வடகொரிய அதிபர் கிம்மும் அமெரிக்க அதிபர் திரம்பும் சிங்கப்பூரில் எதிர்கொண்டு தழுவிக்கொண்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. கிம் தாம் அணுவாயுதத் தயாரிப்பிலும் வெடியாய்வுகளிலும் ஈடுபடப்போவதில்லை என்ற உறுதியை அமெரிக்க அதிபருக்கு வழங்கினார் என்றனர். உலகம் மகிழ்வடைந்தது என்று சொல்லத்தேவையில்லை.
இத்தகைய தழுவுதல்கள் பணிவன்பு காரணமான நல்லெண்ணப் பரிமாற்றம் என்னலாமா?
இன்னும் பல உலகத் தலைவர்கள் எதிர்கொள்ளுதலின் போது தழுவிக்கொள்வது இப்போது வெகு இயல்பானதாகிறது.
கைகுலுக்குதலும் வேண்டியாங்கு நடைபெறுகிறது.
தழுவிக்கொள்ளுதலுக்கு மருவுதல் என்றும் தமிழில் இன்னொரு சொல் உள்ளது.
இருகைகளாலும் எதிர்நிற்பவரை மருவிக்கொள்ளுதல்.
மருவியபடி இறுக்கிப் பிடித்துப் பணிவு தெரிவித்துக்கொள்வது "யாத்துக்கொள்ளுதல்" ஆகும். யாத்தல் - கட்டுதல்.
கைகளால் சுற்றிக் கட்டுதல்.
மருவு+ யா+தை.
மரு+ யா + தை.
இங்கு தை என்பது விகுதி. நட > நடத்தை என்பதில்போல.
ருகரமும் யகர வருக்கமும் எதிர்கொள்ளும் புணர்ச்சியில் ரு என்பது ரி என்று திரியும்.
மரு+யா+தை > மரியாதை. பெரு+யாழ்= பேரியாழ் என்பதில்போல.
மருவு என்பதன் அடிச்சொல் மரு. வு என்பது வினைச்சொல்லாக்க விகுதி.
யாத்தல் என்பதில் யா என்பது அடிச்சொல்.
மரியாதை என்பதில் இரு அடிச்சொற்களும் ஒரு விகுதியும் உள.
மரியாதை என்பது சிற்றூர்களிலும் வழங்கும் சொல்.
முன்னர் இதை விரித்ததுண்டு. இங்கு மாற்றம் எதுவும் இல்லை.
அறிந்து மகிழ்க.
குறிப்பு:
பொருள் பதிந்துள்ள சொல் பதி+அம் = பதம் ஆகும். பதி (பதிதல்) என்பதன் ஈற்று இகரம் கெட்டு பத் + அம் என்று நின்று தகரத்தில் அகரமேற பதம் என்றானது. இதில் வியப்பும் இல்லை, விளக்கெண்ணெயும் இல்லை. அறியாருக்கு இரங்குவதன்றி யாது செய்வோம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக