ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

சமத்கிருதம் பரப்பியவன் தமிழன்.

 மொழிகளை ஆய்வு செய்தவர்களும் செய்கின்ற பலரும்  சமத்கிருதத்தை இந்தோ ஐரோப்பிய மொழி என்று நினைக்கிறார்கள்.  அப்படி அவர்கள் நினைக்கக் காரணம்,  வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டகாலத்தில் அவர்கள் வெளியிட்ட "ஆரியர்கள் இந்தியாவைப் போரிட்டு வென்று குடியேறினமை" பற்றிய தெரிவியலும்"  ( theory) "இந்தியாவுக்கு ஆரியர் புலம்பெயர்வு" பற்றிய தெரிவியலும் ஆகும்.  இவையெல்லாம் அவர்கள் புனைந்துரையாக வழங்கிய , எண்பிக்கப்படாத தெரிவியல்கள் ஆகும்.  இப்போதுள்ள கருத்துகளின்படி ஆரிய என்ற சொல்,  ஓர் இனத்தைக் குறிக்கவில்லை.  இட்லர் முதலியவர்கள் வாழ்ந்த காலத்தில் அப்படி ஓர் இனம் இருந்ததாகக் கருதப்பட்டது. இந்தத் தவறான தெரிவியலாலும் "புரிதலாலும் " இட்லர் பல யூதர்களைக் கொன்றுவிட்டார் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவதுண்டு.

இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து தங்களின் ஆட்சி விலகிடாத நிலை உறுதிப்படவேண்டும் என்பதற்காகவே இந்தத் தெரிவியல்கள் வெளியிடப்பட்டன. இன்னொரு காரணம் என்னவெனில்,  ஐரோப்பியர்களுக்கு ஒரு வரலாற்றுத் தொன்மை தேவைப்பட்டது. அதைச் சீனாவினோடு தொடர்புபடுத்திப் பழமையை மெய்ப்பிப்பது கடினம் என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர்.  ஐரோப்பிய மக்களின் மொழிகள் சீனமொழி மற்றும் கிளைமொழிகளோடு ஒத்துப்போகும் தன்மை உடையவாய் இல்லை.  பழம்பெரும் நாகரிகங்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவுடன் ஓரளவு தொடர்பு புனைவிக்க, ஐரோப்பிய மொழிகட்கு இணக்கம் கற்பிக்க வழி இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். சமத்கிருதம் பல சொற்களில் ஐரோப்பியச் சொற்களுடன் இணக்கம் காட்டினமையால், அதை இந்தோ ஐரோப்பிய மொழி என்றனர்.  அம்மொழிக்கு இந்தோ என்ற  அடைமொழி இன்றி, முற்றிலும் சமத்கிருதம் ஓர் ஐரோப்பியமொழி என்று கூற அவர்களாலும் இயலவில்லை.  ஆதாலால் அது ஐரோப்பாவிலிருந்து வந்தது என்று புனைய இயலாமல்,  ஆசியாவிற்கும் ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட ஓரிடத்திலிருந்து வந்ததாகக் கூறிக்கொண்டனர்.

ஆரியர் வந்தனர் என்ற புனைவினால்,  முன்னும் நாங்களே வந்தோம், கலைகளைத் தந்தோம், இப்போதும் நாங்களே வந்தோம்  என்று கூறினர்.  இந்தியாவிலிருந்த அறிஞர்களும் புலவர்களும் இக்கருத்தினை ஏற்றுக்கொண்டனர். ஆட்சியாளர்களை எப்படி எதிர்ப்பது என்பது காரணமாக இருக்கலாம். சமத்கிருதத்தில் காணப்பட்ட சொற்கள் பல,  தத்தம் மொழிகளிலும் இருந்தனவாதலால்,  தமிழரும் பிறரும் இச்சொற்களை அயலிலிருந்து வந்தவை என்று கருதி வெறுக்கலாயினர். இதில் அதிக வெறிப்பினைக் காட்டியவர் தமிழராவர்.

கல்தோன்றி மண்தோன்றா முன் தோன்றிய  மூத்த குடியினரான தமிழர்க்கு, இந்தச் சமத்கிருதச் சொற்கள், தங்கள் மொழியை மாசுபடுத்தின  என்ற  கருத்து விளைந்தது.  அதனால் அவற்றை விலக்கிட,  தனித்தமிழ் வேண்டும் என்ற கருத்தும் ஏற்பட்டது.

மறைமலையடிகள் தனித்தமிழை விரும்பிக் கடைப்பிடிக்கக் காரணம்,  சமத்கிருதமென்பது கலவாத தமிழ் இனிமையாக இருந்தது என்பதே . இன்னொரு காரணம்,  சமத்கிருதத்தால், பண்டைத் தமிழ்ச் சொற்கள் பல வழக்கொழிந்தன என்பதும் இவ்வாறு நேர்ந்தால் சங்க இலக்கியங்கள் முதலியவற்றை கற்றறிய இயலாமற் போய்விடும் என்ற அச்சமுமே ஆகும். தம் மகளுடன் இதுபற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் நேருமுன்,  அடிகள் சமத்கிருதம் கலந்த தமிழே எழுதிவந்தார்.


ஆரியர் என்பது ஓர் இனத்தைக் குறிப்பதன்று.  ஆரிய என்ற சொல்,  அறிவாளிகள்,  நல்லவர்கள் என்ற கருத்திலே பழைய இந்திய இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் வெள்ளைக்காரனுக்கு இச்சொல்லின் மூலம் எது என்று தெரியவில்லை.  ஆரியர் என்றால் மரியாதைக்குரியோர் என்பதுமட்டும் தெரிந்தது.  இந்தப் பணிவு மரியாதை எல்லாவற்றையும் ஆர் என்ற தமிழ் விகுதியே காட்டியது.  வந்தார், கண்டார், சென்றார் என்று தமிழில் வழக்கும் சொல்லும் உள்ளது.  ஆர்தல் என்ற வினைச்சொல்லும் தமிழிலேதான் உள்ளது.  ஆதலின் சமத்கிருதத்தில் நாம் காணும் ஆரிய என்பது தமிழ்ச்சொல்லே ஆகும்.  இதில் எந்த ஐயமும் இல்லை. இதை யாம் முன்னரே எழுதியுள்ளோம்.

தமிழை நோக்க,  சமத்கிருதமென்பது பெரிதும் திரிசொற்களால் இயன்ற மொழியெ ஆகும்.  தமிழின் திரிசொற்களும், இந்தியத் துணைக்கண்டத்தில் வந்து வழங்கிய அயற்சொற்களும் கலவையாக எழுந்த மொழியே சமத்கிருதமென்பது. ஆனால் சமத்கிருதத்தை நோக்கி, தமிழானது  பிற்பட்டமொழி என்று கருதியவர்களும் இருந்தனர். அயற்சொற்களைச் சமத்கிருதம் ஏற்றுக்கொண்டமையே இதற்குக் காரணம்.  பண்டைத் தமிழில்,  அயல் ஒலிகளை வடவொலிகள்  ( வடவெழுத்து) என்று வகைப்படுத்தி   அவற்றை விலக்கினால் அது தமிழாகிவிடும் என்று தொல்காப்பியனார் சூத்திரம் செய்தார். அப்படியானால் தமிழுக்கும் சமத்கிருதத்துக்கும் உள்ள வேற்றுமை,  அக்காலத்தில் (தொல்காப்பியர் காலத்தில் )  அவ்வளவே (ஓலி அளவே)   இருந்தது. எடுத்துக்காட்டு: குஷ்டம் என்பதை குட்டம் என்று மாற்றிவிட்டால் அது தமிழ்.  குட்டம் என்பதை குஷ்டம் என்றால் அது சமத்கிருதம்.  தொல்காப்பியர் ஒலி (வேறுபாடுதான்) அப்போதிருந்த மொழி வேறுபாடு என்று கூறுகிறார் என்பது தெளிவு.  குட்டம் என்ற சொல்லோ,  நோயினால் உருக்குலைந்து கைகால்கள் குட்டையாகிவிடுவதைக் கொண்டு ஏற்பட்ட பெயர்தான் என்பதைத் தொல்காப்பியர் தந்த உணர்நெறி, தெளிவுபடுத்துகிறது. இந்நோய் தமிழிலும் சமத்கிருதத்திலும் ஒரே சொல்லால் குறிக்கப்பட்டது. இருமொழிகளும் தமிழ்நாட்டிலும் அதற்கயலான நிலப்பகுதிகளிலும் வழங்கினமைதான் காரணம். குட்டம் என்ற சொல் வழங்கிய இடத்தில் இருமொழிகளும் இருந்தன.  ஒன்று மக்கள் மொழியாகவும் இன்னொன்று இறைவணக்க மொழியாகவும் இருந்தன. ஒரே ஆசிரியன், தமிழிலும் நூல்வரைந்து,  சமத்கிருததிலும் ( சிலவேளைகளில் வேறு  ஆக்கியோன்பெயரில்  வெளியிட்டதும் காரணமாகும். பூசாரிகள் கோவிலில் சமத்கிருதத்தில் பாடிவிட்டு வீட்டுக்கு வந்து அதே சொற்றொகுதியைப் பயன்படுத்தியமையும் காரணமாகும்.

நாம் தமிழ் முன்னது என்பதற்குக் காரணம் : தமிழ் இல்லத்தில் எழுந்த மொழி. பின் அரச மொழியானது.  மதங்கள் கடவுட்கொள்கைகள் மனிதன் நாகரிகம் அடைந்தபின் உருவாகும் தன்மையன ஆகும். ஆகவே சாமிகும்பிடும் மொழி,  நல்ல சோறும் நீரும் கிடைத்தபின் ஏற்படுவது. இதுவே மனிதவரலாற்றுக் கருத்தாகும்.   அதனால் தமிழ் முன்மொழி என்கின்றோம்.  கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தில் கடவுட் கொள்கைகள் தோன்றுதல் அரிதாகும். பிணங்களுடன் தொடர்புடையவர்கள் தோன்றி, பின் அவர்கள் நெஞ்சில் சிந்தனைகள் தோன்றி, அச்சிந்ததைகளைக் கூறும் சொற்கள் தோன்றி அப்புறம் அதற்கொரு மொழி தோன்றும் என்பதறிக.

வடம் என்றால் மரத்தடியைக் குறிக்கிறது. வடசொல் என்றால் மரத்தடியில்  பேசிய சொற்கள்.  மரத்திலிருந்து அறுக்கப்பட்ட பலகைகளில் வீட்டுக்கு வெளியில் அமர்ந்துகொண்டு சாமி கும்பிட்ட மொழிதான் வடமொழி --- பின் சமத்கிருதம் எனப்பட்டது.

தமிழ் என்பது தம்+இல் என்று பிரித்து, தம் இல்லமொழி என்று பொருள் கூறினர்,  கமில்சுவலபெல் என்ற செக் நாட்டுத் தமிழறிஞரும்  தேவநேயப் பாவாணரும்.  தமிழ் என்பதில் வரும் இழ் என்பது உண்மையில் இல் - (வீடு) என்பதுதான் இவர்களின் கருத்து. இதை யாம் கூறவில்லை. இவர்கள் கூறுவது உண்மையாகவிருக்கலாம்.  

சமத்கிருதம் என்ற மொழியை முன் பயன்படுத்தியவர்கள்,  நான்கு நிலங்கள் என்ற வரையறைக்குள் அடங்கிவிடாமல் பரந்துபட்டு வாழ்ந்து பல நிலவகைகளிலும் திரிந்துகொண்டிருந்த பரையர் எனப்படுவோரே.  அவர்கள் அதில் வல்லவராயிருந்தனர். சமத்கிருதத்தில் முதல் பாவலர், வால்மிகி முனிவர், இவர்களுள் ஒருவரே.  சமத்கிருதத்துக்கு இலக்கணம் இயற்றியவர், பாணினி.  இவர் ஒரு பாணர்.  பாணர்கள் குலோத்துங்க சோழன் காலம்வரை அரசுகளாக இருந்துள்ளனர்.  அதன் பின்னும் இருக்கலாம். வரலாற்று நூல்களைக் காண்க.  பாலாற்றுக்கு வடக்கே புங்கனூரிலிருந்து காளத்தி வரையுள்ள நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆண்டு வந்தவர் பாணர் எனப்பட்டனர். அவர்கள் ஆண்ட நாடு பாணப்பாடி என்று வரலாற்றாய்வறிஞர் கூறுவர். அரசிழந்தோருள் பாணர் குடியினரும் அடங்குவர். இவர்கள் மரபில் தோன்றியோனே பாணினி என்ற சமத்கிருத இலக்கணியன். ஆனால் காலத்தால் முற்பட்டவன். பாண்+இன்+இ : பாணினி.  வில்மீன்கொடி என்னும் நம் நண்பர் பாணர்பற்றிப் பல எழுதியுள்ளார்.  அவற்றையும் படித்து அறிந்துகொள்ளுங்கள்.  வியாசன் என்போன் மீனவன்.  பாரதம் எழுதினான். பரதவர் என்ற தமிழ்ச்சொல் மீனவர் என்று பொருள்படும்.  பாரதம் என்பது மீன ஆட்சிக்காலத்துக் காட்சிகளை முன்வைக்கும் இலக்கியம். இதன்மூலம் யாம் கூறுவது யாதென்றால்,  சமத்கிருதம் என்பது இந்திய மொழிதான்.  அது இந்தோ ஐரோப்பியமொழி என்பது வெள்ளையர் அதன் தொடர்பை விரும்பிப் புனைவுகள் இயற்றியமையையே காட்டுகிறது. அது, சடாம் உசேன் அணுகுண்டு வைத்திருந்தான் என்ற புளுகு போன்ற ஒன்றே ஆகும்.நீங்கள் எதை நம்புகிறீர்கள்?  அது உங்கள் உரிமை.

இங்கு நாம் சமத்கிருதம் என்று சுட்டும் சொற்கள்,  இந்திய மொழி என்று யாம் சொல்லும் ஒரு மொழியுடனான ஒப்பீடே ஆகும்.  எமக்கு ஆரியர் என்றால் நம் சங்கப் புலவர்களே. அவர்கள்தான் ஆர் விகுதியை அணிந்துகொண்டவர்கள். பின் ஆரியவர்த்தா என்றொரு தேயமும் இந்தியாவில் இருந்தது.  அந்நாட்டு மக்களையும் அவ்வாறு குறிக்கலாம்.  ஆனால் அது பிற்காலத்தது. எல்லாரும் அறிவாளிகளே. சமத்கிருதம் என்பது தமிழுடன் உலவிய ஒரு மொழி.  வெளிநாட்டு மொழியன்று. 

சமத்கிருதம் வெளியார் மொழி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது பரவலாக வாழ்ந்த நானிலங்களில் அவ்வந் நிலங்களுடன் அடங்கிவிடாத மக்களால் ஆளப்பட்ட மொழி.   அவர்கள் பெரும்பாலும் சாவுச்சடங்குகளையும் கையாண்டனர்.  சாத்திரம் ( சாஸ்திரம்) என்ற சொல்லே அவர்களால் ஏற்பட்டதுதான்,  அடிக்கடி பிணங்களைக் கையாள்பவனுக்கே கடவுள் பற்றிய எண்ணங்கள் முகிழ்க்கும். அவனே சாவின் திறத்தை அறிய முற்படுவான். மனிதனுக்கு சாவே இல்லையென்றால் கடவுட் சிந்தனை ஏற்படவழியில்லை.  மதங்கள் பெரும்பாலும் சாவின் பின்னுள்ள நிலையை யாது என்று வினவி எழுந்தவைதாம். இதுவே பிறநாட்டு அறிஞர்களின் கருத்துமாகும். வாழ்க்கை நிலையாமையினால் கடவுள், மதம், வீடுபேறு என்று பலவும் எழுந்தன. இவற்றை எல்லாம் சிந்திக்கவும் அதற்குச் சடங்குகளை ஏற்படுத்தவும் அவற்றுட் பெருந்தொடர்பு உள்ளவனே முனைவான் என்பதையும் அறிக. வால்மிகி என்ற அறிஞரின் எழுச்சி அதையே வலியுறுத்துகிறது. சமத்கிருதத்தின்பால் பரையருக்கிருந்த தொடர்பு பின்னாளில் அறுக்கப்பட்டது.

ஆகவே சமத்கிருதம் இந்திய மொழி என்ற கருத்தில்தான் யாம் ஆய்வு செய்கின்றோம். இன்னும் சொன்னால், சமத்கிருதத்தை எங்கும் தமிழ்மன்னர்களே பரப்பினர். இவர்களில் இராசராச சோழன் அதை தென் கிழக்காசியா முழுமைக்கும் பெரிதும் பரப்பியுள்ளான். தமிழ் மன்னர்களும் அவர்களுடன் பிற மாநிலத்து மன்னர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களில் நாத்திகர் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை.  இக்காலத்து மக்களின் நம்பிக்கைகளிலிருந்து அவர்களின் நம்பிக்கைகள் வேறுபட்டிருக்கலாம். 

தமிழ் மன்னர்கள் இமயம் தொட்டு மீண்டனர் என்று நம் நூல்கள் கூறுகின்றன.  தமிழும் அதன் இலக்கணமும் கடினமானவை ஆனபடியால், சற்று எளிதான சமத்கிருதத்தைத் தமிழர்களே எங்கும் பரப்பினர்.  அதனால் பிறமாநிலங்களின் மொழிகளும் மாறியமைந்தன என்பதே உண்மை. நாடுகளை வென்று ஆங்குக் கிட்டிய செல்வங்களைக் கொள்ளை கொண்டவருள் தமிழ் மன்னர்கள் முன் நிற்கின்றனர் . இவர்கள் மொழியில்தான் புறப்பொருள் என்ற போர்பற்றிய தத்துவங்கள் உள்ளன. தமிழன் அக்காலத்தில் நாடு பிடிக்கும் ஆசை கொண்டவனாயிருந்தான். கலிங்கத்து பரணி போலும் நூல்கள் பிறமொழிகளில் காணப்படுகின்றன என்றால் அவற்றை ஆய்ந்து சொல்லுங்கள். கேட்போம். வீரகாவியம் எழுவதென்றால் அடுத்தவன் நாட்டைக் கொள்ளையடிக்காமல் முடியாது. அந்தக்காலத்தில் செல்வம் திரட்ட அதுவே முதல்வழியாய் இருந்தது.

இமயவரம்பன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டவன் தமிழன்.

இவனே பரப்பினான். இவனே வேண்டாமென்பதா?

கால் முன்னே சென்று மற்றவனை இடித்தால் அது உதை. சூரியன் முன்னே கிளம்பினால் அதை உதையம் > ( ஐகாரம் குறுகி) - உதயம்.  உகரம் என்ற சுட்டடிச் சொல்லல்லவா இது?  முன்மை குறிப்பதல்லவா இது?   தொடர்பை எப்படி மறுப்பது? இரண்டும் பழங்காலத்துச் சொற்கள். இந்தமாதிரி எத்தனை?  ஒரே மூலத்திலிருந்து கிளம்புகின்ற சொற்கள்?  இவற்றையெல்லாம் ஆரியன் கீரியன் எவனும் ஏற்படுத்தவில்லை. இவனே பரப்பிய மொழிதான் சமத்கிருதம்.  சம - சமமான  கது அம் - ஓசை. கது என்பது கத்து என்பதன் இடைக்குறை. கத்து - ஒலி.  அமை> சமை > சம   > சமம். தமிழன் தான் தன்மொழிக்குச் சமமாக இன்னொன்றை உண்டாக்கினான்.  சீனன் உண்டாக்கியிருக்கமாட்டான்!

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

[   சிலர் நாம் எழுதுவதைப் பார்த்துவிட்டு அதற்கு எதிர்வினைபோல் அதே பொருளுக்கு வேறு விளக்கம் எழுதுகின்றனர்.  ஆனால் வெளியிட்ட திகதியை முன்னாக்கி,  நம் இடுகையைப் பார்த்திராததுபோல் நடித்துக்கொண்டு எழுதுவதும் தெரிகிறது.  ஏன் அப்படிச் செய்கின்றனர் என்று தெரியவில்லை. நாம் பிறர் சொல்வதற்கு மாற்றுக்கருத்து ஏதும் எழுதுவதில்லை.  பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதில் எமக்கு ஒன்றும் அக்கறை இல்லை. சமகாலத்தவர் கருத்துகளுக்கு ப்  பதில் எழுதுவதில் எமக்கு ஆர்வம் இல்லை.  எழுதுவதற்கு இவர்களுக்கு எதுவும் தலைப்புக் கிடைக்கவில்லை போலும் ]  

கருத்துகள் இல்லை: