ஞாயிறு, 17 ஜூன், 2018

பயிற்சியமா அல்லது பரிச்சயமா?


பயிற்சி என்பதனோடு அம் என்ற விகுதியைச் சேர்த்தால் அது பயிற்சியம் என்றாகிவிடுமென்பது உங்களுக்கு எந்தப்  பேராசிரியனும் சொல்லிக்கொடுக்காமலே நன்றாகத் தெரியும்.  அம் விகுதிபெற்ற சொல் அப்படி உருக்கொள்ளுமென்பது சொல்லித் தெரிவதில்லை.  உங்கள் செவிகளே உங்கள் எசமானன் ஆகிவிடும். பேராசிரியனோ என்றால் அவன் அரிதின் முயன்று அறிந்தவற்றை எல்லாம்  அள்ளித்  தந்துவிடமாட்டான்.  வியக்கச் சிறிது சொல்வான்.

ஒரு குரு எல்லாவற்றையும் சீடனுக்கு அள்ளித்தருவதில்லை.

எசமான் என்பதையும் சீடன் என்பதையும் யாம் விளக்கியதுண்டு.  இப்போது அவை ஈண்டில்லை என்பதால் விரைவில் அவற்றையும் இடுகை செய்வோம்.

இனிச் சொல்லாய்வுக்கு வருவோம்.

சொல்லமைப்புகளில் எழுத்து நிரல்மாற்று அமைப்பும் ஒன்று உண்டு.  இதை எழுத்து முறைமாற்று என்றும் கூறுவதுண்டு.  இது எப்படி வருமென்றால் காட்டுதும்.  ு.

விசிறி  >  சிவிறி என்று வரும்.

இச்சொல்லில் விசி என்பது சிவி என்று வந்தது.

சில குழுவினர் நாத்தடுமாற்றத்தில் இப்படிப் பேசி நாளடைவில் நிரல்மாற்றுச் சொற்களும் மொழியி லிடம்பெற்றன என்பதே சரியானதாகும்.

மதுரை என்ற சொல்லும் இப்படி அமைந்ததே என்பதை இப்போது பலர் உணர்ந்துள்ளனர்.

பல மருத நிலத்தூர்கள் சூழ அமைந்த பெருநகரமே மதுரை.

அது மருதை ( மருத நிலம் சூழ் நகர்) என்று அமைந்து பின் மதுரை என்று திரிந்தது என்பதே சரி.  ~ ருதை என்பது ~துரை என்று எழுத்து முறைமாறி அமைந்தது.

விகடகவி என்ற சொல் மட்டும் இருபக்கமும் இருந்து படிக்க நன்றாகவே வரும். இதுபோலும் வேறு சொற்களைக் கண்டுபிடித்துப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.

இனிப் பயிற்சி என்பதோ பயில் என்பதினின்று சி விகுதி பெற்று அமைந்தது.

பயில்+சி =  பயிற்சி.
அம் சேர்க்க:  பயிற்சியம்.
நிரல் மாற்றில்:

பயிற்சி  >  பறிய்ச்சி  ஆகும்.   ற்  என்பது றி ஆனது.  யி என்பது ஒற்று  (ய்)  ஆனது.
சற்று வெளிப்படையாய் அமையாத நிரல்மாற்று.

பறிய்ச்சி என்பதில்  ய் - ச்  என்ற இரண்டு ஒற்றுக்களும் தேவைக்கு அதிகம்.  அவற்றை வெட்டுக.

இப்போது பறிய்ச்சி என்பது பறிச்சி ஆகிறது.

இப்போது பறிச்சி என்பது எதையோ பறிகொடுத்ததுபோல் அமைந்து தொல்லை தருவதால்பறி என்பதை பரி ஆக்கிக்கொள்க.

பரிச்சி என்பதனோடு அம் சேர்க்கப் பரிச்சயம் ஆகிறது.  சி என்பதை ச என்று மாற்றின் இனிதாகும்.  (  இனிதாக்கம் )

இதன் அடிச்சுவடுகளை மறைக்க:

பரி என்பதை முன்னொட்டாக ஆக்கி, சயம் என்பதை நிலைச்சொல் ஆக்கிடுக.

சொற்களை அமைப்பது என்றால் எவனும் உணராவண்ணம் பயன்படுத்தமட்டும் செய்தளிக்கவேண்டும்.

ஒரு சொல்லைப் பயன்படுத்தும் சின்னவனுக்கு அது எப்படி அமைந்தது என்று ஏன் தெரியவேண்டும்!வேண்டாமே.

ஆனால் இவ்வளவு மறைமாற்றுக்கும்  பொருள் மாறவில்லை.  ஒருவன் எதில் பயிற்சி பெறுகிறானோ அதில் அவனுக்குப் பயிற்சியம் > பரிச்சயம் ஏற்படும்.


2 கருத்துகள்:

திரு...... சொன்னது…

பரி, ~ பரிவு, பரிந்து, என தெரிந்த நெருக்கமான, பழக்கமானவர்களுக்கு இடையேயான உணர்வு வினை எனும் நிலையில் பரிச்சயம் என்பது நேரடியாக இத்தொடர்பிலேயே விளக்கி விடலாமே, நிரல் மாற்ற விளக்கம் இதில் தேவையற்றது.

SIVAMALA சொன்னது…

Yes, Mr.
That part of the explanation can be omitted if "pari" is taken as the base. Thank you.