இங்கு முதலில் ஆத்தா என்ற சொல்லை ஆய்ந்துகாணுவோம்:
தமிழில் "ஆய்" என்ற ஈரெழுத்துச் சொல் அம்மாவைக் குறிக்கும் இது சிற்றூர்ப் புறங்களில் "ஆயி" என்று நீண்டொலிக்கும். இதன் நீட்சி ஆய் என்பதனுடன் இறுதியில் ஓர் இகரச் சாரியை வந்து சேர்வதால் ஆவது. யகர ஒற்று இல்லாமல் ஆ என்று மட்டும் வந்தால் அது பாலம்மையைக் குறிப்பது என்பது நீங்கள் அறிந்ததே.
தாய் என்ற ஈரெழுத்துச் சொல்லும் அம்மாவைக் குறிப்பதே ஆகும். இதுவும் சிற்றூர்ப் பக்கங்களில் "தாயி" என்று நீண்டொலிப்பதே. இகரச் சாரியை பெற்றது. இது யகர ஒற்று இன்றித் தமிழில் தனிச்சொல்லாய் அமைவதில்லை. எனினும் இணைச்சொற்களில் இறுதியில் நின்று " அம்மா" என்று பொருள்படுவதாகும். எப்படி என்பதைப் பின்னொருநாள் காண்போம்.
ஆய் என்ற சொல், தாய் என்பதனுடன் இணைந்து, ஆய்தாய் அல்லது ஆய்த்தாய் ஆகும். இதுபின் தன் யகர ஒற்றுக்களை இழந்து, ஆத்தா என்று வரும். இருமுறை அம்மை என்று பொருள்தரும் சொல் அடுக்கிவந்தமையானது தமிழர்களிடைத் தாய்க்கு மிகுந்த பணிவன்பைக் குறிக்கவருவது ஆகும்.
இப்படி யகர ஒற்றுக்கள் மறைந்து திரிந்து சொற்கள் அமைவது தமிழில் உண்டா என்று கேட்கலாம். கேட்பவர் முதன்முறையாக இதை எதிர்கொள்பவராயின் அவர் நம் முன்இடுகைகளை நன் கு கவனிக்கவேண்டும். இதன்மூலம் தமிழில் இஃது பெருவழக்கு என்பதை
உணரலாகும். சொல்லி முடித்தவற்றையே மீண்டும் குறிப்பிடுதல் நலமன்று எனினும் சில எடுத்துக்காட்டுகள் இங்கு தரப்படுகின்றன:
வாய்ப்பாடம் சொல்லிக்கொடுப்பவர்:
வாய் + தி = வாய்த்தி > வாத்தியார் ( இது பணிவுப் பன்மை ஆர் விகுதி)
உப அத்தியாயி என்ற சொற்புணர்வில் தோன்றிய உபாத்தி ( உபாத்தியாய) என்ற சொல் வேறு.) முன் இடுகைகள் காண்க.
இன்னொரு சொல்:
வாய் + தி = வாய்ந்தி > வாந்தி.
தின்றது வாய்வழித் திரும்பி வருவது. கக்கல்.
பூந்தி என்ற சொல் பூ + தி என்று புணர்ந்து மெலிந்தது ஆகும். யகர ஒற்று இல்லாததெனினும் வாந்தி என்பதனுடன் எதுகைபோல் அமைந்தது. (பூவைப்போல் பொரிந்து வருவது )
மற்றுமொன்று:
வேய்ந்தன் > வேந்தன். முடி வேய்ந்துகொண்டவன்.
ஆனால் வேயி என்ற பெண்பால் சொல் பல அணிகளும் உடையும் வேய்ந்து கொண்டு அழகு காட்டுபவள் என்றாலும் அதில் யகர ஒற்று மறைதற்கு வழியில்லை. பின் அது வேசி என்று திரிந்தது. யி>சி திரிபு. வழக்கம்போல.
இவை எல்லாம் ஆய்த்தாய் என்பது ஆத்தா என்பதில் யகர ஒற்று வீழ்ந்ததை
உறுதிப்படுத்தும். ஆத்தா என்பது பாட்டியையும் குறிக்க வழங்கக் கூடும்.
இனி மாதா என்ற சொல்லும் இப்படியே அமைந்துள்ளதை அறிந்து மகிழலாம்.
மா என்பது அம்மா என்பதன் இறுதி எழுத்து.
தா என்பது தாய் என்பதன் முதலெழுத்து.
இரண்டையும் சேர்க்க, மா+தா = மாதா ஆயிற்று.
இரண்டடுக்கி வந்து பணிவுமிகுதல் குறித்தது.
ஆத்தா என்பது இறுதி எழுத்துக்களை நீக்கி உருவாக, மாதா என்பது சொற்களின் இறுதி-முதலெழுத்துக்களை இணைத்து அமைந்துள்ளது. அதாவது மாதாவில் அம்மும் யகர ஒற்றும் முறையே வீழ்ந்தன.
புதுச்சொற்களைப் படைக்கக் கையாண்ட உத்திகளை அறிந்து மகிழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக