சனி, 5 பிப்ரவரி, 2022

ஷோக்கு, சோக்கு என்ற சொற்கள்.

ஷோக் அல்லது ஷோக்கு என்ற சொல் உருது மொழிச்சொல் என்று நினைத்தனர். அவ்வாறே அது இருக்கலாம்.  ஒரு சொல் உருதுச் சொல்லாக இருந்தால் என்ன, அல்லது இன்னொரு மொழியின் சொல்லாயின் என்ன? எந்த மொழியாகவும் இருக்கலாம்.

பக்கத்தில் வாழ்வோர் பேசும் மொழியில் நம் மொழியில் உள்ளதுபோலவே ஒலிக்கும் ஒரு சொல்லிருந்து,  இரண்டிலும் ஓரளவு பொருள் அணிமை இருந்துவிட்டால்,  சிலவேளைகளில குழப்பம் ஏற்படலாம். இது தமிழ் அல்லது இது உருது என்று வாக்குவாதமும் ஏற்படக்கூடும்.  இவைபோல்வன, ஏறத்தாழ ஒரே சொற்களாகவோ வெவ்வேறு சொற்களாக இருக்கலாம்.  ஆய்ந்து காணுதலே சிறிது ஒளிதரும் செயலாகும். 

ஆய்வின் முன்:

ஷோக்கு அல்லது ஷோக் என்பது உருதுவாக இருக்கலாம்.  இது ஆடம்பரம் செய்தல் என்று பொருள்தரும் என்பர்.  இது உருதுவில் எப்படி வந்ததென்பது தெரியவில்லை.  "காட்டிக்கொள்ளுதல் " எனற்பால பொருள்தரும் "show" என்பதன் திரிபாக இருக்கலாம்.  திரிபுகள் முதல்வடிவத்திலிருந்து சற்றே வேறுபட்டுமிருக்கலாம்.

ஆய்வு

Show என்ற ஆங்கிலச் சொல்லும்,  கு என்ற தமிழ் உருபும் இணைந்து, " ஷோவுக்கு"ப் பண்ணுகிறான் என்ற கலவையானது,   ஒரு சொன்னீர்மை அடைந்து  " ஷோக்கு" என்று வந்தது என்றே எம் ஆய்வில் தெரிகிறது. உருது மொழிக்கு இது சென்றேறிற்று என்பதே பொருந்துவது.

ஷோ > ஷோவுக்கு>  ஷோக்கு.   [ கலவைச்சொல்: "வு" இடைக்குறை]

முடிவு: இது கலவைச்சொல். (hybrid word).

இது வேறு சொல்:  சோக்கு.

சொக்குதல் என்ற வினை,  காதலினால் மயங்குதல் என்று பொருள்தருவது.  இதிலிருந்து சொக்கன் என்ற சொல்லும் வந்துள்ளது.  சொக்கத்தாண்டவம்,  சொக்கன்சம்பா,  சொக்குப்பொடி என்றெல்லாம் சொல்பயன்பாடுகள் தமிழ்நாட்டில் உள்ளபடியால், சொக்கு > சொக்கன் என்ற சொல் வடிவம் தமிழினது என்று முடிபுசெய்யலாம். சொக்கத்தங்கம், சொக்கப்பனை  என்ற சொற்புழக்கத்தால்  சொக்கம் என்பது செம்மையும் குறிக்கக்கூடும்.  செம் என்ற செம்மை குறிக்கும் சொல், சொம் என்றும் திரியும். சொம்> சொக்கு> சொக்கம் என்று வரும்.  சொம்> சோம்> சோமன் என்பன காண்க.  செம் என்பதனடி வந்த செம்பு என்பதைச் சொம்பு என்பதும் உண்டு. சொம்பு என்பது அழகு என்றும் பொருள்தருவது.

சொ என்பது செ, செம் என்பவற்றின் திரிபு எனக்கொண்டு, அழகு என்றால், சொக்குதல் என்பது அழகிய பொன்னிறம் கண்டு மயங்குதல் என்பது பொருத்தமாகிறது.  சொக்குதல் என்பது மயங்குதல், நிறத்தழகால் மயங்குதல் என்று பொருள்விரிய இயலுகின்றது.  ஆகவே செம்மை, சிவப்பு, சொ> சொக்கம் என்பவை தொடர்புடையவை ஆகும்.

இவற்றை இங்கு தொட்டுச்செல்கிறோம். யாம் நோக்க விழைந்தது சோக்கு என்பதே. சொக்குதல் வினை, முதனிலை நீண்டு, சோக்கு என்று திரியும்.  இது படு > பாடு ( படு> பாடு)  என்பது போல்வதே ஆகும்.  ஆகவே சோக்கு என்பது முதனிலைத் திரிபுத் தொழிற்பெயராக,  காதல்மயக்கினைக் குறிக்கும் என்பது காண்க.

CONCLUSION

Our research shows that "ஷோக்கு"  comes from  show+கு  >  ஷோக்கு and therefore is a hybrid word. It also shows the other word சோக்கு is a noun that emanates from சொக்கு.(தல்).  Thus சொக்கு> சோக்கு  is formed from the verb and is "முதனிலை திரிந்த தொழிற்பெயர்". These words are  homonyms. At the end of this research we have reached a conclusion and we are now certain.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: