செவ்வாய், 29 ஜனவரி, 2019

தமிழ் என்ன மலையாளம் எந்து

இன்று இரண்டு சொற்களைப் பற்றிச் சிந்திப்போம்.

எவனாவது சொல்லிக்கொடுப்பான் என்று காத்திருக்கக் கூடாது.  ஒரு வாத்தியார்  அவருக்கு அவர்தம் ஆசிரியர் கற்றுக்கொடுத்ததையும் தாமே உணர்ந்த சிலவற்றையும் சொல்லிக்கொடுப்பார்.  ஆசிரியர் சிலர் அதிகமாகப் பேசாமல்  மேலீட்டு ஒளிச்செலுத்தியின் ( overhead projector) மூலமாகத் தம்  வரைவுகளைத் திரையில் காட்டி எழுதிக்கொள்ளுங்கள், இவையெல்லாம் தேர்வுக்கு வரும் என்று சொல்லிவிடுவார்.   அதுவும் கற்பிப்பதுதான்.  ஒரு பாடநூலில் உள்ளதைச் சுருக்கிவரைந்து  உதவுவதும் கற்பிப்பு என்றே சொல்வோம்.  இரண்டாயிரம் பக்கங்கள் உள்ள ஒரு பாடநூலை முமுமையாகப் படித்து முடிக்க மாணவன் கரணம் அன்றோ போடவேண்டும்?
விரிவுரையாளர் பேசுகையில் குறிப்புகள் எடுத்துக்கொள்வது நல்ல பழக்கம்.

இனிச் சொற்களைக் கவனிப்போம்.

என்ன என்பது பன்மை வடிவில் உள்ளது.  என்ன என்ற சொல்லில்  இறுதி அகரம் பன்மைப் பொருள் உடையது.  ஓடுகிறது என்னாமல் ஓடுகின்றன எனின் பலவற்றைக் குறிக்கும் காண்க.  து: ஒருமை; அ : பன்மை..

என் +  அ  =  என்ன.

இப்படிப் பார்த்தல்  இது  என்ன?  என்று கேட்பது தவறு என்பது புலப்படும்.  இது என்பது ஒருமை.  என்ன என்பது பன்மை.  ஆகவே பொருந்தவில்லை.  இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

என் என்பதே அடிச்சொல்.  என்ன என்பது அகரம் சேர்ந்த பன்மை வடிவம்.

வாழ்ந்தாலும் செத்தாலும் என்?  என்று பண்டைத் தமிழில் கேட்பதே இலக்கணப்படி சரியானது. இந்த இரண்டு செயல்களுக்கும் ஒருமை பன்மை தேவையற்றதாகும்.

ஒருமை பன்மை என்பது பெரும்பாலும் எண்ணிக்கைக்குரியவற்றுக்கே பொருந்துவது.

ஆனால் மலையாளத்தில் எந்து  என்ற சொல்லே வழங்குகிறது.  என்ன என்பது வழங்கவில்லை.  எந்து என்பது ஒருமை வடிவம்.  என் + து  = எந்து.    வாக்கியத்தில் வரும் சொற்றொடர்ப் புணரியலின்படி  என் து  என்பதை இணைக்க அது "என்று" என வந்து காலக் கேள்வியாகும்.  ஆகவே அப்படிப் புணர்த்தாமல் என் து > எந்து  என்றே முடிக்கவேண்டும்.  அந்தச் சொற்றொடர்ப் புணரியல் இலக்கணம் ( என் து > என்று  எனவாதல் ) இங்குப் பொருந்தாது.  பல சொற்கள் இப்படிப் புணர்வன. சில காண்போம்.

பின் >  பின் தி >  பிந்தி
மன் >  மன்  தி >  மந்தி.
ஆதி  + மன் + தி  =  ஆதிமந்தி  (  சோழன் கரிகாலன் மகள் )
மன் + திறம் >  மந்திரம்  (  நிலையாகும் தன்மை பெற்ற வாயொலி வெளிப்பாடு)

அன் து >  அன்று > அன்றுதல்  (முடிதல் ) 1
அன் தி  >  அந்தி  ( பகலின் ஈற்றுக்  காலம் ) 2
முதலாவது  என்று என்ற பாணியிலும்  இரண்டாவது  எந்து என்ற பாணியிலும் இற்றன காண்பீர்

இரண்டிலும் வருமீறு தகர வருக்கமே .  அடிச்சொல்  அன் . சுட்டு : அ .

இது எந்து?  இது எலி.   ( சரி.  காரணம்: ஒருமை )
இவை என்ன?  இவை எலிகள்  (  சரி.  காரணம் பன்மை)

தமிழில் ஒருமைப் பொருளை என்ன என்று பன்மையில் கேட்பது தவறானாலும் மரபில் வந்துவிட்ட படியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழுவமைதி ஆகிறது என்பதை உணரவும்.  ஒன்று தவறாக இருக்கலாம்; இலக்கணத்துக்குப் பொருந்தாததாகவும் இருக்கலாம்,  பரவலாக வழக்கில் உள்ளதாலும் எந்து என்ற வடிவம் தமிழில் வழக்கிறந்துவிட்ட படியினாலும் அதை மலையாளக் கரையிலிருந்து மீட்டுவந்துவிடலாம் என்றாலும் குழப்படி ஆகுமென்பதால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழுவமைதி ஆகிறது,

சரியில்லை என்றாலும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறது நம் இலக்கணம்.  ஐந்து பத்து நூற்றாண்டுகள் பின்னால் போய் இத்தகைய தவறுகளைத் திருத்திக்கொண் டிருக்க முடியாதல்லவா?

எழுத்துப் பிழைகள் திருத்தம் பின்

கருத்துகள் இல்லை: