சனி, 26 ஜனவரி, 2019

அடிச்சொற்கள் மூலங்கள் வேறுபாடு.

சென்ற இடுகையில் பேதி,  பேதா என்ற சொற்களைப் பற்றி உரையாடினோம்.

இவற்றின் அடிச்சொல் பெய்தல் ( உடலிலிருந்து வெளியேற்றுதல்,  அல்லது வானிலிருந்து பொழிதல் ) எனற்பாலது உணர்விக்கப்பட்டது.

இதன் தொடர்பில் வேறு சில சொற்களையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

பேதம் (  அதாவது  வேறுபாடு ) குறிக்கும் சொல்லும் உள்ளது.  இதுவும் பே என்ற சொல்லினின்றுதான் வருகிறது என்றாலும்  இவற்றின் மூலச் சொற்கள் வேறுபட்டவை என்பதை இப்போது புரிந்துகொள்வோம்.

பெய்தல் (  அடிச்சொல் .)

இது பெய் > பே  என்று திரிந்து பேதி, பேதா முதலிய சொற்களைத் தோற்றுவித்தது.

பெய் > பே > பேதி:  உடலினின்றும் வெளியேற்றுகை.

பெய் > பே >  பேதா :   கண்டவுடன் கழிச்சலாகிய அச்சத்தைத் தருபவன்.

இவற்றுள் இரண்டாவது குறித்த சொல் போலும் இன்னொரு சொல் "வாய்தா" என்பதாகும்.

வருவாய் தா என்பதன் சுருக்கச் சொல்லே வாய்தா.  விளைச்சலிலிருந்து அரசனுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்படும்.  அதைத் தருவதுதான் வாய்தா. தா என்பது ஓரெழுத்து ஒருசொல் ஆதலின் அதில் சுருக்கம் ஒன்றுமில்லை. வருவாய் என்பதில் வரு என்பது வெட்டுண்டு, வாய் என்று நின்று தாவுடன் புணர்ந்து சொல்லமைந்தது காண்க.

பேதா என்பதில் தாவென்பது தருவோன் என்று உயர்திணைப் பொருளையும் வாய்தா என்பதில் தரப்படுவது என்று அஃறிணைப் பொருளையும் குறித்ததனால் சொல்லில் இல்லாத பொருட்களைத் தழுவிய தாவென்னும் ஈற்றுச்சொல் இந்தச் சொல்லமைப்பில் இயற்சொல்லாகாது.  திரிசொல்லே.  தா என்பது ஏவல் வினையாகிக் கொடு என்பதற் கீடாய் வருமிடத்து அது இயற்சொல் ஆகும்.  இத் திரிசொற்களின் ஒரு பாதி அடிச்சொல் பெய் என்பதன் திரிபாதலின் இயற்சொல்லன்று என்பதற்கு அதுவும் ஒரு கூடுதற்  காரணமும் ஆகும்.  முடிபு இவை திரிசொற்கள் என்பதேயாகும்.

தமிழிற் திரிசொற்கள் பலவாதலின் திரிசொற்களெல்லாம் தமிழன்று   என்ற வாதம் மடமை ஆகும்.

ஆனால் பேதம் என்பதன் அடிச்சொல் வேறு.  அது பெயர்தல் என்பதன் அடிப் பிறந்ததாகும்.   பெயர் என்பது பே என்று திரியும்.   பெயர் என்பது பேர்  ( எத்தனை பேர்?  உன் பேர் என்ன? ) என்பதாய் மாற்றம் கொள்ளுதல்  பேச்சு வழக்காதலின் இப்போது:

பெய் >  பே;
பெயர் > பே;    என

இருவாறு வருதல் அறிந்து கொள்க.

அடுத்த பேபே என்ற அச்சக்குறிப்புக் கிளவியும் அடிச்சொல்லாகிப் பிற சொற்களைப் பிறப்பிக்கும்.  இப்படி அமைந்தது பே> பேய் என்ற என்ற சொல்.

பேபே என்பது மழுப்பல் கருத்திலும் வரும்:  " உனக்கும் பேபே, ங்கொப்பனுக்கும்  பேபே "  என்ற சிற்றூர்த் தொடர் காண்க.


அறிந்து மகிழ்வீர்.

பிழைகள் பின் திருத்தம்பெறும்.


கருத்துகள் இல்லை: