செவ்வாய், 15 ஜனவரி, 2019

சங்கத வரலாறும் சில சொற்களும்.

நீங்கள் தட்சிணாயனம் உத்தராயனம்  என்ற இருசொற்களையும் பற்றி  அறிந்திருப்பீர்கள். இவை செந்தமிழ்ச் சொற்கள் என்று எவரும் கூறார்.  சங்கதச் சொற்களே.  ஆனால் சங்கதத்தில் உள்ள சொற்றொகுதியை ஆய்வுசெய்த பிரஞ்சு ஆய்வாளர்களும் குழுவினரும் (டாக்டர் லகோவரி குழுவினர் )  மூன்றில் ஒருபகுதி திராவிடச் சொற்களை உடையது சங்கதம் ( சமஸ்கிருதம் ) என்றனர்.  இன்னொரு மூன்றிலொன்று வெளிநாட்டுச் சொற்கள்.  மீதமுள்ள மூன்றிலொன்று  அறிதற்கியலாத பிறப்புடையவை என்றனர். இந்த முடிபு மனத்துள் நிற்க, மேல் நாம் கண்ட சொற்களை அல்லது கிளவிகளை நுணுக்கி நோக்கினால் இவை தமிழ் மூலமுடையன என்பது தெற்றெனப் புலப்படும். சங்கதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்று வகைப்படுத்தப்பட்டிருப்பினும் வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பாரின் கூற்றுப்படி அதிலுள்ள வெளிச்சொற்கள் இந்தியாவில் வழங்கிச் சங்கதத்தினால் மேற்கொள்ளப்பட்டவை என்று முடிக்கின்றார்.  இவை அதனுள் இருத்தலினால் ஆரியர் என்போர் வந்தனரென்றோ சங்கதம் வெளிநாட்டினின்றும் கொணரப்பட்டதென்றோ கூறுதற்கில்லை என்று முடிவு செய்கின்றார்.இவை சரியான முடிவுகள் என்று யாம் உடன்படுவோம்.  ஆரியர் திராவிடர் என்ற சொற்களும் இனங்களைக் குறிப்பவை அல்ல. பல வெளிநாட்டினர் இந்தியாவிற்குப் பல காரணங்களால் வந்திருக்கலாம் எனினும் அவர்கள் ஆரியர் அல்லர்; மற்றும் ஆரியர் என்பதும் ஓர் இனப்பெயர் அன்று. ஆரியம் என்பது மொழிக்குடும்பத்தின் பெயர்; திராவிடம் என்பதும் ஒரு மொழிக்குடும்பத்தின் பெயரே.  சமஸ்கிருதம் என்னும் சங்கதத்தின் முன்னோடி மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கின.  அவை பரவலாக மக்கள் பேசிய மொழிகள்.  அவற்றுக்குப் பாகதங்கள் ( பிராகிருதங்கள் )  என்று பெயர்.  சங்கத்தின் பிற்பட்ட மொழிகளும் பாகதங்கள் என்றே சொல்லப்படுகின்றன.  பிற்பட்ட பாகதங்கள் பல சங்கதச் சொற்களை உள்வாங்கியவை.

சங்கதம் வெளிநாட்டு மொழி என்பதற்கான ஆதாரங்கள் எவை?  ஒன்றிரண்டு கூறுவோம். யானைக்குப் பெயர் சங்கதத்தில் இல்லை.   கடைந்ததுபோன்ற முகமுடையது என்று அதற்கு ஒரு காரணப் பெயரைச் சங்கதம் கையாளுகிறது.  கடைதல் வினைச்சொல்.  கடை >  கட + அம் = கஜ + அம் = கஜ என்று சொல்லமைகிறது.  மயிலுக்குப் பெயர் சங்கத்தில் இல்லை:  அதற்கும் ஒரு காரணப் பெயர் அங்கு வழங்குகிறது   :   மயில் :  மயூர.    இதை மை போன்ற புள்ளிகள் ஊர்கின்ற இறகுகளை உடைய பறவை என்று தமிழில் சொல்லி,  மை ஊர என்று ஒலித்து,  மயூரம் என்று முடித்தால் அது எந்த மொழியின் மூலங்களை உடையது என்று தெரியாதவனுக்கும் தெரிந்துவிடும்.
ஆரியர் தோன்றிய இடம் என்று கருத்துரைக்கப் பட்ட உருசியப் பகுதிகளில் இந்த விலங்குகள் பறவைகள் இல்லை; ஆகவேதான்  சங்கதம் வெளிமொழி என்று ஐரோப்பிய அறிஞர்கள் முடிவுசெய்து அது வெளிநாட்டது என்றனர்.
சங்கதம் உள் நாட்டு மொழியாய் இருந்தாலும்   மயிலும் யானையும் பற்றிய கிளவிகளுக்குத்  தமிழ் போன்ற மொழியிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க முடியும்.  அல்லது தமிழுக்கு இவற்றைத் தந்திருக்க முடியும்.  ஆகையால் இதுபோலும் காரணங்கள் முடிவானவை அல்ல என்பதை உணர முடியும்.  சொற்றொகுதிப் பரிமாற்றம் என்பது உள்நாட்டு மொழிகளிலும் நடைபெறும்; வெளிநாட்டு மொழிகளிடையிலும் நடைபெறும்;  உள்ளிருக்கும் மொழிக்கும் வெளிமொழிக்கும் இடையிலும் நடைபெறும்.  இவற்றை வைத்து ஒரு தெரிவியலை ( தியரி )  உண்டுபண்ணுதல் பொருந்தாதது காண்க.

இனிச் சொற்களுக்கு வருவோம்:

உ :  முன் அல்லது மேல்.  தரம் :   தரு+ அம்.  அ:   அங்கு;   அன்: இடைநிலை; அம் :  விகுதி.  இவற்றைப் புணர்த்த,  உ + தர + அ + அன் + அம் = உத்தராயனம் ஆகிறது.  உத்தரம்:  காரணப்பெயர்.  உயர்ந்த திசையென்பது பொருள். காரணப் பெயர்.   ஒன்றிலிருந்து பெறப்படுவதே தரம்:  அது தரும் மதிப்பு நிலை: தரம்.
உத்தரமாவது உயர்ந்த திசை தருவது ஆகும்.  வடக்கு.

தெற்கணம் :  தெக்கணம் > தெட்சிணம்.>  தட்சிணம்.

தட்சிண +  அ + அன் + அம் =  தட்சிணாயனம்.

உத்தரம் தட்சிணம் என்பவை தமிழ் மூலங்கள்.

கண் என்பது இடம் என்றும் பொருள்படும்.  இதன் `கண்,  அதன்,கண் என்பவை இங்கு அங்கு என  இடப்பொருள் தருபவை.   கண் > கணம்:  இடம்.  தெற்கணம் : தென்திசை.  கண் என்பது ஓர் உருபுமாகும்.

மற்றவை பின்.  அறிக மகிழ்க.

திருத்தங்கள்;  பின்னர்.


கருத்துகள் இல்லை: