இன்று சக்தி என்ற சொல்லின் அமைப்பை அறிந்துகொள்வோம்.
இச்சொல் தமிழில் பண்டைக் காலம் தொட்டு வழங்கி வந்தாலும் சக்தி என்ற சொல்வடிவம் சங்க இலக்கியங்களில் காணக் கிட்டுவதில்லை. பழந்தமிழில் சக்தி என்பது சத்தி என்றும் பக்தி என்பது பத்தி என்றும் முக்தி என்பது முத்தி என்றுமே வழங்கின.
பக்தி என்பது முன் பற்றி > பத்தி என்பதுதான்.
பற்று : தெய்வப்பற்று. பற்றி : பற்றுடன் இருத்தல். இது பத்தி என்று திரிந்து
வழக்குப்பெற்ற போது பற்றி என்பது வழக்கிறந்தது.
பத்து ( பற்று) எனவே வழங்கியிருக்கலாம் ஆனால் பத்து என்பது ஒருவிதச்
சொறியையும் குறித்த காரணத்தால் வேறுபடுத்தப் பத்தி என்று திரியவேண்டியதாயிற்று.
முக்தி என்பது முற்று > முத்து > முத்தி > முக்தி என்பதே.
இது முது > முத்து > முத்தி > முக்தி எனினுமாம்.
முத்தி என்பது சிறுபிள்ளைகட்குப் பெரியோர் கொடுக்கும் முத்தத்தையும் குறித்ததால் முக்தி என்பது பின்னாளில் திரிந்து இறைப்பற்று முதிர்வில் அடையும் வெற்றிநிலையைக் குறித்தது.
ஆனால் சக்தி என்பது சற்று வேறு விதமாக அமைந்தது. எப்படி என்று பார்ப்போம்.
சக்தி என்பதன் முந்து வடிவு சத்தி என்பது.
முருகப் பெருமானுக்குச் சத்திவேல் என்றும் பெயருண்டு.
சத்தி என்பது முந்துவடிவில் சத்து என்பது,
சத்து என்பதோ முன்வடிவில் தத்து என்பதாம்.
தத்து என்பது தன்னுடையது என்று பொருள்படும்.
தன் து > தத் து > சத்து > சத்தி > சக்தி ஆகும்.
தான் > தன் : தன் து. அதாவது தன்னது, தன்னிலிருந்து வெளிப்படுவது.
து என்பது உடையதாதல் என்பதை உணர்த்துவது,
குழாம் > குழாத்து: குழாமினுடையது.
உடை > உடைத்து : உடையது.
முதல் > முதற்று முதலாக உடையது. முதல் து என்பதே இது.
ஆகவே தத் து என்பது தன்னில் இருப்பது; ஒரு பொருளில் அல்லது உயிரியில் இருந்து வெளிப்படுவது. உயிரி - பிராணி.
தன் > த என்பது கடைக்குறை.
த + து = தத்து > சத்து .
தகரம் சகராமாய்த் திரியும்.
தனி > சனி ( தனித்தன்மை வாய்ந்த கிரகம்)
தம் > சம். தம் என்பது பன்மை; தம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தன்-கள் சேர்ந்தது ஆகும்.
தங்கு > சங்கு ( ஓர் உயிரி தங்கி இருக்கும் கூடு)
இவ்வாறு பல உள.
தத்து சத்து என்பவற்றில் இடை வந்த தகர ஒற்று புணர்ச்சியினால் வந்தது.
அம்மனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் சத்தி அல்லது சக்தி.
அதாவது அம்மன் தன்னிலிருந்து வெளிப்படுவது தன்னதாய்க் காட்டுவதும் ஆகும்.
இவ்வாறு உணர்ந்துகொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக