சனி, 26 ஜனவரி, 2019

கழிச்சலைத் தந்த பேதா.

தமிழ் நாட்டில் சிற்றூரில் வாழும் மக்கள்  பெரும்பாலும் அரசு அதிகாரிகளுக்கு அஞ்சி நடுங்கினோர்தாம். சங்க இலக்கியங்களில் எந்தக் குழுவினரும் எங்கேயும் போராட்டங்கள் செய்ததனைக் குறிக்கும் பாடல் எவையும் யாம் படித்ததாக நினைவில் இல்லை.  இருந்தனவெனின் அவற்றைப் பின்னூட்டம் செய்து உதவவும்.  இல்லை என்றே நினைக்கின்றோம்.

கணவன் கள்வனல்லன் என்பதை மெய்ப்பிக்க மதுரைக்கு எழுந்த கண்ணகி ஒரு தனிப் போராளியே யன்றி  அவளுக்குப் பின் ஒரு பெரிய படை திரண்டு மன்னனை எதிர்த்தல் போன்ற செய்திகளை  யாமும் கேள்விப்படவில்லை.  அக்காலத் தமிழகத்தில் போராட்டங்கள் மிகக் குறைவு அல்லது இல என்றுதான் முடிக்கவேண்டும்.

போராட்டம் மறியல் கறுப்புக்கொடி காட்டுதல் எழுச்சிப் பேரணி எல்லாம் இற்றைத் தமிழில் ஏற்பட்டுள்ள தொடர்கள்.

தமிழர்கள் பெரும்பாலும் அச்சவுணர்ச்சி கூடுதலாக உள்ளவர்கள். சாதிச் சண்டைகளை வைத்து அவர்களில் எத்தரப்பினரும் வீறு உடையோர் என்று  கூறுதற்கில்லை.  இத்தகு அச்சவுணர்ச்சி உடையோர்க்குப் பயிற்சி அளித்துப் படைநடத்தி வெற்றிகள் பல பெற்ற இராச இராச சோழன் போன்றவர்கள் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவர்கள்.  ஒரு சிறந்த படைத்தளபதியின் கடமை திறமை என்பன வெல்லாம் கோழைகளை வீரர்களாக்கிப் படைநடத்துவதுதான். இப்படித் திறன்பல உள்ள மன்னர்கள் தமிழருள் ஏராளமாக இருந்துள்ளனர் என்பதைப் புறம்,  சிலம்பு முதலியவை மிக்க  நன்றாக எடுத்துக்காட்டுகின்றன.

உடல்நலத்துறையினர் ஊசிபோட வந்துவிட்டால் ஓடி ஒளிந்துகொள்வோர் இன்னும் நாட்டில் உள்ளனர் என்று தெரிகிறது.

ஒரு போலிஸ்கரன் அல்லது காவல்துறைஞன் ஊருக்குள் வந்துவிட்டால் ஓடி ஓளிந்துகொள்வது இவர்கள் இயல்பு. கொஞ்ச காலத்துக்கு முன் காவல்துறைஞனுக்குப் பேதா தாணாக்காரன் என்ற பெயர்களெல்லாம் இருந்தன.  இன்று கோவிலில் நடப்பது பேதாமார் உபயம்,  நேற்று தாணாக்காரன் வந்தான் என்பன போலும் உரையாடல்கள் அந்தக் காலத்தில் மிகுதி.

அவன் வந்தவுடன் சிலருக்குக் கழிச்சல் வந்துவிடும்.  அல்லது சிறுநீரை அடக்கிக்கொள்ள முடியாமல் போய்விடும்.  அப்படிப் பட்ட அவனுக்குத்தான் பேதா என்பது பெயர்.

பெய் + தா >  பெய்தா > பேதா.  (  பெய்தலை அல்லது பேதியைத் தருபவன் )

பெய் என்பதிலிருந்தே பேதி என்ற சொல்லும் அமைந்தது.  பெய்  தி >  பேதி.  இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  பேதியாவது கழிச்சல்.

செய்தி என்பது சேதி என்று திரிந்தன்ன மாற்றமே  பெய்தி எனற்பாலது பேதி என்று திரிந்தமையும் என்று உணர்க.

தட்டச்சுப்பிழைகள் காணின் பின் திருத்தம் பெறும்.




கருத்துகள் இல்லை: