வெள்ளி, 27 மே, 2016

வாடகை வரும்படியும் முகவர்களும்

மலேசியாவில் வீடுகள் வாங்கிப் பலர்  வாடகைக்கு விடுகிறார்கள். இதைப் பற்றிக் கொஞ்சம் உரையாடுவோம்,

இப்போது புதிய மற்றும் பழைய வீடுகள் மிகப்பல வாங்குவதற்குக் கிடைக்கின்றன .  முழுமையான வீட்டின் விலைக்கான தொகையையும் கட்டி வீட்டை வாங்கலாம்,   ஆனால் ஒரு பெருந்தொகை  அதில் போய் அகப்பட்டுக் கொள்ளும்,  அதை விற்று மீண்டும் முதலாக்கும் வரை இந்த நிலை தொடரும்,  இப்படிச் செயல்பட இயலுமா என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து நீங்கள் செய்யத் தக்கது  வீட்டைத் தவணை முறையில் வாங்கலாம், அப்படி வாங்கினால் மாதாமாதம் தவணையைச் செலுத்தவேண்டும்.  உங்கள் மாத வருமானத்திலிருந்து  இதைச் செலுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும்   இதில் கொஞ்சம்  இடிக்கிறது  என்றால் அல்லது வேறு காரணங்கள் இருந்தால்  வாங்கின வீட்டை வாடகைக்கு  விட்டுவிடலாம்.

இங்குதான் பிரச்சினை தோன்றுகிறது.  பிற -  மற்ற,  சினை = உறுப்பு  அல்லது  காரணங்கள்.  பிற என்பது பின் பிர  என்று  மாறிவிட்டது. 

வீட்டில் குடியிருக்கும் கூட்டம் வீட்டைச் சின்னாபின்ன மாக்கிவிடுகிறது.   வீட்டுக் கம்பிகளைப் பேர்த்து எடுத்து விற்றுவிடுகிறார்கள்.  தரை ஓடுகளை உடைத்துவிடுகிறார்கள் ,  மின் கம்பிகளைச் சுவருக்குள் இருந்து வெளியில் இழுத்துத்  தொங்க விடுகிறார்கள்.  பின் வேலிகளை அகற்றிவிடுகிறார்கள்.   நீங்கள் நினைக்காதவை எல்லாம் செய்து விடுவார்கள்.  ஆக மொத்தத்தில்  வீட்டை வாங்கியதற்குத் தண்டனை கிடைத்தது போலத்தான்,  வந்த வாடகை  பத்தாயிரம் என்றால் இப்போது வீட்டைப் புதுப்பிக்க  ஓர் இலட்சம் செலவு செய்ய வேண்டும். புதிய வீடு ஓட்டை வீடாகி விடுகிறது . கதவுகளில் ஒரு  புட்டுக் கூட உடைபடாமல் இருக்காது.  சாவியை எங்கேயோ விட்டுவிட்டேனே  கதவை உடை.கண்ணாடியை  நொறுக்கி உள்ளே போ என்றபடி செயல் படுவர்/

மூன்று மாதமோ நான்கு மாதமோ வாடகைப் பாக்கி வைத்துவிட்டு ஓடிவிடுவார்கள்.  வீட்டின் சாவி உங்களிடம் இருந்தால் மீண்டும் உள்ளே புக அது பயன்படலாம்.  அவர்களை மேற்பார்ப்பது உங்கள் 24 மணி நேர வேலையாய் இருந்தால்  ஒருவேளை தப்பிக்கலாம்.  ஒரே தேதியில் வாடகை  வந்து சேராது.  இடையில் ஓரிரு மாதங்கள் இடைவெளியை ஏற்படுத்துவார்கள். 

மகிழுந்துகள் வைத்திருப்பார்கள். புதிதாக வாங்கி ஓட்டிவிட்டு  அதற்கும் காசு கட்டாமல் அந்த வண்டி நிறுவனம் வந்து இழுத்துக் கொண்டுபோய்விட்டால் இன்னொன்று  வாங்குவர் . அப்புறம் அதற்கும் அதே கதிதான்.

அப்புறம் முகவர்களைப் பற்றிப் பார்க்கலாம்.






கருத்துகள் இல்லை: