முகமிகத் திரைந்து முடிநரை மிகுந்த
அகவையிற் பெரியோர் அமர்ந்திளைப் பாற
நகுதரு சொற்களில் உரைதர மகிழ,
மிகுவல இரும்பில் இருக்கைகள் காண்க.
அடுக்கு மாடி வீட்டின தொகுதிகள்
அடித்தள வெற்றிடம் அனைத்திலும் உளவாம்
மடக்கியும் கால்களை மடித்திரு கைகளைத்
துடிப்புறு சிறுபயிற் சிகளும் பெறுவரே.
காரை வடிப்பில் காண்பன பலவாம்
ஓரும் மரப்பல கையிலும் நிலையல்
சீருடன் திகழும் சிங்கை நகர்தனில்
யாரும் மகிழ வசதிகள் பலவே.
அருஞ்சொற்பொருள்
மிகுவல(ம்) - மிகுந்த பலமுடைய
வீட்டின தொகுதிகள் - வீடுகளையுடைய தொகுதிகள்.
காரை - சிமென்ட்.
வடிப்பில் -- வடித்தலில் ( செய்யப்படுவதைக் குறிக்கும்)
நிலையல் - இருக்கும்
மெய்யெழுத்தெல்லாம் புள்ளியொடு நிலையல் என்ற தொடரில்
நிலையல் என்ற சொற்பயன்பாட்டினை அறிக.
கண்டு மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக