வியாழன், 19 மே, 2016

சில் என்ற அடிச்சொல்


சில் என்ற அடிச்சொல் தமிழில் இன்னும் அறியக்கூடிய வகையில் இருக்கின்றது.

ஒரு கல்லை உடைக்கும்போது அதிலிருந்து ஒரு துண்டு பறந்துவந்து விழுந்தால்  ஒரு சில் வந்து விழுந்தது என்போம்..  இந்தச் சொல் இன்னும் வழக்கிலுள்ளது.

சில் என்பதிலிருந்து சிலாம்பு என்பது அமைகிறது.  இது சில்+ பு என்ற பகுதி  விகுதிக்கிடையில் ஆம் (அம்)   என்ற இடையீடு பெற்றது.

சில்> சில்+ ஆ,ம்+ பு =  சிலாம்பு.  

இது மீன் செதிளையும்  மரப்பொருக்கையும் குறித்தது.

இது சில் > சிலுக்கு  என்று  கு விகுதி பெற்றும் வரும். இடையில் ஒரு உகரச் சாரியை வந்தது.  மரப் பொருக்கையும்  அறுக்கும் வாளின் பல்லையும்  குறிக்கும்.    வேறு பொருள்களும் உள.

சில் > சிலும்பு என்றுமாகும். மரச் சிராம்பையும் குறிக்கும்.

சில் >  சில்லம்:    இது துண்டு என்றும் பொருள்படும்.

சில் > சில்லி என்றுமாகும். பொருள் துண்டு. பிற பொருளும் உள,

மரத்தைச் சில்லுகளாக   ( அதாவது மிக மிகச் சிறிய சில்லுகளாக
அரித்தெடுக்கும் கறையானுக்குச்  சில்லான் என்பர்.

சுள்ளான் என்ற மாதிரியில் அமைந்தது சில்லான்.


சில் > சில்லு என்றுமாம்.

சலித்தெடுக்கும்  வலைக்கண்கள் அமைந்த  கருவிக்குச் சில்லியடைஎன்பர். சல்லடை எனவும் படும்.

சில் >  சிலை.   சில்லுச் சில்லாய்   அடித்தெடுத்து   ஓர் உருவில் அமைவது.

சில் > சில்லி > சல்லி   ( உ - அ  திரிபு)     சல்லிக்கல்

செந்தமிழ் இயற்கை சிவணிய  நிலத்து வாழ்நர் இச் சில்  சொல்
மறப்பரோ?

கருத்துகள் இல்லை: