புதன், 30 ஜனவரி, 2019

தமிழ் நேசன் நாளிதழ் நிறுத்தம் மலேசியாவில்

தமிழ் நேசன் என்பது மலேசியாவில் ( முன்னர் மலாயா என்று அறியப்பட்ட பகுதியில் )  வெளிவந்து கொண்டிருந்த நாளிதழ்.  பிப்ரவரி ஒன்று முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக செய்தி வந்துள்ளது.

தமிழ்த் தொண்டு புரிந்துவந்த நேசன் இதழ் நிறுத்தப்படுவது கவலைக்குரியதுதான். நேசனால் எழுத்தாளர் நிலைக்குச் சென்றவர்களும் கவிஞர் தகுதி பெற்றவர்களும் செய்திகள் அறிந்து இன்புற்றவர்களும் பலர் ஆவர். சட்டத்துறையில் பட்டம்பெற்ற நம் நண்பர் திரு. அ. மாசிலாமணி அவர்கள் கூட ஒரு கட்டுரையை அதில் வெளியிட்டிருந்தார்.  அது ஒரு குமுக அமைப்பைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை.  அதைத் தொடர்ந்து  பல ஆய்வுகள் வெளிவந்தன. தமிழ் நேசனின் இவ்வாறு நேயம் பெற்ற அறிவாளிகள் பலர் ஆவர்.

இப்போது மலேசியாவில் பல தமிழ்ப் பத்திரிகைகள் இருப்பதாகத் தெரிகிறது. இப்போது பத்திரிகைகள் நாளிதழ்கள் முதலியவை அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை.  எல்லாச் செய்திகளும் கணினி மூலமாகவும் கைப்பேசி மூலமாகவும் வந்துவிடுகின்றன.  உலகம் மாறிவிட்டது.

சிங்கப்பூரில் " தி இன்டிபென்டன்ட்"  முதலிய கணினி வழி இதழ்கள் இப்போது சக்கை போடு போடுகின்றன.  நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்   இவ் விதழ்களைப் ப் படிக்கமுடியும்.  தாளிதழ்கள் இவ்வாறு பயன் காணக் கூடியவை அல்ல. விற்பனை வீழ்ச்சிக்கு இதுவும் காரணங்களில் ஒன்றாகலாம்.

கவிதை:

முப்பாட்டன் காலமுதல் முத்தமிழைச் சுமந்துகொண்டு
தப்பாமல் தவழ்ந்துவந்த  தமிழ்நேசற் கோநிறுத்தம் ?
எப்பாலா ரும்புகழ இனிக்குநகை யுடன்வருவாய்
எப்போது ம் இனிக்காணா எழிலெண்ணிக் கவல்கின்றோம்.

நாளைமுதல் கோளில்பொறி நயவாநிலை எய்திடினும்
நீளும்பல  நல்லாண்டுகள் நீஇயற்று  தமிழ்த்தொண்டை
நாளும்யாங்  களெல்லாமே  நன்னினைவில்   தாளிகைகள்
பாளையத்துள் அரசெனவே பண்புடனே புகழ்வோமே.
 

கருத்துகள் இல்லை: