இப்போது தடைக்கல் என்னும் சொற்றொடர்ப் பயன்பாடு மிகுந்து வருகிறது நம்
தமிழில். ஓர் அரசின் அலுவலர் ஒரு திட்டம் தீட்டுகிறார். அது நிறைவேறுவதில் சில சிக்கல்கள் புலனாகின்றன. சுருக்கமாக " அலுவலரின் கனவில் சில தடைக்கற்கள் ஏற்பட்டுவிட்டன" என்று ஒரு தாளிகை எழுதுகின்றது. திட்டம் பெரிதும் எதிர்காலத்தில் நடைபெறுவிக்கவே போடப்படுதலால், அதைக் கனவு என்ற சொல்லால் தாளிகை குறிக்கின்றது. ஏற்பட்ட சிக்கல்கள் தடைக்கற்களாக உருவகம் பெறுகின்றன.உண்மையில் திட்டம் என்பது கனவு அன்று. திட்டம் தாளில் வரைந்து முன்னிடப்படுவது. சிக்கல்களும் கற்கள் அல்ல.
இங்ஙனம் ஒன்றைப் பொருத்தமான இன்னொன்றாக உருவாக்கம் செய்வதே உருவகம் ஆகும். பெரிதும் கவிதைகளிலே இவ்வுருவாக்கங்களைக் காணலாம். இப்போது உரைநடைக்கும் இத்தகைய அழகு ஊட்டப்படுகின்றது. நாளடைவில் மொழியில் பல உருவகங்கள் உண்டாகிவிடுகின்றன.
உருவகங்கள் பல துறைகளில் ஊடுருவியுள்ளன. எடுத்துக்காட்டாக கடவுள் என்பது ஆணுமில்லை; பெண்ணுமில்லை. அதற்குப் பால்காட்டும் தன்மை இல்லை. எனினும் மிகப் பழங்காலந்தொட்டே பல நாட்டுப் பழமதங்களிலும் கடவுள் ஆணாகவும் பெண்ணாகவும் சித்திரப்படுத்தப்ப்டுகிறது. அல்லது சித்தரிக்கப்படுகின்றது.
உருவகமின்றி எம்மொழியும் நிறைவுபெறுவதில்லை. பழைய மொழிகளில்தாம் உருவகங்கள் நிறைந்துள்ளன. சீனமொழியில் " நாய் " என்பது அதிகாரியைக் குறிக்க வழங்கப்படுகிறது. பெரியநாய் என்றால் மேலதிகாரி என்று பொருள்படும். மலாய்மொழியில் "வீடுவாசற்படி" என்று சேர்த்துச்சொல்லும்போது அது குடும்பம் என்ற பொருளை அடைகிறது. "கைகால்" என்ற இரண்டையும் இணைத்துச்சொல்லும்போது அது " அலுவலகப் பணியாளர்கள்" என்று பொருள்படுகிறது. நீங்கள் வாழும் இடத்தில் வாழும் வட்டாரத்தில் உள்ள மொழிகளிடை இத்தகைய தன்மைகள் உள்ளனவா என்று ஆராய்ந்து ஓர் ஆய்வுக்கட்டுரையை நீங்கள் படைக்கலாம். அதன்மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரலாம். ஆங்கிலத்திலும் "கேபினட்" என்ற பெட்டி என்னும் பொருள் அமைச்சரவையைக் குறிக்கிறது. அவர் கேபினட்டில் இருப்பவர் என்றால் மந்திரி யவையில் உள்சுற்றில் இருப்பவர் என்று பொருள். பெட்டிக்குள் இருப்பவர் என்று பொருள் இல்லை. "ஸ்டாஃப்" என்றால் தடி என்றோ குச்சி என்றோ பொருள். ஆனால் அந்த அலுவலகத்தில் நான் ஒரு ஸ்டாஃப் என்றால் நான் ஒரு குச்சி என்பது பொருளன்று. நான் அங்கு ஒரு வேலைஆள் என்பதே பொருள்.
எல்லா மொழிகளிலும் பல சொற்கள் அடிப்படைப் பொருளினின்றும் வேறுபட்டு அர்த்தப்படுத்தப்படுகின்றன.
வாயினின்று வெளிப்படுவதே வார்த்தை. வாய் > வார் > வார்த்தை. வேறு விதமாகவும் காட்டலாம். வாய்> வாய்த்தை > வார்த்தை என அமையும். வாயினின்று வெளிப்படுவது என்னிலும் அது வார்க்கப்பட்டு வழங்கப்படுவதும் ஆகும். இவ்வகையில் அணியியல் பொருண்மையைப் பெறுகிறது. வார்க்கப்பட்டுத் தரப்படுவது வார்த்தை என்று இருபிறப்பி ஆகும்.
அர் என்ற அடிச்சொல் ஒலியைக் குறிப்பது. அரட்டுகிறான் ( மிக்க ஒலி செய்கிறான்); அரற்றுகிறான் ; அர் > அர்ச்சிக்கிறான் ; ஆராதிக்கிறான்; ஆரத்தி எடுக்கிறாள்; ஆலத்தி எடுக்கிறாள், என்றெல்லாம் வழங்கும் சொல் நிலைகளைக் காண்க. அர்த்தம் என்பதன் மூலப்பொருள் ஒலிசெய்தல் என்பதே. ஒரு சொல்லின் பொருள் அதன் ஒலியில் அடங்கியுள்ளபடியால் அர்த்தம் என்ற சொல்லுக்குப் பொருள் என்பது பொருளாயிற்று, ஒலியில் ஒன்றும் பொருள் இல்லை. அது வெறும் ஒலிதான். ஒலிக்குப் பொருள் மொழிமரபினால் ஊட்டப்படுகிறது. ஓரொலியுடையது ஒரு மொழியில் ஒரு பொருளும் இன்னொரு மொழியில் இன்னொரு பொருளும் கொள்வதற்கு இதுவேகாரணமாகும். ஒரு சொல்லும் பொருளை " அருந்துகிறது" அல்லது உள்வாங்குகிறது, அருந்து+அம் = அருத்தம் என, சொல் பொருளை அருந்திச் சுமந்துகொண்டு வாழ்கிறது என்றும் "அருத்தம்" என்ற சொல்லுக்குப் பொருள் அமையும், அல்லது பொருள் அருத்தப்படுகிறது: அருந்தும்படியாக ஆக்கப்படுகிறது எனினும் ஆகும். இவ்வாறு உரைக்கின், அது ஓர் அணியியல் வழக்கு ஆகிவிடும்,
வல்லோனொருவன் எவ்வாறு உரைக்கின்றான் என்பதனோடு பொருந்தியே சொல்லும் பொருளும் அமைகின்றது, அவற்றுள் அணியியற் பொருளை விலக்குதல் ஆகும் காரியமன்று.
தடைக்கல் என்னும் அணிவழக்கு இப்போது தமிழில் வழக்குக்கு வந்துள்ளது இவ்வாறுதான் என்று அறிந்து மகிழ்க.
பிழைகள் காணப்படின் பின் திருத்தம்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக