புதன், 4 மே, 2016

Forest meditation காட்டில் இயற்றும் தவம்

அரங்கநாதன் பத்தி (திருவரங்கக் கலம்பகம்)

காயிலை தின்றும் கானில் உறைந்தும் கதிதேடித்
தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள்
தாயினும் அன்பன் பூமகள் நண்பன் தட நாகப்
பாயல் முகுந்தன்  கோயில் அரங்கம் பணிவீரே

இந்தப் பாடல், இறைவனைத் தேடிக் காட்டிற்குச் சென்று காய் இலைகள் முதலியவற்றைத்  தின்றபடி  உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் சாமியார்களை அழைக்கிறது. ஒருவன் காடே வீடாகக் கொண்டு  இறையைக் தேடுவதில்  குற்றமொன்றும் இல்லை. நாட்டினுள்ளே இருந்துகொண்டு பல்வேறு கொள்ளை திருட்டு முதலியவற்றில் ஈடுபட்டுச் செல்வம் தேடி  உயர்வாழ்வை எட்ட நினைக்கும் புன்மை மாந்தனால் மக்கட்கு விளையும் கேடுகள் மிகப்பல. காவலர்களாலும் எங்கும் எல்லா நேரத்திலும் உலவ இயலாது ஆகையால் அவர்கள்  ஓரளவே பயன்படுவர்.

காட்டில் திரிந்து கட்டப்படுதலைக் காட்டிலும்  கோயிலில் சென்று வழிபடுதல் இன்னும் எளிது என்பதால்  இக்கலம்பகமுடையார் திருவரங்கத்துக்கு வந்து வழிபடுக என்றழைக்கின்றார்.  ஞான யோகத்தினும் பத்தி யோகம்  சிறந்த தென்கிறார் . மேலும் கானகத்தில் பூச்சிகள் பாம்புகள் பூரான்கள் முதலியவற்றால் துன்பம் நேரிட வாய்ப்புகள் மிகுதியாகும்.  ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதாய் இருக்கும் ஆதாலால் எது உங்களுக்கு எளிதாய்க் கைவரும் என்பதை நீங்கள்தாம் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்து மதத்தில் வலிமை எதில் உள்ளது என்றால்  வழிபாட்டு முறைகளில்  முழுவதும் உங்கள் விருப்பப்படியே செல்வதற்கு உரிமையும்,  விடப்படுதலும் இருப்பதுதான்.  வீட்டிலிருந்துகொண்டே மனம் நிலை நிறுத்துதலும் (தியானமும்)  இயற்றலாம். தடையேதுமில்லை.

நாதன் உள்ளிருப்பதால் நமக்கு அச்சமென்பதில்லை.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுத்திவந்து மொணமொணன்னு சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டிச் சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்கிறார் சிவவாக்கியர்.   ஒரு ஞானியாவான் கிரியை  ( பல்வேறு  சடங்குகள் ) விலக்கிக் கொள்ளலாம். முற்றும் உணர்ந்த நிலையில் அவனுக்கு நட்டகல்லு எது?  அவன் மனமே!   அவன் சாத்தும்  நாலு பூக்கள் எவை?  அவன் மனமே!  அவன் அறியும் மந்திரங்கள் எவை?  அவன் மனமே!  நாதனே நாதமாய் உள்ளிருக்கிறான். மனமே சட்டுவமாகிவிடில்  கறிச்சுவை அறியலாகும் என்பது கருத்து.

 cannot edit now. editor hangs. will edit later.



கருத்துகள் இல்லை: