ஞாயிறு, 6 ஜனவரி, 2019

குரங்கு விலங்குச் சொற்களும் பிறசொற்களும்( திரிபுகள்.)

குரங்கு என்ற சொல்லைப் பற்றி இன்று உரையாடுவோம். பிறவும் அறிவோம்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது டார்வின் என்னும் அறிஞரின் ஆய்வு முடிவு. பல்வேறு சமய நூல்களில்  எவையும் இம்முடிபினை ஒத்துக்கொள்ளவில்லை.  எனினும் அஃது அறிவியல்  தெரிவியற் கருத்தாகத் தொடர்கிறது.  தெரிவியல் எனின் இன்னும் மெய்ப்பிக்கப்படாத முடிபு.  மெய்ப்பிக்கப் பட்டுவிடுமாயின் அது புரிவியல் எனப்படும்.

குரங்கு என்பது   ஓர் ஒப்பொலிச் சொல் என்று சொன்னூல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.   குரங்கு குர் என்ற ஒலியை ஏற்படுத்துவது.  இந்த "குர்" என்ற ஒலியை ஒத்தபடி,   சொல்லமைந்துள்ள படியினால் அது ஒப்பொலிச் சொல்.

வேறு ஒப்பொலிச் சொற்கள் சில:

மா    -  மாடு.
காழ்காழ்  -  கழுதை.
கொக்கொக்  -   கோழி
கா  கா  -    காக்கை  காகம்

குரங்கு என்ற சொல்  குர் + அங்கு என்று பிரிக்க  அங்கு என்ற இறுதி பெற்றிருப்பதைக் காணலாம்.    அங்கு என்பதை  அங்கு என்னும் இடச்சுட்டு என்பதினும்   அம்  - இடைநிலை,  கு  - விகுதி என்பதே ஏய்வான கருத்துமுடிபு ஆகும்.  ஏய்தல் - பொருந்துதல்.  (  "ஏய உணர்விக்கும் என்னம்மை"  என்ற பாட்டுச் சொற்றொடரை நினைத்துக்கொள்க.  )

மந்தி என்ற இன்னொரு சொல்- பெரிய குரங்கு வகை.  மனிதன்போலப் பெரிதாக இருப்பதனால்  அதற்கு இடப்பட்ட பெயர் :  மன் என்ற அடிச்சொல்லைக் கொண்டே அமைந்துள்ளது.    மன் + தி :  மந்தி.   மன் என்ற அடிச்சொல்லே  மனிதன் என்பதிலும் உள்ளது.  மன்+ இது + அன்.  இது தகரச் சகரப் போலியினால்  மனுசன் என்று பேச்சில் வரும்.   மனிதன் >  மனுசன்.  இது மனுஷன்,  மனுஷ்ய என்று மெருகு பெறும்.  மலாய் மொழியில் மனுசியா என்று திரியும்.

மந்தி என்பது புணரியல் முறையில் மன்றி என்று வராமல் மன்-தி என்றே ஒலித்து மந்தி என்று எழுதப்பெறும்.   முந்தி  பிந்தி என்ற சொற்களில் போல இச்சொல்லிலும் அமையும்.

அன்று என்பது முடிந்த நாள் என்று பொருள்படும்.   அன்றுதல் என்பது முடிதல் என்னும் இதன் வினைச்சொல்.   அன்று என்பதிலிருந்தே  அந்து என்று துணிகட்கு முடிவு கட்டும் ஒரு சிறு பூச்சியும் குறிக்கப்பெறும்.  அதற்குப் போடும் ஓர் மருந்துருண்டை " அந்துருண்டை"  எனப்படும்.   ஒரு பகலின் முடிவு  அந்தி எனப்படும்.     அன்+து =  அன்று.   சுட்டடிச் சொல்.   அன்+தி = அந்தி.  பகலின் முடிதல்.  முந்தி என்பது முன்றி என்று அமையாததுபோலவே அன் தி என்பதும் அன்றி என்று அமைந்திலது.

அன்றை -  அற்றை.  இன்றை - இற்றை என்ற வடிவங்களும் நீங்கள் அறிந்தவையே.

அந்தி என்பது பகலின் இறுதி ஆகும்.  அப்போது   இருளும் ஒளியும் மயங்கும்.  மயங்குதலாவது கலத்தல்.

அந்தி மயங்குதடி  ஆசை பெருகுதடி
கந்தன் வரக்காணேனே

என்பதைப் பாடுங்கள்.

கந்தன் என்பதும்:

கன் > கனல்.
கன் >  கனலி ( சூரியன்)
கன் + து =  கந்து.
கன் > கனல்தல்  ( கனறல் ).  ல்+த=  ற.
கன்  >  கனற்பு  :  அடுப்பு.
கன்  > கனற்று.  கனற்றுதல்.
கன் >  கன்றல்..   கன்>  கன் து  > கன்று >  கன்றல்  ( கன்று அல்)
கன் >  கன்றுதல் :  கருகுதல்.

கன் > கன் து > கந்து அன் > கந்தன்.

இன்னொரு சொல்:  அன் > அன் து > அந்து  >  அந்தி.

அரியது கேட்கின் எரிதவழ் வேலோய் -   ஒளவையார்.

கந்தன் என்ற  முருகன் பெயரும் கனல் என்பதனுடன் தொடர்புடையது.  அடிச்சொல் கன்.

பல சொற்களை விளக்கவில்லை. பின்னொரு நாள் அதை நிறைவேற்றுவோம்.

திருத்தம் பின்

கருத்துகள் இல்லை: