ஞாயிறு, 24 ஜூன், 2018

சாரளம்> சாளரம்.

சாளரம் என்ற சொல்லை நாம் ஆய்வு செய்வோம்.

புரட்சிக் கவி என்று பாராட்டப்பட்ட பெரும்பாவலரும் பாரதியாரின் சீடருமான பாரதிதாசன் :

"கதவைச் சாத்தடி --- கையில்
காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
கதவைச் சாத்தடி"

என்று தொடங்கும் பாடலை கதைக்கேற்பப் பாடிக்கொடுத்திருந்தார்.

சாத்து என்ற சொல் இலக்கியத்திலும் இடம்பெற்ற சொல்.  தீமைகளைத் தடுக்க அவை வரும்வழிகளைச் சாத்தும் ஒரு தெய்வம் "சாத்தன்"  எனப்பட்டது.  சாத்தன் என்ற இப்பழைய தெய்வம்தான் ஐயப்பன், ஐயனார் என்பர்.  சாத்தன் என்ற சொல் மெருகூட்டப்பெற்று :  சாத்தா > சாஸ்தா என்றுமாகியது.  சாத்தன் என்ற தமிழின் எழுவாய்ச் சொல்லுருவிற்கு சாத்தா என்பது விளிவடிவமாகும்.

"காதலுக்கு வழிவைத்துக் கதவைச் சாத்த,
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்"  என்று

சாத்துதல் என்பதைப் பயன்படுத்தியுமிருந்தார் பாரதிதாசன்.    சாத்துதல் என்ற சொல் இன்றும் வழக்கிலுள்ள தமிழ்ச்சொல் ஆகும்.

இது "சார்> சார்த்து > சாத்து"  என்று பண்டைக்காலத்திலே திரிந்துவிட்டது.  இடைநின்ற ரகர ஒற்று பல சொற்களில் மறைந்துள்ளமையைப் பல இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளோம்.  அவற்றை மறுவாசிப்புச் செய்து மகிழவும்.  வாய்விட்டு ஒன்றைப் படிப்பதுதான் வாய் > வாயிப்பு> வாசிப்பு ஆகும்.
இனி வாசி+அகம் =  வாசகம். உண்மையில் இங்கு அகம் என்று வருவது:  கு+அம் என்ற விகுதிகளுடன் அகரம் புணர்ச்சியில் தோன்றி நின்றதாகும்.  இங்கு அகம் என்றது மனம் அன்று.

வாசி +கு+அம் = வாசி+அ+கு+அம் =  வாசகம்.  இந்த அகரம் இணைப்பில் தோன்றியது.  ஆனால் அகத்துக்குள்ளேயே வாசித்துக்கொள்வது வாசகம் என்று சிலர் சொல்லக்கூடும்.  வாசித்தல் என்பது சில திராவிட மொழிகளில் வாயித்தல் என்றே வழங்கும்.

சாத்து என்ற சொல்லை ஆய்வு செய்யப்புகுந்து பிறவும் கூறினோம். எழுதுவனவற்றை அழிப்போர் நடமாடுவதால் அவ்வப்போது வாய்ப்பு நேர்கையில் பலவும் சொல்வது அவர்களை முறியடிக்க ஓர் உத்தியாகும். அது இனிமேல் வேண்டியாங்கு கடைப்பிடிக்கப்படும்.

இனி சாத்து, சாளரம் என்பவற்றின் தொடர்பு விளக்குவோம்.

சார் > சார்த்து > சாத்து.
சார்> சார்+அள+அம் = சாரளம்  (சாத்தவும் திறக்கவும் பயன்படும் ஒரு சிறு சுவர்க்கதவுடன் கூடிய காற்றதர்.)

இதில் :  சாரளம் என்பது பின் எழுத்து முறைமாற்றத்தால்:  சாளரம் ஆனது.

இப்படி அமைந்த பிற சொற்கள் எடுத்துக்காட்டு:  மருதை> மதுரை; விசிறி>சிவிறி.

பதநிரல்மாற்றுச் சொற்கள்:   வாய்க்கால் > கால்வாய். இங்கு முழுப்பதங்கள் முறைமாறின.

சாளரமென்பது ஓர் அளவுடன் இருக்கவேண்டியது முதன்மையாகும். பண்டைக்காலத்தில் வெளியாட்கள் கதவு சாத்தியிருக்கும்போது சாளரத்தின் வழியாய் உள்ளே குதித்து வருவதைக் கட்டுப்படுத்த ஓர் அளவைக் கடைப்பிடித்தனர் என்பதைச் சொல் நமக்குத் தெரிவிக்கிறது, அளத்தல் - எட்டுதலும் ஆகும்.  அதரடைப்பு எட்டிச் சுவரைத் தொடவேண்டுமே. அதுவும் நன்று.   வெளியாரைத் தடுக்கக் கதவு சாத்திக் காற்றுக்காக பலகணியைத் திறத்தல் இதன் உத்தியாகும்.பலகணி என்ற சொல்லுக்குத் தனி இடுகை உள்ளது. அங்குக் காணலாம்.  பலகண்கள் அல்லது பல துவாரங்கள் உள்ள சாளரம் :  பலகணி.   துவை+ஆர்(தல்)+அம் = துவாரம்.   அம்மி துவைத்தல், அம்மி பொழிதல் எல்லாம் கேள்விப்பட்டதுண்டா? இடித்து உண்டாக்குவது துவாரம். இப்போது இடிக்காமல் குடைந்து உண்டாக்கிய துளையையும் குறிக்கும்.

சாரளம் > சாலகம் > சாலம் என்பன திரிபுகள்.  சார்<> சால்.

சாலேகம் என்பது மற்றோர் சொல்லுரு.   சாலகம் > சாலேகம் (பலகணி).

சாலுதல் என்பது அமைத்தலையும் குறிக்கும்.வீடு என்பதை முதல்முதலாக அமைத்த மனிதன் அதை மரங்களில் மேல் அமைத்தான்.  அப்போது அவனுக்கு வாசல் கதவு எல்லாம் தேவையற்றவை.  ஒரு பரண்போல  அமைத்து அதன்மேல் இருந்துகொண்டான்.  விலங்குகளிடம் இருந்து தப்பவும்  மழை காற்று வெயில் முதலிய இயற்கைத் துன்பங்களிலிருந்து விடுபடவும் அவன் வழி தேடினான்.  பின்னர் காடுகளிலிருந்து விலகி, நிலங்களைச் சமன் செய்து குச்சிகளின்மேல் பரண்போல் மேடையமைத்து அதில் வாழ்ந்தான்,  அப்போது கதவு செய்வது கூரை வேய்வது முதலியவற்றில் பட்டறிவு உடையவனானான். ஆகவே சுவர், கூரை முதலியவை அமைக்க அறிந்துகொண்டான்.  சுவர் என்பது சுற்றி வரும் தடுப்பு.   கூராக மேல் அமைக்கப்பட்டது கூரை.  சு+வர். (சுற்றி வருவது).  கூர்+ஐ = கூரை.  சுற்று, சுழல், சூழ் முதலிய சொற்களின் தொடக்கத்தை நல்லபடியாக சிந்திக்கவும்.  சுற்றுவரு > சுவரு > சுவர்.  அல்லது சுத்துவரு என்று பேச்சுப்படி நோக்கலாம்.  சுவரில் காற்றுக்காக பல கண்களை அமைத்தான்.  வீட்டுக்கு அவை கண்கள். கண்  என்றால் துவாரம்.  பூச்சி கடித்துச் சேலை கண்ணு கண்ணாகப் போய்விட்டது என்பாள் கிழவி.  கண் - சிறு பொத்தல்.  பல கண் உள்ள திறப்பு, பலகண்+இ.= பலகணி.  சுவர் எனபதன் மூல அடிச்சொல் சுல் என்பது ஆகும்.  சுட்டடிச் சொல்.  பலகணிக்கு முந்தியது வாயிலும் கதவும்.  சால்>சார் ( ரகர லகரப் போலி).

இதைச் சார் என்பதிலிருந்து தொடங்கினால் புரிந்துகொள்வது எளிது.  சால் என்பதிலிருந்த்ம் தொடங்கியும் சொல்லலாம்.  பின் பேசி மகிழ்வோம்.

இருக்கும் எழுத்துப்பிழைகளும் பின் எழுதியினால் தோற்றுவிக்கப்படும் auto correct பிழைகளும் சரிசெய்யப்படும். எக்கச்சக்கமான கள்ள மென்பொருள் கலாய்த்துக்கொண்டிருப்பதால் விரைந்து செய்தாலும் பயனில்லை. பொறுமையுடன் வாயிக்கவும்.  வாசிக்கவும்.  யி-சி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை: