்றது: கும்+கும்+அம் = குங்குமம். கும்முதல்: குமுக்குதல்;
கும்> கும்மி; கும்> கும்மாளம்.
இவை இணைந்து செய்தல் அடிப்படைக் கருத்து.
நாளடைவில் சில குவிதல் = கூடுதற் கருத்தில்
சற்று நீங்கி நிற்கலாம். பிற்காலத்து கும் என்பது சிவப்பு என்ற பொருள்டைவு கொண்டது.
குமரி என்பதும் திரட்சிக்கருத்து ஆகும். இளமையில்
உடல் திரட்சியே பெரும்பான்மை.
முழுமுதல் கடவுளான சிவனை,
எடுத்துரைக்கும் நிறம் சிவப்பே ஆகும்.
சொல்லமைப்பும் சிவ> சிவப்பு; சிவ>
சிவ+அம் = சிவம் என்றிருத்தலை அறியலாம். செங்கதிரோன்
என்பதே சூரியனுக்குத் தமிழில் பெயர். வெண்கதிரெனற்பாலது நிலவு குறிப்பதே. பெண்ணுக்கும் கவிகள் சிறப்பாக ஓதுவன செவ்விதழும்
புன்சிரிப்புமாகும்.
சிவனிலிருந்து தோன்றிய
முருகப் பெருமானும் செவ்வேள் என்றே தமிழ் நூல்கள் ஓதுகின்றன. தீமை ஏதுமிலாத அடிகள்
செவ்வடிகள்: இது செ+ அடி = சே+அடி =
சேவடி ஆகிறது. செக்கல் செக்கம் என்பனவும்
செம்மை நிறமே. செய்ய தாமரை என்பதென்ன?
நீரால் கழுவப்படும் மலர் கழுமலர். இது பின் தன் ழுகரத்தை இழந்து கமலம் என்று ஆனது. இது அயற்றிரிபில் கமல என்று மாறிற்று;. இத்தகைய சொற்றிரிபுகள் தமிழின் வளத்தைக் காட்டுகின்றன.
செந்தமிழ் என்பது பிறமொழி விரவாத நல்ல தமிழ். செம்மை நிறம் எதைக் குறிக்கிறது கண்டீரோ? செந்தமிழியற்கை சிவணிய நிலம் என்கிறார் பனம்பாரனார். சிவணுதல் என்றால் பொருந்துதல்; அதுவும் செம்மையாகப் பொருந்தி நிற்றல். சி: செம்மை; அண் = அண்மி
நிற்றல். சி+ அண் = சிவண் >
சிவணுதல். சிறப்பாகப் பொருந்துதல்
என்பது சொல்லமைப்புப் பொருள்.
இவற்றையும் படித்து சிவப்பைப் பற்றிய புரிதல்களை விரித்துக்கொள்ளுங்கள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக